சினிமா
தொடர்கள்
Published:Updated:

உயிர்பெறும் தமிழக கால்பந்து!

உயிர்பெறும் தமிழக கால்பந்து!
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர்பெறும் தமிழக கால்பந்து!

படங்கள்: சந்தீப்

நேரு ஸ்டேடியத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ரசிகர் கூட்டம் உள்ளே நுழைகிறது. டிரம்களின் சத்தம் அரங்கத்தை அதிரவைக்க, களத்தில் கொண்டாடிக் கொண்டிருந்த YMSC வீரர்களைத் தங்கள் தோள்களில் சுமக்கத் தொடங்குகின்றனர் அவர்கள். 4 ஆண்டுகளாக அவர்கள் காத்துக்கொண்டிருந்தது, அந்த வீரர்கள் காத்துக் கொண்டிருந்தது, நேரு ஸ்டேடியம் காத்துக்கொண்டிருந்தது எல்லாமே இதற்காகத்தான் - தமிழகக் கால்பந்து உயிர்பெறும் அந்தத் தருணத்திற்காக!

கால்பந்தைக் காணாமல் வறண்டு கிடந்த சென்னைக்குப் புதுரத்தம் பாய்ச்சியிருக்கிறது போர்க்களம் கால்பந்துத் தொடர். கால்பந்து அசோசியேஷன்களே கடந்த 4 ஆண்டுகளாக எந்த முனைப்பும் காட்டாமல் இருந்த நிலையில், 13 இளைஞர்களோடு தொடங்கிய ‘ஃபுட்பால் மக்கா’ என்ற குழு ஒரு கால்பந்துத் தொடரை அமர்க்களமாக நடத்தி முடித்திருக்கிறது.

உயிர்பெறும் தமிழக கால்பந்து!

சென்னை ஃபுட்பால் லீக், தமிழகக் கால்பந்தின் உயிர்நாடியாக இருந்த தொடர். சென்னைக் கால்பந்து சங்கம், தமிழ்நாடு கால்பந்து சங்கம் ஆகிய இரண்டு போர்டுகளுக்குமான ஈகோ யுத்தத்தால், கடந்த 3 ஆண்டுகளாக அந்தத் தொடர் நடக்கவில்லை. இதனால், வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் எனப் பலரும் பெரிதாக பாதிக்கப்பட்ட சூழ்நிலையில்தான் போர்க்களம் நிகழ்ந்திருக்கிறது.

தேசிய அளவிலான போட்டிகளில் பணியாற்றிய நடுவர்கள், தமிழ் வர்ணனையோடு யூ டியூபில் போட்டிகள் நேரலை, சமூக வலைதளங்களில் உடனடி அப்டேட், ஒவ்வொரு போட்டிக்கும் பின்பான பரிசளிப்பு என ஒரு தொழில்முறைத் தொடர் எப்படி நடக்குமோ அதேபோல் இந்தத் தொடரை நடத்தியிருக்கிறது ஃபுட்பால் மக்கா குழு. தொடர் தொடங்கியபோது பதிமூன்று பேர் இந்தத் தொடருக்கு வேலை செய்துகொண்டிருந்தார்கள். இறுதிப் போட்டியின்போது களத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை 100!

கால்பந்தை நேசிக்கும் பெர்னாட், ஹாரிசன் என்ற இரு இளைஞர்கள் உருவாக்கிய குழுதான் ‘ஃபுட்பால் மக்கா.’ சிறிதாக டர்ஃபில் ஒரு தொடர் நடத்தத்தொடங்கியவர்கள், தங்கள் யூடியூப் சேனலில் அதை ஒளிபரப்பத் தொடங்கினார்கள். அதற்கான வரவேற்பு அவர்களை அடுத்தடுத்த கட்டத்திற்கு நடத்தியது. முதல் முறையாகத் தமிழ்நாடு வுமன்ஸ் லீக் கால்பந்துத் தொடரின் இந்த சீசன் போட்டிகள் யூடியூபில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன. அதற்குப் பின்னால் இருந்தது இந்தக் குழுதான்.

“கல்யாணத்துக்கு அப்றம் ஃபுட்பால் பாக்குறது, விளையாட்றதுனு எல்லாமே குறைஞ்சிடிச்சு. அதனால பார்ட் டைமா 'Watch Along' மாதிரி பண்ணலாம்னு முடிவு பண்ணினோம். அது என்னன்னா, ஜாலியா கமென்டரி பண்ணிட்டு ஒரு குரூப்பா மேட்ச் பாக்குறது. மேட்ச் பாத்த மாதிரியும் இருக்கும், வீட்ல திட்டு வாங்காத மாதிரியும் இருக்கும்னு நினைச்சோம். அப்படி ஆரம்பிச்சது, இப்போ பெரிசா வளர்ந்திருக்கு’’ என்று ஃபுட்பால் மக்கா தோன்றிய காரணத்தை ஜாலியாகச் சொல்கிறார் பெர்னாட்.

உயிர்பெறும் தமிழக கால்பந்து!

