
பனிக்கட்டி மைதானத்தில் ஆடப்படும் இந்த ஆட்டம், அடிப்படையில் ஹாக்கியை ஒத்ததுதான். ஆனால், இதற்கென சில பிரத்யேக விதிமுறைகளும் வரையறைகளும் இருக்கின்றன.
இன்னமும் அந்த ஐபிஎல் போட்டி அப்படியே நினைவிருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் அந்தப் போட்டியில் மோதியிருந்தன. போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி சுவாரஸ்யமாகச் சென்று கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில்தான் திடீரென ஒரு விரும்பத்தகாத சம்பவம் களத்தில் நடந்திருந்தது. பொல்லார்ட் ஸ்ட்ரைக்கில் இருந்தார். பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் பந்து வீச ஓடி வருகையிலேயே பொல்லார்ட் தனது பொசிஷனிலிருந்து விலகி, ‘ஆடத் தயாராக இல்லை’ என்பதுபோல ஒதுங்கிவிடுவார். ஆனால், ஓடி வந்த ஸ்டார்க்கோ வந்த வேகத்திலேயே ஒதுங்கிச் சென்று பொல்லார்ட் மீது பந்தை எறிவதுபோல் வீசியிருந்தார். பொல்லார்ட் கோபமடைந்து தனது பேட்டை ஸ்டார்க்கை நோக்கி ஓங்கி வீசச் சென்றிருந்தார். அந்த நொடி அப்படியே நெருப்பாக தகதகத்தது. இருவரும் முறைத்துக்கொண்டனர். நல்லவேளையாக நடுவர்களும், சக வீரர்களும் முன்வந்து இருவரையும் விலக்கிவிட்டனர். ஆயினும், விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டதால் போட்டி முடிந்த பிறகு இருவருக்குமே அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது நடந்துகொண்டிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் களத்தில் வேல்ஸ் அணியின் கோல்கீப்பர் ஹென்னசி, இரான் அணியின் வீரர்மீது பயங்கர வேகத்தில் வந்து மோதினார். இதற்காக ஹென்னசிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு, அவர் வெளியேற்றப்பட்டார். இந்த உலகக் கோப்பையில் வழங்கப்பட்ட முதல் ரெட் கார்டு இதுதான்.
மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களுமே உணர்த்துவது ஒன்றைத்தான். விளையாட்டு என்பது எந்தவிதத்திலும் வன்முறையாக மாறிவிடக் கூடாது. அதை உறுதிசெய்யும் வகையிலேயே பெரும்பாலான விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. குத்துச்சண்டை, மல்யுத்தம்போல வீரர்கள் நேரடியாக மோதிக்கொள்ளும் விளையாட்டுகளிலும், அதை முறைப்படுத்த எக்கச்சக்க விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. இதுதான் விளையாட்டுகளின் பொதுவான நிலைமை. ஆனால், ஒரே ஒரு விளையாட்டு மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்கிறது. அது ஐஸ் ஹாக்கி. இங்கே வீரர்கள் ஹாக்கி ஆட மட்டுமல்ல, சண்டையும் செய்துகொள்ளலாம். இதுதான் இந்த ஆட்டத்தின் விசித்திரமே.

