
இந்த ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 53 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார் அன்டிம் பன்கல்
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
கிரிக்கெட்டைத் தவிர வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவதில்லை என்ற பொதுவான பிம்பம் இங்கு உண்டு. கிரிக்கெட் எனும் விளையாட்டை இந்திய மக்கள் தொகையின் பெரும்பான்மையானோர் பார்த்து ரசிக்கும் அதே வேளையில் மற்ற விளையாட்டுகளுக்கு எவ்வளவு ஆர்வம் காட்டுகிறோம்? ``இந்தியர்கள் பல்வேறு விளையாட்டுகளில் தொடர்ந்து பெற்றுவரும் வெற்றிகளை நாம் கவனிக்கத் தவறுகிறோம். மற்ற நாடுகள் நம்மைப் பார்க்கும் விதமே மொத்தமாக மாறிவிட்டது. இந்தியா அனைத்து விளையாட்டுகளிலும் வலுவாக உள்ளதாகப் பிறர் கருதுகிறார்கள்.'' - இந்தியாவின் தலைசிறந்த பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சமீபத்தில் கூறிய விஷயம் இது. கிரிக்கெட் தவிர்த்து, மற்ற விளையாட்டுகளில் சிறப்பாகச் செயல்பட்டு இந்தியா பெற்ற வெற்றிகள், நட்சத்திர வீரர்களின் அணிவகுப்பு இங்கே...

பேட்மின்டன்
பேட்மின்டனின் உலகக்கோப்பையாகக் கருதப்படும் தாமஸ் கோப்பையை, இந்த ஆண்டு முதல்முறையாக வென்றது, இந்திய ஆண்கள் அணி. 73 ஆண்டுக்கால தாமஸ் கோப்பை வரலாற்றில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தியது கூடுதல் சிறப்பு.
# 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என இந்த ஆண்டு காமன்வெல்த்தில் அதிக பேட்மின்டன் பதக்கங்களை வென்ற நாடு இந்தியா.
# மேலும் நடப்பாண்டு உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் சாத்விக் - சிராக் ஜோடி ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றனர். 2011-ம் ஆண்டு தொடங்கி இத்தொடரில் குறைந்தது ஒரு பதக்கத்தை இந்திய வீரர்கள் வென்றுவருவது குறிப்பிடத்தக்கது.
நட்சத்திர வீரர்: பி.வி.சிந்து
(ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என அடுத்தடுத்து இரண்டு பதக்கங்கள் வென்ற ஒரே இந்திய வீராங்கனை)

துப்பாக்கி சுடுதல்
17 தங்கம், 21 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்களை இவ்வாண்டு நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையில் அள்ளி முதலிடம் பிடித்தது இந்தியா.
# அதேபோல, ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையிலும் இந்திய அணி 13 தங்கம், 15 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
# பாரா துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையில் 1 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்கள் வென்றிருக்கிறது.
நட்சத்திர வீரர்: ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்
(ஆண்கள் உலகத் தரவரிசையில் 50மீ ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் நான்காவது இடத்தில் உள்ளார்)

மல்யுத்தம்
நடப்பாண்டு காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கு அதிக பதக்கங்களை வென்று தந்த விளையாட்டு, மல்யுத்தம். 3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்று அசத்தினர். பங்கேற்ற அனைத்துப் பிரிவுகளிலும் பதக்கம் வெல்வது இது இரண்டாவது முறை.
# 2008 - 2021 வரையிலான ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி அதிக பதக்கங்கள் வென்றது மல்யுத்தத்தில்தான் (6 பதக்கங்கள்).
# இந்த ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 53 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார் அன்டிம் பன்கல். இதன்மூலம் 34 ஆண்டு உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியாவுக்குத் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற சாதனையைப் படைத்தார்.
நட்சத்திர வீரர்: வினேஷ் போகத்
(தொடர்ந்து மூன்று முறை காமன்வெல்த்தில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார்)

குத்துச்சண்டை
காமன்வெல்த் போட்டிகளில் 2006-ம் ஆண்டு தொடங்கி தற்போது முடிந்த தொடர் வரை, குத்துச்சண்டையில் இந்தியாவுக்குப் பதக்க மழை பொழிந்துவருகிறது. 2006-ல் 5 பதக்கங்களுடன் மூன்றாவது இடம், 2010-ல் 7 பதக்கங்களுடன் இரண்டாவது இடம், 2014-ல் 5 பதக்கங்களுடன் ஏழாவது இடம், 2018-ல் 9 பதக்கங்களுடன் இரண்டாவது இடம், 2022-ல் 7 பதக்கங்களுடன் இரண்டாவது இடம் என சாதனை படைத்திருக்கிறது.
# 2001 முதல் நடந்து வரும் பெண்கள் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இதுவரை மொத்தம் 39 பதக்கங்களுடன் நான்காவது அதிக பதக்கங்கள் பெற்ற நாடாக இந்தியா விளங்குகிறது. இவ்வாண்டு நடைபெற்ற பெண்கள் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 2 வெண்கலம் மற்றும் 1 தங்கம் வென்றது.
# உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வரலாற்றில் 6 தங்கப் பதக்கங்களுடன் அதிக தங்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமைக்குச் சொந்தக்காரராக இருக்கிறார் மேரி கோம்.
நட்சத்திர வீரர்: நிகத் சரீன்
(இந்த ஒரே ஆண்டில் உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்)

