கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

புது நாயகனின் எழுச்சிக் கதை!

செனகல் டீம்
பிரீமியம் ஸ்டோரி
News
செனகல் டீம்

சிறிய அணிகள் பெரிய அணிகளை வீழ்த்தியதை அதிசயம் ஆச்சர்யம் என ஒரு வர்ணிப்புக்காகப் பேசினாலும், உண்மையிலேயே அந்த அணிகளின் கடின உழைப்பிற்கும், உத்வேகத்திற்கும் கிடைத்த வெற்றிகள்தான் அவை.

கத்தார் கால்பந்து உலகக்கோப்பையை ‘அதிசயமும் ஆச்சர்யமும்' என்கிற இரண்டே வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியும். கத்தாருக்கு உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பு கிடைத்ததே ஆச்சர்யம்தான். 30 லட்சம்கூட மக்கள் தொகையைக் கொண்டிராத அந்த நாடு, போட்டிகளைக் காண விற்றிருக்கும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை மட்டுமே 30 லட்சத்தைத் தாண்டியிருக்கும். யூரோ சாம்பியனான இத்தாலி இந்த உலகக்கோப்பைக்கே தகுதிபெற முடியாமற்போனது ஒரு சோக அதிசயம். போட்டியை நடத்தும் கத்தார், முதல் சுற்றிலேயே ஒரு வெற்றியைக்கூடப் பெற முடியாமல் வெளியேறியது ஒரு விநோத அதிசயம். ஜப்பானிடம் உதைபட்டு முன்னாள் சாம்பிய னான ஜெர்மனி முதல் சுற்றோடு வெளியேறியிருக்கிறது. மொராக்கோவிடம் அடிபட்டு பெல்ஜியமும் குரூப் போட்டிகளோடு வெளியேறியிருக்கிறது. 3 ஆசிய நாடுகள் முதல் சுற்றைக் கடந்து ரவுண்ட் ஆஃப் 16-க்கு முன்னேறின. இப்படியாக இந்த உலகக்கோப்பை நெடுகிலுமே ஆச்சர்யங்களும் அதிசயங்களும் மட்டுமே நிரம்பியிருக்கின்றன.

மெஸ்ஸி
மெஸ்ஸி

1986-ல் மரடோனா வென்று கொடுத்தபிறகு கோப்பையை நெருங்காமலே இருக்கும் அர்ஜென்டினா இந்த முறை மெஸ்ஸிக்காக வெல்ல வேண்டும் என்கிற பெரும் கனவோடு இறங்கியது. முதல் போட்டியிலேயே அர்ஜென்டினாவின் கனவில் வெடி வைத்தது சவுதி அரேபியா. 0-1 எனப் பின்தங்கிய நிலையிலிருந்து 2-1 என முன்னேறி யாரும் எதிர்பார்க்காத ரிசல்ட்டை எட்டி ஆச்சர்யம் தந்தது. அர்ஜென்டினாவிற்கும் மெஸ்ஸிக்கும் இதுதான் மிகப்பெரிய ‘எச்சரிக்கை மணி'யாக இருந்திருக்கக்கூடும். அங்கிருந்து சுதாரித்துக்கொண்ட அர்ஜென்டினா அடுத்தடுத்த போட்டிகளை வரிசையாக வென்று தங்களது குரூப்பில் முதலிடத்தைப் பிடித்தது. ரவுண்ட் ஆஃப் 16-ல் ஆஸ்திரேலியாவை எளிதில் வீழ்த்தி, காலிறுதியில் நெதர்லாந்தை எதிர்கொள்ள வருகிறது. மெஸ்ஸி ஒவ்வொரு போட்டியிலும் தனது வேகத்தையும் உத்வேகத்தையும் அதிகரித்து வருகிறார். உலகக்கோப்பைப் போட்டிகளில் மரடோனாவின் சாதனையை முறியடித்து 9 கோல்களை எட்டியிருக்கிறார். மெஸ்ஸிக்குத் தோளோடு தோள் நிற்கும் தளபதிகளாக அல்வரஸ், டீ பால், லட்டாரோ மார்ட்டினஸ், எமிலியானோ மார்ட்டினஸ் ஆகியோரும் சிறப்பாகப் பங்களித்து வருகின்றனர். அர்ஜென்டினாவின் கனவு பலிக்குமா என்பதைக் காண இன்னும் மூன்று போட்டிகளே காத்திருக்க வேண்டும்.