பனிக்கட்டி மைதானத்தில் ஆடப்படும் இந்த ஆட்டம், அடிப்படையில் ஹாக்கியை ஒத்ததுதான். ஆனால், இதற்கென சில பிரத்யேக விதிமுறைகளும் வரையறைகளும் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘The Code' என்கிற, வீரர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் உரிமை. இந்த ஐஸ் ஹாக்கி ஆட்டம் வட அமெரிக்காவில் பிரபலமாக ஆடப்பட்டுவருகிறது. குறிப்பாக, `NHL’ எனப்படும் National Hockey League அங்கே ரொம்பவே பிரபலம். பெரும்பாலும் வேறெந்த வடிவிலான ஹாக்கி போட்டியிலுமே வீரர்கள் சண்டை செய்ய அனுமதி இல்லை. NHL-ல் அந்தக் குளிர்ந்த களத்தில் மட்டும்தான் சூடான சண்டை களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
விளையாட்டில் எதற்குச் சண்டை... இப்படிக் கேட்டால், அதற்கும் காரணம் வைத்திருக்கிறார்கள். ஒருகாலத்தில் வீரர்கள் இந்த ஹாக்கி ஆட்டத்தை ஆடும்போது ஒரு வரையறுக்கப்பட்ட வடிவத்தில் போதுமான நடுவர்களோடு ஆடியிருக்க மாட்டார்கள். அப்போது வீரர்களுக்கிடையே போட்டி சார்ந்து வேறுபாடுகள் ஏற்படும்போது கடுமையான மோதலும் ஏற்படும். தெருக்களில் கால்பந்தும் கிரிக்கெட்டும் ஆடும்போது நண்பர்களுடன் நாம் மோதிக்கொள்வோம் இல்லையா... அதே மாதிரிதான் ஐஸ் ஹாக்கியிலும் அடிக்கடி கைகலப்புகள் நடந்துகொண்டே இருந்திருக்கின்றன. இந்த ஆட்டம் காலத்துக்கேற்ப நவீன தகவமைப்புகளோடு உருமாறிக்கொண்டே இருந்தாலும், சண்டையிட்டுக்கொள்ளும் வழக்கம் மட்டும் மாறாமல் ஒரு பாரம்பர்ய விஷயமாக நினைத்து அப்படியே கடைப்பிடித்துவருகிறார்கள்.

அதேசமயம், இங்கே சண்டையை எப்படிச் செய்ய வேண்டும் என விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறார்கள். எதிரெதிர் அணியில் ஆடும் இரு வீரர்கள் ஏதோ உரசல் ஏற்பட்டு சண்டை போட நினைக்கிறார்கள் எனில், இருவரும் தங்களது கையில் அணிந்திருக்கும் கிளவுஸைக் கழற்றிவிட வேண்டும். அதுதான் சண்டை நடக்கப்போகிறது என்பதற்கான அறிகுறி. அடுத்து என்ன... சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கிறது... உதையும் குத்தும்தான் மீதிக்கதை. இரு வீரர்களும் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில், ஆட்டம் அதுவரை நடுவர்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். சக வீரர்களும் அப்படியே ஒதுங்கி விடுகின்றனர். மூர்க்கத்தனமாகச் சண்டை நடைபெறும்போது அசம்பாவிதங்கள் எதுவும் நிகழ்ந்துவிடாமல் இருக்க சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார்கள். அதாவது சண்டையிடும்போது அவர்கள் அணிந்திருக்கும் ஹெல்மெட் கழன்றுவிடக் கூடாது. அடி வாங்கும் வீரர் தரையில் வீழ்ந்துவிட்டால், சண்டையை முடித்துக்கொள்ள வேண்டும். இருவரில் யார் சண்டையிலிருந்து பின்வாங்க நினைத்தாலும், அதைத் தெரியப்படுத்தியதும் சண்டை முடிவுக்கு வரும். என்றாலும், ரத்தம் சொட்டச் சொட்ட சண்டைகள் இந்த ஐஸ் ஹாக்கி களத்தில் நடந்தபடிதான் இருக்கின்றன. இப்படிச் சண்டையிடுவது ஐஸ் ஹாக்கிக்கு கூடுதல் சுவாரஸ்யத்தைக் கொடுக்கிறதாம்! ஆட்டத்தில் ரசிகர்களின் ஆராவாரம், வீரர்கள் சண்டையிட்டுக்கொள்ளும்போது இரட்டிப்பாகிறதாம்.
வீரர்களைச் சண்டையிட்டுக்கொள்ள அனுமதிப்பது விளையாட்டின் அடிப்படை நோக்கத்துக்கு எதிரானது எனும் கருத்தும் எழாமல் இல்லை.

இந்த National Hockey League-ன் வியாபாரமுமே ரொம்பவே பெரிதாக இருக்கிறது. இந்த லீகில் வியாபாரரீதியில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் நியூயார்க் ரேஞ்சர்ஸ் அணியின் மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர். என்னதான் இருந்தாலும் வன்முறையைக் கொஞ்சம் தவிர்க்கலாம்!