செஸ்
நடந்து முடிந்த சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் முறையாக பெண்கள் பிரிவில் இந்தியா A அணி (கோனேரு ஹம்பி, ஹரிகா துரோணாவலி, வைஷாலி ரமேஷ்பாபு, டானியா சச்தேவ், பக்தி குல்கர்னி) பதக்கம் வென்றது. அதேபோல, ஆண்கள் பிரிவில் இந்தியா B அணி வெண்கலப் பதக்கம் வென்றது. தனிநபர் பிரிவில் மொத்தம் 7 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றனர். 2020-ல் ஆன்லைனில் நடந்த செஸ் ஒலிம்பியாடில், இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
# உலக நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வீழ்த்தியுள்ளார், தமிழகத்தைச் சேர்ந்த பிரக்னானந்தா.
# கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பிரணவ் பெற்றதன் மூலம் இந்தியாவில் அந்த எண்ணிக்கை 75 ஆகியுள்ளது. அதில் 27 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.
நட்சத்திர வீரர்: குகேஷ்
இளம் வயதில் (16) 2700 ரேட்டிங்கைக் கடந்த இந்திய வீரர் என்ற பெருமையையும் உலக அளவில் இளம் வயதில் மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார்.

தடகளம்
ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது அனைவரும் அறிந்ததே. இவ்வாண்டு நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். 2003-ல் அஞ்சு பாபி ஜார்ஜ் வாங்கிய வெண்கலப் பதக்கமே உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியாவுக்குக் கிடைத்திருந்த ஒரே பதக்கம். அந்த நீண்டகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நீரஜ்.
# செப்டம்பரில் நடந்து முடிந்த பிரபல தடகளத் தொடரான டைமெண்ட் லீக்கில் நீரஜ் சாம்பியன் பட்டம் வென்றார். டைமெண்ட் லீக் வரலாற்றில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கம் இதுவே.
# இவ்வாண்டு காமன்வெல்த் போட்டிகளில் தடகளத்தில் 7 பதக்கங்கள் வென்று பல அதிசயங்களை இந்திய வீரர்கள் நிகழ்த்தினர்.
அவினாஷ் சாப்ளே 3,000 மீட்டர் ஸ்டிபில்சேஸில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 3,000 மீ ஸ்டிபில்சேஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றது மட்டுமல்லாமல், 1998 முதல் இந்த விளையாட்டில் எல்லாப் பதக்கங்களையும் கென்யா வீரர்கள் மட்டுமே வென்றுவந்த சாதனைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
எல்டோஸ் பால் முதல்முறையாக ட்ரிபிள் ஜம்ப்பில் இந்தியாவுக்குத் தங்கப்பதக்கம் பெற்றுத் தந்தார். முரளி சங்கர் முதல்முறையாக நீளம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுத் தந்தார். பிரியங்கா கோஸ்வாமி 10 கி.மீ ரேஸ் வாக்கில் இந்தியாவுக்குப் பதக்கம் வென்ற முதல் பெண்மணி ஆனார். காமன்வெல்த் வரலாற்றில் இந்தியாவுக்கான முதல் உயரம் தாண்டுதல் பதக்கத்தை வென்றார் தேஜஸ்வின் சங்கர்.
# நடந்து முடிந்த உலக U-20 தடகள சாம்பியன்ஷிப்பில் மூன்று பதக்கங்கள் வென்று அசத்தியது இந்தியா. அதில் தமிழகத்தைச் சேர்ந்த செல்வகுமார் திருமாறன் ட்ரிபிள் ஜம்ப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
நட்சத்திர வீரர்: நீரஜ் சோப்ரா
ஒலிம்பிக் தங்கப் பதக்கம் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்.

ஹாக்கி
2021-ல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்ஸ் ஹாக்கியில் இந்தியாவுக்குக் கிடைத்த பதக்கம் இது. அதுமட்டுமன்றி, பெண்கள் அணி வெண்கலப் பதக்கப் போட்டியில் போராடித் தோற்றது.
# நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் பெண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 2006-க்குப் பின் காமன்வெல்த் பெண்கள் ஹாக்கியில் கிடைத்த பதக்கம் இது!
# 2021-2022 ஆண்டுக்கான FIH ப்ரோ லீக் தொடரில் முதல்முறையாக இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்தன.
நட்சத்திர வீரர்: வந்தனா கட்டாரியா
காமன்வெல்த் போட்டிகளில் இந்தியப் பெண்கள் அணிக்கு அதிக கோல் (4) அடித்த வீரர்.

