கட்டுரைகள்
Published:Updated:

இலக்கணம் உடைப்போம்; விதிமுறைகள் தகர்ப்போம்! - வல்லாதிக்கத்திற்கு வழிகோலும் அமெரிக்க ஆட்டம்!

ஃப்ளிக்கர் பால்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃப்ளிக்கர் பால்

அமெரிக்க ராணுவத்தில் வீரர்களைத் தயார்படுத்தும் பிரத்யேகப் பயிற்சிகளில் ஒன்றாக ஃபிளிக்கர் பாலும் வைக்கப்பட்டிருக்கிறது. வீரர்கள் குழுவாக இணைந்து இந்த ஆட்டத்தை ஆடியே ஆக வேண்டும்.

கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது. அதிர்ச்சிகள், ஆச்சர்யங்கள் மட்டுமல்ல, இந்த உலகக்கோப்பை சர்ச்சைகளுக்குமே பெயர் போனதாகத்தான் இருக்கிறது. அதிலும், குறிப்பாக ஆட்டத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் அந்த ஆஃப் சைடு விதிமுறையைப் பற்றி ரசிகர்களால் தெளிவாகப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இந்த உலகக்கோப்பையின் முதல் கோலாக ஈக்வடாரைச் சேர்ந்த வெலன்சியா அடித்த கோலே ஆஃப் சைடாகத்தான் ஆகியிருந்தது. ஆஃப் சைடாக மட்டுமே 3 கோல்களை அடித்து அர்ஜெண்டினா 1-2 என சவுதி அரேபியாவிடம் தோற்றிருக்கிறது. ஒவ்வொரு முறை நடுவர் கொடியை உயர்த்தி ஆஃப் சைடு அறிவிக்கும்போதுமே, ‘இதை ஏன் ஆஃப் சைடாக அறிவித்தார்கள்’ எனும் குழப்பம் மேலெழுவதைத் தடுக்கவே முடியாது. எப்படி கால்பந்துக்கு ஒரு ஆஃப் சைடோ அப்படித்தான் கிரிக்கெட்டுக்கு ஒரு டக்வொர்த் லீவிஸ் விதிமுறை. மழை பொழியும்போது எந்த அடிப்படையில் ரன்னைக் கணக்கிட்டு வெற்றியாளர்களைத் தீர்மானிக்கிறார்கள் என்பது பல சமயங்களில் புரியாத புதிராகத்தான் இருக்கும். இப்படி ஒவ்வொரு விளையாட்டிலுமே ஏதோ ஒரு விதிமுறை அதிசிக்கலானதாகவும் விளங்கிக்கொள்ளக் கடினமானதாகவும் இருக்கத்தான் செய்கிறது. கஷ்டப்பட்டு ஒரு விதிமுறையை உருவாக்கி அது யாருக்கும் புரியாமல்போவதற்கு விதிமுறைகளே இல்லாமல் ஆடினால் என்ன? இப்படி ஒரு கேள்வி தோன்றிய அந்த மனிதர்தான் இந்த ‘ஃப்ளிக்கர் பால்' (Flicker Ball) என்கிற விளையாட்டைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். ஆம், இந்த விளையாட்டில் மூளையைக் கசக்கி யோசிக்கும் அளவுக்கு எந்த ஒரு விதிமுறையுமே கிடையாது. அதுதான் இந்த விளையாட்டின் சிறப்பம்சம்.

இலக்கணம் உடைப்போம்; விதிமுறைகள் தகர்ப்போம்! - வல்லாதிக்கத்திற்கு வழிகோலும் அமெரிக்க ஆட்டம்!

பந்தைக் கையில் பற்றிக்கொண்டு எதிர்முனையில் 6 அடி உயரத்தில் இருக்கும் துளைக்குள் பந்தைப் போட வேண்டும். இதுதான் இந்த ஆட்டத்தின் அடிப்படை. பந்தை வைத்து ஆடப்படும் ஆட்டம் எனும்போது ஒவ்வொரு விளையாட்டுக்கென்றும் பிரத்யேகமாக பந்தின் தன்மை வரையறுக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்கே இந்த விளையாட்டிற்கென்று பிரத்யேகமாக ஒரு பந்தே கிடையாது. கால்பந்தை வைத்து ஆடலாம். ரக்பி பந்து, கூடைப்பந்து என எதை வைத்து வேண்டுமானாலும் ஆடலாம். அதேமாதிரி, வீரர்கள் பந்தை வீசிப் புள்ளி எடுக்க வேண்டிய அந்தத் துளைக்கும் எந்த வரையறையும் கிடையாது. வட்ட வடிவத்திலோ, சதுரமாகவோ ஓட்டையாக இருக்கும் எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கால்பந்திலோ ஹாக்கியிலோ வளைக்குள் பந்தைத் தள்ளினால் மட்டுமே கோல் வழங்கப்படும். இங்கே அந்த வட்டத்திற்குள் பந்து விழுந்தால் 2 புள்ளிகளும் அந்த வட்டத்தைச் சுற்றிய வெளிப்பகுதியில் பந்து பட்டால் 1 புள்ளியும் வழங்கப்படும். கால்பந்தில் கோல் கம்பத்தில் பந்து பட்டால்கூட கோல் வழங்கப்படுமென்றால் எப்படியிருக்கும்? அதுதான் இங்கே செய்யப்படுகிறது. இந்த விளையாட்டிற்கென வரையறுக்கப்பட்ட மைதானம்கூடக் கிடையாது. புல்தரையோ கரடுமுரடான மேடு பள்ளமோ எங்கு வேண்டுமாமாலும் ஆடலாம். வீரர்களின் எண்ணிக்கைக்கும் பெரிய கட்டுப்பாடெல்லாம் இல்லை. அணியாக ஆடவேண்டும் என்பதால் குறைந்தபட்சமாக ஒரு அணிக்கு 2 பேரிலிருந்து எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடலாம்.