ரெனார்டு
ரெனார்டு

சிறிய அணிகள் பெரிய அணிகளை வீழ்த்தியதை அதிசயம் ஆச்சர்யம் என ஒரு வர்ணிப்புக்காகப் பேசினாலும், உண்மையிலேயே அந்த அணிகளின் கடின உழைப்பிற்கும், உத்வேகத்திற்கும் கிடைத்த வெற்றிகள்தான் அவை. எந்தச் சிறிய அணிக்கும் முழுமையாக சௌகரியமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஜெர்மனியை வீழ்த்திய போட்டியில் ஜப்பான் அணி வெறும் 17% மட்டுமே பந்தைத் தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்தது. இவ்வளவு குறைவான சமயத்திற்கு பந்தை வைத்திருந்து உலகக் கோப்பையில் ஒரு போட்டியை வேறெந்த அணியுமே வென்றதில்லை. சவுதி அரேபியா அர்ஜென்டினாவை வீழ்த்திய சமயத்திலும் சவுதியின் பயிற்சியாளர் ஹெர்வ் ரெனார்டு வீரர்களிடம் ஆவேசமாகப் பேசிய வீடியோ ஒன்றும் வைரலானது. ‘மெஸ்ஸி அட்டாக் செய்துவருகிறார். நீங்கள் ஒன்றுமே செய்யாமல் நிற்கிறீர்கள். வேண்டு மானால் அங்கேயே அவருடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்கிறீர்களா? Come on guys! This is the World Cup! Give everything!’ என அவர் பேசியிருந்தார். சவுதி வீரர்கள் இரண்டாம் பாதியில் உயிரைக் கொடுத்து ஆடி வென்றார்கள். இதுதான் இந்த உலகக்கோப்பையில் அத்தனை சிறிய அணிகளின் கதையாட லாகவுமே இருந்தது. தென்கொரிய வீரர் சன் ஹெங் மின் போர்ச்சுகலை வீழ்த்திவிட்டு சிந்திய கண்ணீர், உழைப்பின் அறுவடையைக் காத்திருந்து தரிசித்த பேரானந்தத்தின் வெளிப்பாடு.

கிலியன் எம்பாப்பே
கிலியன் எம்பாப்பே

எக்கச்சக்க உத்வேகக் கதைகளையுமே இந்த உலகக்கோப்பை பொதிந்து வைத்துள்ளது. கடைசியாக 2002-ல் நாக் அவுட்டுக்கு முன்னேறியபோது செனகல் அணியின் கேப்டனாக இருந்தவர் சீசே. அவர்தான் இப்போது அந்த அணியின் பயிற்சியாளர். 2002-க்குப் பிறகு இப்போதுதான் அந்த அணி நாக் அவுட்டுக்கு முன்னேறியது. ரவுண்ட் ஆஃப் 16-ல் வெளியேறினாலும், ஆப்பிரிக்க நாடாக இந்த அளவு சாதித்ததே ஊக்கமளிப்பதுதான்.

இதுவரை ஒரு முறைகூட கோப்பையை வெல்லாமல் பல முறை நாக் அவுட்டிற்கு முன்னேறியிருக்கும் நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் லூயிஸ் வான் ஹால் ஒரு புற்றுநோய்ப் போராளி. புரோஸ்டேட் கேன்சரால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டே அணியைப் பயிற்றுவித்துவருகிறார். அதே நெதர்லாந்து அணியின் பிலிண்ட் இதய பாதிப்பு கொண்டவர். அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு அவரும் கலக்கிவருகிறார்.

