Published:Updated:

விலை போகாத தலைகள்!

விலை போகாத தலைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
விலை போகாத தலைகள்!

இந்த மினி ஏலத்தில் 405 வீரர்கள் பங்கேற்றனர். இவர்களில் 80 வீரர்கள் மட்டுமே ஏலம் போனார்கள். இவர்களுக்கு 167 கோடி ரூபாயை அணிகள் செலவழித்திருக்கின்றன.

ஐ.பி.எல் தொடரின் சாம்பியன்கள் மைதானத்தில் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. வீரர்கள் தேர்வுக்காக அணிகள் கூடும் ஏல அரங்கின் மேஜையிலிருந்தே சாம்பியன்கள் தீர்மானிக்கப்படத் தொடங்கிவிடுகின்றனர். 2008 தொடக்க சீசனுக்கு முன்பான மெகா ஏலத்தில் தோனியை சி.எஸ்.கே அணி வாங்காமல் வேறு அணிகள் வாங்கியிருந்தால் சி.எஸ்.கே-வின் பயணமே ஒட்டுமொத்தமாக வேறாக மாறியிருக்கும். பொல்லார்ட் மும்பைக்குச் செல்லாமல் இருந்திருந்தால், கம்பீருக்கு ஷாருக் கான் வலைவீசாமல் இருந்திருந்தால், ஐ.பி.எல் வரலாறே தடம்புரண்டு வேறாகியிருக்கும். இப்படிப் பழைய கணக்குவழக்குகளை மனதில் வைத்துக்கொண்டே அணிகள் கொச்சியில் இந்த ஆண்டுக்கான மினி ஏலத்தில் பங்கேற்றிருந்தன.

இந்த மினி ஏலத்தை அனுபவம் வாய்ந்த ஏலத் தொகுப்பாளர் ஹூக் எட்மீட்ஸ் நடத்தியிருந்தார். கடந்த மெகா ஏலத்தின்போது திடீரென நிலைகுலைந்து விழுந்து பதைபதைப்பை ஏற்படுத்தினாரே, அவர்தான்! கடந்த முறை மதிய உணவைத் தவிர்த்ததுதான் நிலைகுலைதலுக்குக் காரணம் என உணர்ந்து இந்த முறை வயிறார உணவருந்திவிட்டு ஏல சுத்தியலைக் கையில் ஏந்தியிருந்தார்.

சி.எஸ்.கே நிர்வாகத்தினர்
சி.எஸ்.கே நிர்வாகத்தினர்

‘பளிச்சிடும் முத்து ஒன்று ஏலத்திற்கு வந்தது. ஆனால், அதை ஏலம் கேட்டு வாங்குமளவுக்கு யாரிடமும் செல்வம் இல்லை. அதனால் அந்தக் கண்கவர் முத்து தன்னைத்தானே வாங்கிக் கொண்டது.' ரூமியின் தத்துவங்களில் ஒன்று இது. ஆனால், இது ஐ.பி.எல் ஏலத்திற்குப் பொருந்தாது. எவ்வளவு மதிப்புடைய வீரராக இருந்தாலும் இந்த ஏல அரங்கில் அவருக்கென ஒரு விலை கட்டாயம் உண்டு. அப்படி விலையெதுவும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை யெனில் அவர் விலைமதிப்பற்றவர் இல்லை; ஏலத்தில் விற்கப்படாதவர் என்றே அர்த்தம். அந்த வகையில் இந்த முறை அதிகபட்ச ஏலத்திற்குச் சென்ற முத்தாக ஜொலித்தவர் இங்கிலாந்து வீரர் சாம் கரன். அவரை ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியிருந்தது. ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். இங்கிலாந்து அணியை டி20 உலகக்கோப்பையில் சாம்பியன் ஆக்கியதற்காகக் கொடுக்கப்பட்ட விலை இது. இங்கிலாந்து அணியின் முதன்மைப் பந்துவீச்சாளர் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டு அதில் திறம்படச் செயல்பட்டு, தொடர் நாயகனாகி அணியையும் சாம்பியனாக்கியிருந்தார் சாம்.

இந்த மினி ஏலத்தில் 405 வீரர்கள் பங்கேற்றனர். இவர்களில் 80 வீரர்கள் மட்டுமே ஏலம் போனார்கள். இவர்களுக்கு 167 கோடி ரூபாயை அணிகள் செலவழித்திருக்கின்றன. இதில் வெறும் ஐந்து வீரர்களுக்கு அளிக்கப்பட்ட தொகை, சுமார் 81 கோடி ரூபாய். சாம் கரனுக்கு அடுத்து அதிக கவனத்தை ஈர்த்தவர் ஆஸ்திரேலியாவின் இளம் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன். அவரை 17.5 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. ஏற்கெனவே செட்டிலாகி இருக்கும் மும்பை அணியின் பேட்டிங் ஆர்டரில் அதிரடி ஆட்டக்காரரான கிரீனை எங்கே நுழைக்கப்போகிறார்கள் என்பது கேள்வியாக இருக்கிறது. ஐ.பி.எல்-லில் புதிதாக அறிமுகமாக இருக்கும் ‘Impact Player' விதிமுறையை மனதில் வைத்துக்கூட கிரீனை மும்பை எடுத்திருக்கக்கூடும். லெவனில் இல்லையென்றாலும் வேறு ஏதேனும் பௌலருக்கு பதிலாக ஆட்டத்தின் இடையே கிரீனை மாற்றுவீரராகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும். பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய்க்கு சி.எஸ்.கே வாங்கியிருக்கிறது. தோனிக்குப் பிறகு ஸ்டோக்ஸ்தான் கேப்டன் என ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டடித்து வருகின்றனர். ஆனால், அது எந்த அளவுக்கு சாத்தியம் எனத் தெரியவில்லை. ஸ்டோக்ஸ் ஐ.பி.எல்-ல் நிலையானவர் அல்ல. திடீரென இங்கிலாந்து கிரிக்கெட்தான் முக்கியம் எனப் பறந்துவிடுவார். அப்படியிருக்க, தோனியைப் போன்றே நீண்ட கால கேப்டனை சி.எஸ்.கே தேடுமெனில் அதற்குச் சரியான தேர்வாக ஸ்டோக்ஸ் இருப்பாரா என்பது சந்தேகமே.