இலக்கணம் உடைப்போம்; விதிமுறைகள் தகர்ப்போம்! - வல்லாதிக்கத்திற்கு வழிகோலும் அமெரிக்க ஆட்டம்!

அடிப்படையான இந்த விஷயங்களில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எங்கே வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஆடலாம். ஆயினும், இந்த விளையாட்டு ஆடப்படும் முறைக்கென்று சில எளிய விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இரு அணியிலும் ஆடும் வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளவோ மூர்க்கமான செயல் முறைகளில் ஈடுபடவோ கூடாது. பந்தைப் பறித்துக்கொண்டு ஓடும் வீரர் 5 நொடிகளுக்கு மேல் பந்தைக் கையில் வைத்திருக்கக்கூடாது. அதேமாதிரி, பந்தைக் கையில் வைத்திருக்கும் போது முன்பக்கமாகவோ பின்பக்கமாகவோ மூன்று அடிகளை மட்டுமே எடுத்து வைக்க வேண்டும். அதற்குள் பந்தைத் தன் சகவீரர்களிடம் கை மாற்றிவிட வேண்டும். இப்படி பாஸ் ஆகி பாஸ் ஆகி பந்து அந்த இலக்கை நோக்கிச் சென்றடைய வேண்டும்.

அமெரிக்காவில் உள்ள கல்லூரி ஒன்றில் 1951-ம் ஆண்டில் இந்த விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்போதும் அமெரிக்காவில்தான் இந்த விளையாட்டு பரவலாக ஆடப்படுகிறது. பெரிய விதிமுறைகள் எதுவும் கிடையாது. பெரிதாக பொருள் செலவழிக்க வேண்டிய அவசியமும் இல்லை. கையில் கிடைப்பதை வைத்துக்கொண்டு ஆடிவிடலாம் என்பது இந்த விளையாட்டின் மிகப்பெரிய பாசிட்டிவ் அம்சம். அதற்காக அமெரிக்கச் சிறுவர்கள் பொழுதுபோக்குக்காகத் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஆடும் ஆட்டமென இதைக் குறைத்தும் மதிப்பிட்டுவிட வேண்டாம். ‘ஃபிளிக்கர் பால்' கொஞ்சம் தீவிரமான பின்னணியைக் கொண்டதாகவே இருக்கிறது.

இலக்கணம் உடைப்போம்; விதிமுறைகள் தகர்ப்போம்! - வல்லாதிக்கத்திற்கு வழிகோலும் அமெரிக்க ஆட்டம்!

அமெரிக்க ராணுவத்தில் வீரர்களைத் தயார்படுத்தும் பிரத்யேகப் பயிற்சிகளில் ஒன்றாக ஃபிளிக்கர் பாலும் வைக்கப்பட்டிருக்கிறது. வீரர்கள் குழுவாக இணைந்து இந்த ஆட்டத்தை ஆடியே ஆக வேண்டும். வீரர்களின் ஆட்டத்திறனையும் செயல்பாட்டையும் அவர்களின் உயர் அதிகாரிகள் நேரடியாகக் கண்காணித்து மதிப்பிடும் வழக்கமும் இருக்கிறது. இந்த இடத்தில்தான் சிக்கலற்ற இந்த விளையாட்டின் விதிமுறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மூன்று அல்லது ஐந்து நொடிகளுக்கு மேல் பந்தைக் கையில் வைத்துக்கொண்டிருக்க முடியாது. மூன்று அடிகளுக்கு மேல் பந்தை வைத்துக் கொண்டு நகர முடியாது.

இந்த விதிகளை வீரர்கள் பின்பற்றும் போது அவர்கள் தனிப்பட்டு தான் என்கிற எண்ணத்தோடு செயல்படும் தன்மை குறையும். தனிப்பட்ட விருப்புவெறுப்புகளை மறந்து சகவீரர்களுடன் அணியின் நலனை முன்னிறுத்தி ஆட வேண்டும் என்கிற ஒருங்கிணைவு அதிகரிக்கும். அப்படிப்பட்ட எண்ணத்தோடு ஆடவில்லையெனில் வெளியில் நிற்கும் உயரதிகாரி கடுப்பாகிவிடுவாரே! அவருக்காகவாவது ஒன்றிணைந்து ஆடித்தான் ஆகவேண்டும்.

பெரும் ராணுவ பலத்தைக் கையில் வைத்துக்கொண்டு வல்லாதிக்கம் செய்து கொண்டிருக்கும் ஒரு நாடு தங்கள் பலத்தைக் கூட்டிக்கொள்ள விளையாட்டையும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதே ஆச்சர்யம்தான்!