வாரம் முழுக்க தங்கள் வேலையில் கவனம் செலுத்துபவர்கள், வார இறுதிநாள்களை இந்தத் தொடருக்காகச் செலவழித்தனர். அணிகளை ஒருங்கிணைப்பது, புகைப்படம்/வீடியோ எடுப்பது, சமூக வலைதளம், வர்ணனை போன்றவற்றைப் பார்த்துக்கொள்வது என வீரர்களுக்கு மத்தியில் ஓடும் ரெஃப்ரியைப் போல் ஓடிக்கொண்டே இருந்தனர். எல்லாம் கால்பந்தின் மீதான காதலுக்காக!

‘‘ `நீங்களே ஏன் ஒரு மேட்ச் நடத்தக் கூடாது’ன்னு ஒரு நண்பர் கேட்டாரு. அதனால, ஒரு லோக்கல் மேட்ச் நடத்தி அதை யூடியூப்ல லைவ் ஸ்ட்ரீமிங் பண்ணினோம். அப்போதான் இங்க ஃபுட்பாலுக்கு எவ்ளோ பெரிய வரவேற்பு இருக்குன்னு புரிஞ்சுது’’ என்று தமிழ்நாட்டில் கால்பந்துக்கு இருக்கும் வரவேற்பைப் பற்றிக் கூறுகிறார் ஹாரிசன்.

மான்செஸ்டர் யுனைடட், ரியல் மாட்ரிட் என வாழும் கால்பந்து ரசிகர்களிடத்தில் நோபல் அகாடெமி, YMSC, தடம் போன்ற கிளப் களையும் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது இந்தக் குழு!

அடுத்தகட்டப் பாய்ச்சல் இன்னும் சிறப்பாக, பெரிதாக இருக்கவேண்டும் என்ற முனைப்பில் திட்டங்கள் தீட்டிக்கொண்டி ருக்கிறது. அவை நல்ல முறையில் உயிர்ப்படையவேண்டும். ஏனெனில், அவர்களோடு முன்னேறப்போவது தமிழ்நாட்டுக் கால்பந்தும்தான்!

****

“சூசை, நந்தா என பல வீரர்கள் சென்னை டிவிஷன் விளையாடித்தான் ஐ.எஸ்.எல் போன்ற தொடர்களுக்குள் நுழைந்தார்கள். 4 ஆண்டுகளாக அந்தத் தொடர் நடக்காதது பல தமிழக வீரர்களின் வாய்ப்பைப் பறித்துவிட்டது. அதுமட்டுமல்லாமல், அந்தத் தொடரில் விளையாடித்தான் பலர் நல்ல வேலைகளும் பெற்றனர். அதுவுமே அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. இப்படித் தடுமாறிக்கொண்டிருந்த தமிழகக் கால்பந்துக்குக் கிடைத்திருக்கும் அருமருந்து இந்தப் போர்க்களம் தொடர். 60-70 ஆண்டுகளாக இருக்கும் அசோசியேஷன்கள் செய்யவேண்டிய வேலையைச் சில இளைஞர்கள் சேர்ந்து செய்திருக்கிறார்கள். தமிழ்நாடு கால்பந்தையே இவர்கள் கையில் ஒப்படைத்துவிடலாம்.”

- விளையாட்டுப் பத்திரிகையாளர் டி.என்.ரகு

உயிர்பெறும் தமிழக கால்பந்து!

சாம்பியன்கள்

போர்க்களம் தொடர் ஐ.எஸ்.எல் போலவே நடத்தப்பட்டது. லீக் சுற்றுக்கு ஒரு சாம்பியன், நாக் அவுட் போட்டிகள் நடத்தி ஒரு சாம்பியன் முடிவு செய்யப்பட்டன. இந்தியக் கால்பந்து ஜாம்பவான் ராமன் விஜயனின் நோபல் கால்பந்து அகாடெமி லீக் சுற்றில் முதலிடம் பெற்றுப் பட்டம் வென்றது. 7 போட்டிகளில் 16 புள்ளிகள் பெற்று ராஜ்ஜியம் நடத்தியது அந்த அணி. நாக் அவுட் சுற்றில், YMSC சாம்பியன் ஆனது. இறுதிப் போட்டியில் தடம் அணியை 3-0 என வீழ்த்தியது YMSC. தமிழகத்தின் பழைமையான கால்பந்து அணியான YMSC முழுக்க முழுக்க வடசென்னையைச் சேர்ந்த வீரர்கள் கொண்ட அணி. கால்பந்துக் காதலர் இளங்கோவனால் உருவாக்கப்பட்ட அந்த அணி, போர்க்களம் முதல் சீசனில் முத்திரை பதித்திருக்கிறது.

****

"போர்க்களம் தொடரை ஐ.எஸ்.எல் தொடருக்கு இணையான தரத்தில் நடத்தியிருக்கிறது ஃபுட்பால் மக்கா குழு. இதனால், வீரர்கள் பயிற்சியாளர்கள் எல்லோருக்கும் நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது. வீரர்களுக்கு இதனால் ஏற்பட்டிருக்கும் நன்மை அளப்பரியது."

- ஒய்.எம்.எஸ்.சி பயிற்சியாளர் அனூஃப் யங்