கட்டுரைகள்
Published:Updated:

அலியின் அரசியலும் அந்த ஒரு சாம்பியன்ஷிப்பும்!

முகமது அலி
பிரீமியம் ஸ்டோரி
News
முகமது அலி

நெஞ்சம் மறப்பதில்லை

விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அவர்கள் களமிறங்கும் ஒவ்வொரு போட்டியுமே அதி முக்கியமானதுதான். ஆடுகின்ற அத்தனை போட்டிகளிலுமே உயிரைக் கொடுத்துதான் ஆடுவார்கள். ஆனால், அவர்கள் சார்ந்த வரலாற்றுச் சுவடுகள் என எடுத்துக் கொண்டால் அதில் நிச்சயமாக அத்தனை போட்டிகளுக்கும் இடம் இருக்கப்போவதில்லை. ரஜினிகாந்த் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் அந்த ‘பாட்ஷா'க்கு இருக்கும் மவுசும் காலம் கடந்து பேச வைக்கும் தன்மையும் வேறு படங்களுக்கு வாய்க்கவில்லையே. அதேமாதிரிதான் விளையாட்டுக்கும். சச்சின் எத்தனையோ சதங்கள் அடித்திருந்தாலும் அந்த ‘ஷார்ஜா' மணல் புழுதியை எதிர்கொண்டு நின்று அடித்த சதம் மட்டும் எப்போதுமே ஸ்பெஷலானதுதான். இப்போது சதுரங்கக் கட்டங்களில் எத்தனை மாயாஜாலங்கள் நிகழ்த்தப்பட்டாலும் உலகப்போருக்கு நிகராக பாவிக்கப்பட்ட அந்த பாபி ஃபிஷர் - போரிஸ் ஸ்பாஸ்க்கி ஆட்டத்தை மறக்க முடியுமா? தோல்வியின் எல்லைக்கே சென்று மீண்டெழுந்து, மெத்வதேவை 5 மணி நேரம் போராடி ஆஸ்திரேலிய ஓப்பனில் வீழ்த்திய நடாலின் வீரதீர ஆட்டத்தை வேறு ஆட்டங்களோடு ஒப்பிட முடியுமா? இப்படி ஒவ்வொரு விளையாட்டிலுமே அதன் நட்சத்திரங்கள் மறக்கவே முடியாத அளவுக்குத் தங்களின் நெஞ்சுரத்தை வெளிக்காட்டிய வெகு சிறப்பான போட்டிகளைப் பற்றித்தான் இந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை' தொடரில் காணவிருக்கிறோம்.

அலியின் அரசியலும் அந்த ஒரு சாம்பியன்ஷிப்பும்!

முகமது அலிக்குப் பெரிய அறிமுகமெல்லாம் தேவை இருக்காது. உலகமெங்கும் கொண்டாட்டப்பட்ட மாவீரன். குத்துச்சண்டைக்காக மட்டுமல்ல, சமநிலையற்ற சமூகத்தின் மீதான அவரின் கோபமும்தான் அவரை உலகறியச் செய்தது. ரோம் ஒலிம்பிக்ஸில் 18 வயது இளைஞனாகத் தங்கம் வென்று அந்தப் பதக்கத்தைக் கழுத்திலிருந்து கழற்றவே மாட்டேன் எனப் பெருமிதம் பொங்க நின்றவரை, அதே பதக்கத்தை ஓஹியோ நதிக்கரையில் வெறுப்போடு வீச வைத்தது அமெரிக்க வெள்ளை இனத்தவரின் நிறவெறி. அந்த ஓஹியோ நதிக்கரையிலிருந்துதான் காஸியஸ் க்ளே, முகமது அலியாக மாறுவதற்கான தூபம் போடப்பட்டது. முகமது அலியின் குத்துச்சண்டை நாள்கள் முழுவதுமே அந்த ஓஹியோ நதிக்கரையில் மூட்டப்பட்ட நெருப்பின் ஜுவாலை கனன்றுகொண்டேதான் இருந்திருக்கிறது. 1964-ல் தன்னுடைய உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிக்காட்டிக் கொண்டிருந்த சமயத்தில் சீனியரான லிஸ்டனுக்கு சவால்விட்டார் அலி. பேட்டர்சனை வீழ்த்தி லிஸ்டன் வென்று வைத்திருந்த ஹெவி வெய்ட் சாம்பியன்ஷிப்பை, லிஸ்டனிடமிருந்து அலி வென்று அமெரிக்கக் குத்துச்சண்டை வரலாற்றில் புது சகாப்தமாக உருவெடுக்கத் தொடங்கினார். லிஸ்டனிடமிருந்து அலி அந்த சாம்பியன்ஷிப்பை வென்றதைப் போல அலியிடமிருந்து அந்த சாம்பியன்ஷிப்பை வெல்லவே முடியவில்லை. ஆடுகின்ற போட்டிகளிலெல்லாம் எதிராளிகளுக்கு நாக் அவுட்டைப் பரிசாக அளித்தார். தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே குவித்துக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில்தான் சில அழுத்தமான காரியங்களை அலி நிகழ்த்திக் காட்டத் தொடங்கினார். அது பாக்ஸிங் வளையத்திற்குள் அல்ல, வெளியே அரசியல் சதுரங்கத்தில் நிகழ்த்தப்பட்டது.

