சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

மீண்டும் நிகழுமா அதிசயம்?!

சிஎஸ்கே
பிரீமியம் ஸ்டோரி
News
சிஎஸ்கே

‘நெட் பிராக்டீஸ்லாம் இல்லை... ஒன்லி மேட்ச் பிராக்டீஸ்தான்’ என சிஎஸ்கேவின் பேட்ஸ்மேன்கள் கெத்தாகச் சுற்றுவதுதான் அத்தனை பிரச்னைகளுக்கும் ஆரம்பம்.

மாணிக்கமாகக் கொஞ்ச காலம் ஆட்டோ ஓட்டிவிட்டு, பிரச்னைகள் உச்சம்தொடும்போது ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என பாட்ஷாவாக மாறுவதுதான் சென்னை சூப்பர் கிங்ஸின் டெம்ப்ளேட். பீஸுபீஸாகக் கிழித்தாலும் டென்ஷன் ஆகாமல் சிரிப்புடன் கடப்பவர்கள், கடைசியில்தான் அதிசயங்களை நிகழ்த்துவார்கள்.

இந்தமுறையும் மும்பையுடனான முதல் வெற்றிக்குப் பிறகு ராஜஸ்தான், டெல்லி, ஹைதராபாத் என ஹாட்ரிக் தோல்விகளால், பாயின்ட்ஸ் டேபிளின் கட்டக்கடைசியில் தவழ்ந்தது சென்னை. இப்போது பஞ்சாப்புக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறது. ஆனால், பழையபடி பாட்ஷாவாக மாறமுடியுமா என்பது இந்த சீசனில் சந்தேகம்தான்.

மீண்டும் நிகழுமா அதிசயம்?!

மேட்சில்தான் பிராக்டீஸே!

‘நெட் பிராக்டீஸ்லாம் இல்லை... ஒன்லி மேட்ச் பிராக்டீஸ்தான்’ என சிஎஸ்கேவின் பேட்ஸ்மேன்கள் கெத்தாகச் சுற்றுவதுதான் அத்தனை பிரச்னைகளுக்கும் ஆரம்பம். வாட்சன், ராயுடு, முரளி விஜய், கேதர் ஜாதவ் மட்டுமல்ல தோனியே கடந்த ஆண்டு உலகக்கோப்பைக்குப்பிறகு எந்தப்போட்டியிலுமே விளையாடவில்லை. வாட்சன் ஐந்தாம் வாய்ப்பில் அரைசதம் கடந்துவிட்டார். மூன்று போட்டிகளோடு விஜய்க்கு டாடா காட்டிவிட்டார்கள். ஆனால், மச்சக்காரன் கேதர் ஜாதவ் மட்டும் அணிக்குள் நிரந்தரமாக ஒரு இடத்தைப் பிடித்துவைத்திருக்கிறார்.

நோ பால் ஸ்பெஷலிஸ்ட்கள்!

சென்னையின் பெளலர்கள் ப்ரீ ஹிட் கொடுக்கும் வள்ளல்களாகியிருக்கிறார்கள். அதேபோல், கைக்கு வரும் கேட்சையெல்லாம் கோட்டைவிட்டு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு லைப்லைன் கொடுக்கும் பீல்டர்களையும் அதிகம் பெற்ற அணியாக இருக்கிறது சிஎஸ்கே. பெளலர்கள், பீல்டர்கள் தொடர்ந்து தவறிழைப்ப தாலேயே தோல்விகள் தொடர்கின்றன என தோனியே வெளிப்படையாகப் பேசினார்.

மீண்டும் நிகழுமா அதிசயம்?!

நோ ஜூனியர்ஸ்!

எல்லா அணிகளிலுமே ஜூனியர் வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்கப் படுகிறது. ஹைதராபாத் அணியில் பிரியம் கார்க், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமத், பெங்களூரு அணியில் தேவ்தத் படிக்கல்; டெல்லியில் பிரித்வி ஷா; ராஜஸ்தானில் ரியான் பராக் என இளம் படை இந்த சீசனில் அதிரடி கிளப்புகிறது ஆனால், சென்னை அணியில் இளம் வீரர்களுக்கு இடமே கிடையாது.

ஏன் தமிழக வீரர்கள் இல்லை?!

சிஎஸ்கே-வுக்கான எதிர்கால வீரர்களை நாமே உருவாக்கலாம் என்கிற எண்ணத்தோடு தொடங்கப்பட்டதுதான் தமிழ்நாடு பிரிமியர் லீக். டிஎன்பிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடித்தான் நடராஜன், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஐபிஎல் வாய்ப்பு பெற்று பல்வேறு அணிகளில் ஆடிக்கொண்டி ருக்கிறார்கள். தமிழ்நாடு பிரிமியர் லீகில் அதிக ரன்கள் குவித்திருக்கும் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் நாராயணன் ஜெகதீசன். 2018-19 சீசனில் ரஞ்சி தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த தமிழக வீரர் சாய் கிஷோர்தான். இவர்கள் இருவரும் சென்னை அணியில்தான் இப்போது இருக்கிறார்கள். ஓப்பனிங் பேட்ஸ்மேனாகத் தொடர்ந்து சொதப்பும் வாட்சனின் இடம், மிடில் ஆர்டர் கேதர் ஜாதவின் இடம் என இரண்டு இடங்களிலுமே இறங்கி ஆடக்கூடியவர் ஜெகதீசன். அதேபோல் பியூஷ் சாவ்லாவுக்கு பதிலாக சாய்கிஷோருக்கு தோனி வாய்ப்பளிக்கலாம். ஆனால், இதெல்லாம் நடப்பதற்கான சின்ன சமிக்ஞைகள்கூட சிஎஸ்கேவில் தெரியவில்லை.

தடுமாறும் தோனி!

40 வயதை நெருங்கிவிட்ட சிஎஸ்கே கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். தன்னுடைய வழக்கமான பொசிஷனான மூன்றாவது டௌன் பேட்ஸ்மேனாக இறங்குவதிலேயே அவருக்குத் தயக்கமும், பயமும் இருக்கிறது. ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் 36 பந்துகளில் 47 ரன்கள் அடித்திருந்தாலும் தோனியின் பேட்டிங்கில் இருந்த பழைய துல்லியம் இல்லை. தோனியின் தடுமாற்றங்கள் தொடர்ந்தால் அது சிஎஸ்கேவுக்குப் பெரும் சரிவைக் கொடுக்கும்.