செனகல் டீம்
செனகல் டீம்
சன் ஹெங் மின்
சன் ஹெங் மின்

‘கோல்டன் பூட்' க்கான அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் இப்போது வரை பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே முதலிடத்தில் இருக்கிறார். இந்த உலகக்கோப்பையில் மட்டும் காலிறுதிச் சுற்றுக்கு முன்பு வரை 5 கோல்களை அடித்திருக்கிறார். 23 வயது இளம் வீரரான எம்பாப்பே கடந்த உலகக்கோப்பையிலேயே ஸ்டாராகப் பரிமளிக்கத் தொடங்கி விட்டார். பிரான்ஸ் வென்றிருந்த அந்த உலகக்கோப்பையில் மட்டும் 4 கோல்கள் அடித்திருந்தார். இதுவரையில் உலகக்கோப்பையில் மட்டும் 11 போட்டிகளில் 9 கோல்களை அடித்திருக்கிறார். ரொனால்டோவின் எண்ணிக்கையைக் கடந்துவிட்டார். மெஸ்ஸியை சமன் செய்துவிடுவார். அதுவும் அவர்கள் ஆடியதைவிட பாதிக்கும் குறைவான போட்டிகளில் எம்பாப்பே இதைச் சாதித்திருக்கிறார். அடுத்த தலைமுறையில் கோலோச்சப் போகும் இந்தப் புதுநாயகனின் எழுச்சிக் கதையே, பிரான்ஸ் அணியின் பெரும்பலமாகவும் இருக்கிறது.

பிலிண்ட்
பிலிண்ட்

அர்ஜென்டினாவிற்குத் தொடக்கத்தில் வழங்கப்பட்ட எச்சரிக்கை பிரேசில், போர்ச்சுகல் போன்ற அணிகளுக்குக் கொஞ்சம் தாமதமாக வழங்கப்பட்டது. பிரேசிலுக்குக் கேமரூனும் போர்ச்சுகலுக்குக் கொரியாவும் அந்த அதிர்ச்சியை வழங்கி எச்சரித்திருக்கின்றன. பிரேசிலும் போர்ச்சுகலும் எந்த அளவுக்கு அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறதோ அந்த அளவுக்கு முன்னேற முடியும்.

லூயிஸ் வான் ஹால்
லூயிஸ் வான் ஹால்
ஜப்பான் ரசிகர்கள்
ஜப்பான் ரசிகர்கள்

போட்டிகளைக் கடந்து, சர்ச்சைகளுக்கும் அரசியலுக்கும் பஞ்சமில்லை. LGBTQ-க்கு ஆதரவாக பேச விதிக்கப்பட்ட தடையை பலத்த எதிர்ப்பிற்கு பிறகு ஃபிஃபா விலக்கியிருக்கிறது. ஃபிஃபா அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜெர்மனி வீரர்கள் வாயை மூடிக்கொண்டு எடுத்த குரூப் போட்டோ இணையத்தில் பயங்கர வைரலாகியிருந்தது. மூன்று பெண் நடுவர்களை ஆண்களுக்கான போட்டியில் பயன்படுத்தி ஃபிஃபாவும் தன் பங்குக்குப் புரட்சி செய்திருக்கிறது. உலகக் கால்பந்து ரசிகர்களெல்லாம் ஒரே இடத்தில் குழுமியிருப்பதால் கத்தாரின் ஒட்டக சவாரிக்கும் கடும் மவுசாம். ஒட்டகமெல்லாம் ஓவர் டியூட்டி பார்த்துக்கொண்டிருக்கிறதாம்!

இந்த உலகக்கோப்பை ஒளித்து வைத்திருக்கும் அதிசயங்கள் இதோடு நிற்கப்போவதாகத் தெரியவில்லை. கடைசி 10 நாள் ஆட்டங்கள் பெரும் பரபரப்பானதாக இருக்கக்கூடும். அதிசயமே வியந்துபோகும் அதிசயங்கள்கூட நிகழக்கூடும். காத்திருப்போம்!