சாம் கரன், கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக்
சாம் கரன், கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக்

இவர்களைத் தவிர்த்து, பாகிஸ்தானில் வைத்தே பாகிஸ்தானுக்குப் பாடம் புகட்டிய இங்கிலாந்தின் வளர்ந்து வரும் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி ப்ரூக்கை 13.25 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணி வாங்கியிருக்கிறது. நிக்கோலஸ் பூரனை 16 கோடிக்கு லக்னோ அணி வாங்கியிருக்கிறது. ‘Oh Captain My Captain' என தன் பழைய பஞ்சாப் கேப்டனான ராகுலிடமே பூரன் மீண்டும் தஞ்சமடைந்திருக்கிறார். தன் மீதான பெரிய எதிர்பார்ப்புகளுக்கும் கொடுக்கப்படும் கோடிகளுக்கும் பூரன் இந்த முறையாவது நியாயம் சேர்க்க வேண்டும். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக மயங்க் அகர்வாலை 8.25 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணி வாங்கியிருக்கிறது. அந்த அணியின் ஓட்டை உடைசலான பேட்டிங்கிற்கு மயங்க் அகர்வால் ஸ்திரத்தன்மை கொடுத்தாக வேண்டும்.

முகேஷ் குமார், விவ்ராண்ட் சர்மா போன்று இதுவரை பெரிதாக வெளியே பெயர் தெரியாத வீரர்களுமேகூட கவனத்தை ஈர்த்திருக்கின்றனர். இந்த இருவரின் அடிப்படை விலையுமே 20 லட்சம்தான். அதைவிட பலமடங்கு அதிகமாக முகேஷ் குமார் டெல்லி அணிக்கு 5.5 கோடிக்கும், விவ்ராண்ட் சர்மா சன்ரைசர்ஸ் அணிக்கு 2.6 கோடிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறார்கள். முகேஷ் குமார் பெங்கால் அணிக்காக ஆடும் வேகப்பந்து வீச்சாளர். அப்துல் சமத், உம்ரான் மாலிக்கைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் அணி தங்கள் குழுவில் இணைத்திருக்கும் இன்னொரு ஜம்மு & காஷ்மீர் இளைஞர் விவ்ராண்ட் சர்மா. இவர் ஆல்ரவுண்டர் என்பது கூடுதல் சிறப்பு.

தமிழக வீரர்களில் ஜெகதீசன், முருகன் அஷ்வின், சோனு யாதவ் போன்ற ஒரு சிலரை மட்டுமே அணிகள் சீண்டியிருக்கின்றன. தமிழ்நாடு ப்ரீமியர் லீக் என ஐ.பி.எல் போன்றே ஒரு லீகை வைத்திருக்கும்போதும், சையத் முஷ்தாக் அலி டி20 தொடரில் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தும்போதும்கூட தமிழக வீரர்கள் ஏலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதது புதிரே. கேன் வில்லியம்சன், ஜோ ரூட் போன்ற பெரிய தலைகளே சரியாக வியாபாரம் ஆகவில்லை எனும்போது, இந்த ஏலம் சார்ந்த சில விஷயங்களை காலத்தின் மாற்றம் என்று எடுத்துக்கொள்வதே சாலச்சிறந்தது.

ஹூக் எட்மீட்ஸுக்கு முன்பாக இந்த ஏல நிகழ்வை ரிச்சர்ட் மேட்லி என்பவர்தான் 11 ஆண்டுகளாக நடத்திவந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு பி.சி.சி.ஐ-யிடமிருந்து மேட்லிக்கு ஒரு மெயில் சென்றது. ‘Your services are not required. We have chosen a replacement auctioneer.' ஏல நிபுணருக்கு மட்டுமல்ல; ஏலத்தில் பங்கேற்று விற்கப்படாமல் போயிருக்கும் வீரர்களுக்கும் அணிகள் சொல்லாமல் சொல்லிய மெசேஜும் இதுதான். ‘Unsold' ஆகியிருக்கும் இதே வீரர்கள் அடுத்த ஆண்டில் சாதிக்கும்பட்சத்தில் இதே அணிகள் அவர்களுக்குச் சிவப்புக்கம்பளம் விரித்து, கோடிகளைக் கொட்டித்தரும் என்பதுதான் ஐ.பி.எல் ஏலத்தின் சுவாரஸ்யமே.