காஸியஸ் க்ளே அதிகார பூர்வமாக முகமது அலி எனப் பெயரை மாற்றிக்கொண்டார். மக்களிடையே நிறவெறி பிரிவினைவாதம் போன்றவற்றிக்கு எதிராக காத்திரமான உரைகளைப் பேசத் தொடங்கினார். ராணுவ சேவை என்பது எல்லா அமெரிக்கர்களுக்கும் கட்டாயமாக இருந்தது. அப்படி இணைந்து வியட்நாம் போருக்குச் செல்ல அவர் மறுத்தார். ‘வியட்நாம் போர் மனிதத்தன்மையற்ற செயல்’ என அரசுக்கு எதிராகவே கலகக்குரலை எழுப்பினார். விளைவு, அலியின் மீது பாரபட்சமில்லாமல் வழக்குகளும் தடைகளும் பாய்ந்தன.

அலியின் அரசியலும் அந்த ஒரு சாம்பியன்ஷிப்பும்!

எந்த வீரனிடமும் சண்டையிட்டு அலி இழக்காத அந்த ஹெவி வெயிட் சாம்பியன்ஷிப்பை அரசியல் பேசியதற்காக, அதிகாரத்திற்கு எதிராக நின்றதற்காக இழக்க நேர்ந்தது. சிறைத் தண்டனையோடு பாக்ஸிங்கில் ஈடுபடுவதற்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. நான்கு ஆண்டுகள் முகமது அலி அந்த பாக்ஸிங் ரிங்கிற்குள் நுழையவே இல்லை. சிறுவயதில் அலியின் சைக்கிளை யாரோ திருடிவிட அந்தத் திருடனைத் தண்டிக்கவே அலி பிரதானமாகக் குத்துச்சண்டை பயின்றார். சைக்கிளுக்காகவே அவ்வளவு ஆத்திரம் அடைந்தவர் தன்னுடைய சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பறித்ததற்காக எவ்வளவு ஆத்திரம் கொண்டிருக்கக்கூடும். அந்த ஆத்திரம் அவ்வளவையும் அலி வெளிக்காட்டிய ஆண்டுதான் 1974.

அலியின் அரசியலும் அந்த ஒரு சாம்பியன்ஷிப்பும்!

நீதிமன்றம் அலியின் மீதான தடைகளை யெல்லாம் 1970-களின் தொடக்கத்தில் நீக்கிவிட, அலி மீண்டும் பாக்ஸிங்கிற்குத் திரும்பினார். அலி தடைக்காலத்தில் இருந்த சமயத்தில் ஹெவி வெய்ட் சாம்பியன்ஷிப் ஃப்ரேஷியரிடம் வந்து சேர்ந்திருந்தது. தடையிலிருந்து மீண்டு வந்த வேகத்தில் ஃப்ரேஷியரிடம் சண்டைக்கு நின்றார் அலி. ‘The match of the Century' என இந்தப் போட்டி அழைக்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புடன் ஆடப்பட்ட இந்தப் போட்டியில் அலி தோல்வியடைந்தார். அலியின் கரியரில் அவர் அடைந்த முதல் தோல்வி அது. தன்னுடைய சாம்பியன்ஷிப்பை மீண்டும் தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்கிற அலியின் கனவு தகர்ந்தது. ஃப்ரேஷியரிடம் ரீ மேட்ச் கேட்டு ஃப்ரேஷியரை வீழ்த்தினாலும் அலி ஹெவி வெயிட் சாம்பியன்ஷிப்பை வெல்ல முடியவில்லை. ஏனெனில், ஃப்ரேஷியரே அதற்குள் சாம்பியன்ஷிப்பை இழந்திருந்தார். ஃப்ரேஷியரை வீழ்த்தி ஃபோர்மன் அந்த ஹெவி வெய்ட் சாம்பியன்ஷிப்பை வென்றிருந்தார்.