டேபிள் டென்னிஸ்
நடப்பாண்டு காமன்வெல்த் தொடரில் 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை இந்திய டேபிள் டென்னிஸ் மற்றும் பாரா டேபிள் டென்னிஸ் வீரர்கள் வென்றனர்.
# இவ்வாண்டு மார்ச் மாதம் சத்யன் ஞானசேகரன் - மணிகா பாத்ரா ஜோடி உலக கலப்பு இரட்டையர் தரவரிசையில் 7-வது இடத்திற்கு முன்னேறினர். வரலாற்றில் இந்திய கலப்பு ஜோடி 7-வது இடம்வரை முன்னேறியது இதுவே முதல்முறை.
# 2021-ல் தமிழகத்தைச் சேர்ந்த சத்யன் ஞானசேகரன் மூன்று உலகச் சுற்றுப்பயணத் தொடர்களை வென்ற இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்!
நட்சத்திர வீரர்: ஷரத் கமல்
இவ்வாண்டு காமன்வெல்த்தில் பெற்ற மூன்று பதக்கங்களுடன் இவரின் காமன்வெல்த் மொத்தப் பதக்க எண்ணிக்கை 13.

பளுதூக்குதல்
3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை இவ்வாண்டு காமன்வெல்த் தொடரில் வென்றனர், இந்திய வீரர்கள். இதன் மூலம் பளுதூக்குதலில் அதிக பதக்கம் வென்ற நாடு என்ற பெருமையைப் பெற்றது இந்தியா. இரண்டாவது இடம் பிடித்த இங்கிலாந்து ஐந்து பதக்கங்கள் மட்டுமே வென்றிருந்தது.
# 2022 உலக யூத் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்கள் வென்று ஐந்தாவது இடம் பிடித்திருந்தது.
# 2021-ல் நடந்த காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 4 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்கள் வென்று புள்ளிப்பட்டியலில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்தது.
நட்சத்திர வீரர்: மீராபாய் சானு
2020 ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கம் மற்றும் தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக காமன்வெல்த் பதக்கம் வென்றுள்ளார்.

வில்வித்தை
வில்வித்தை உலகக்கோப்பை பல கட்டங்களாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு உலகக்கோப்பையில் ஐந்தில் நான்கு பகுதி முடிந்துள்ள நிலையில், இந்திய வீரர்கள் 4 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்கள் பெற்றுப் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளனர்.
# 2021-ல் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் 7 தங்கப்பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்தது இந்தியா.
# 2021-ல் நடைபெற்ற உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் 8 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்கள் பெற்று முதலிடம் பிடித்தது இந்தியா.
நட்சத்திர வீரர்: ஜோதி சுரேகா வென்னம்
உலகத் தரவரிசையில் பெண்கள் காம்பௌண்ட் பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

கால்பந்து
2021-ல் நடைபெற்ற தெற்காசியக் கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
# 2021-ல் நடைபெற்ற U19 தெற்காசியக் கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்தியப் பெண்கள் அணி இரண்டாவது இடம் பிடித்தது.
# 2022-ல் நடைபெற்ற U20 தெற்காசியக் கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆண்கள் அணி சாம்பியன் ஆனது.
நட்சத்திர வீரர்: சுனில் சேத்ரி
2021 தெற்காசியக் கால்பந்து சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 5 கோல்கள் அடித்து சிறந்த வீரர் விருதைப் பெற்றார்!
தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்துவரும் இந்தக் காலத்தில் விளையாட்டுப் போட்டிகளை OTT போன்ற தளங்களில் நம் மொபைல் போனிலேயே பார்க்கும் வசதியெல்லாம் வந்துவிட்டது. காமன்வெல்த் போன்ற தொடர்களில் இவ்வாண்டு இந்திய வீரர்கள் பல போட்டிகளில் ஒரே நேரத்தில் விளையாடினாலும், அனைத்தையும் பார்க்க வசதிகள் இருந்தன. கிரிக்கெட்டில் 2011-ம் ஆண்டு இந்தியா கடைசியாக உலகக்கோப்பை ஜெயித்தது. ஒவ்வொருமுறை இந்தியா உலகக்கோப்பைத் தொடர்களில் தோற்கும்போதும், இந்தியா முழுவதும் வருத்தம் இருக்கிறது. வருந்துவதில் தவறில்லை. ஆனால், வேறு பல விளையாட்டுகளில் கிடைக்கும் வெற்றிகளைக் கொண்டாட மறுக்கிறோம். ஒரு விளையாட்டு மேம்பட அரசின் பங்கு தொடங்கி பல விஷயங்கள் அதைச்சுற்றி இருக்கின்றன. அதில் முக்கியமான ஒரு விஷயம், விளையாட்டுக்கான மக்களின் வரவேற்பு. அதுதான் ஒவ்வொரு வீட்டிலும் நாளை ஒரு விளையாட்டு வீரரை உருவாக்குவதற்கு ஒரு சின்ன தொடக்கமாக இருக்கும்.