அலியின் அரசியலும் அந்த ஒரு சாம்பியன்ஷிப்பும்!

இப்போது அலி ஃபோர்மனை சவாலுக்கு அழைக்கிறார். அலி Vs ஃபோர்மன் ஹெவி வெய்ட் சாம்பியன்ஷிப் போட்டி ‘Rumple in the Jungle' என்ற பெயரில் காங்கோ நாட்டில் நடந்தது. அந்தச் சமயத்தில் உலகம் முழுவதிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டியாக இது இருந்தது. தொலைக்காட்சியில் மட்டுமே 100 கோடி பேர் இந்தப் போட்டியைக் கண்டு களித்திருக்கின்றனர். இந்தப் போட்டியின்போது அலிக்கு 32 வயது. ஃபோர்மனுக்கு 25 வயது. வீழ்த்தவே முடியாதவர் எனும் நிலையிலிருந்து அலி ஒரு படி கீழே இறங்கிய நிலையில் இருந்தார். சில வீரர்களிடம் வீழ்ந்தும் போயிருந்தார். ஆனால், ஃபோர்மன் 40-0 என பிரமிக்க வைக்கும் ரெக்கார்டை வைத்திருந்தார். கிட்டத்தட்ட லிஸ்டனை வீழ்த்தியபோது அலி என்ன ஃபார்மிலிருந்தாரோ, அதே ஃபார்மில்தான் ஃபோர்மனும் இருந்தார். அலிக்கு மிகப்பெரிய சவால் காத்திருந்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே போட்டி தொடங்கியது. போட்டியின் தொடக்கத்தில் அலி கொஞ்சம் குத்துகளை விடுகிறார். ஆனாலும் ஃபோர்மன் அலிக்கு இடம் கொடுக்கத் தயாராக இல்லை. அலி எதிர்பார்க்காத வேகத்தில் தொடர்ச்சியாக பதிலடி குத்துகளை அலியின் மீது இறக்குகிறார். அலி தடுமாறுகிறார். தாக்குதல் ஆட்டத்தைத் தவிர்த்துத் தற்காப்பு ஆட்டத்திற்குச் செல்கிறார். கைகளைக் காப்பாகக் கொண்டு தொடர்ந்து அலி குத்துகளை வாங்கிக் கொண்டே இருக்கிறார். இது முழுக்க முழுக்க ஃபோர்மனின் ஆட்டமாக, அவரின் எண்ணப்படி வித்தைகள் நிகழும் களமாக மாறத் தொடங்கியது.

அலியின் அரசியலும் அந்த ஒரு சாம்பியன்ஷிப்பும்!

ஒரு கட்டத்தில் அலி ஒரு ட்விஸ்ட் கொடுக்கிறார். திடீரென இதுவரை இல்லாத வேகத்தில் ஃபோர்மனுக்குக் குத்துகளை விட ஆரம்பிக்கிறார். திருப்பித் தாக்குகிறார். வாங்கியதற்கெல்லாம் சேர்த்து வைத்து பதிலடி கொடுக்கிறார். ஃபோர்மனால் தற்காப்புக்காகக்கூட எதையும் முயல முடியவில்லை. சுருண்டு விழுகிறார். அலி வென்றுவிட்டார். போட்டி முடிந்த பிறகுதான் அலி கைக்கொண்ட வித்தையைப் பற்றித் தெரிய வருகிறது. Rope a Dope என்ற முறையின்படி ரிங்கிலேயே சாய்ந்தபடி, எதிராளியின் குத்துகளை சமாளித்துத் தற்காத்துக்கொண்டே இருந்து, எதிராளி சோர்வடையும் போது தாக்குதலைத் தொடங்க வேண்டும். இதைத்தான் அலி அந்தப் போட்டியில் செய்திருந்தார். உடல்பலத்தால் மட்டுமல்ல மனபலத்தாலும்தான் இந்தப் போட்டியை அலி வென்றார். அடங்க மறுத்ததால் அதிகாரம் பறித்த அந்த ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை ஏறக்குறைய ஏழெட்டு ஆண்டுகள் கழித்து அலி மீண்டும் வென்றார். அலி இவ்வளவு காத்திரமாக உலகம் முழுக்கக் கொண்டாடப்படுவதற்கு இந்தப் போட்டியுமே ஒரு காரணம் என்பதை மறுக்கவே முடியாது.