Published:Updated:

ரஷீத் - நபி கூட்டணியை சமாளிக்குமா தென்னாப்பிரிக்கா? முதல் வெற்றி யாருக்கு?

ரஷீத் - நபி கூட்டணியை சமாளிக்குமா தென்னாப்பிரிக்கா? முதல் வெற்றி யாருக்கு?
ரஷீத் - நபி கூட்டணியை சமாளிக்குமா தென்னாப்பிரிக்கா? முதல் வெற்றி யாருக்கு?

ரஷீத் கான் - முகமது நபி கூட்டணியை சமாளிக்கவில்லையென்றால், தென்னாப்பிரிக்கா இன்னொரு தோல்வியைச் சந்திக்கவேண்டியிருக்கும்

ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இன்றுதான் முதல் முறையாக தென்னாப்பிரிக்க அணியுடன் விளையாடப்போகிறது. இந்த முதல் போட்டியை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. மனதளவில் தளர்ந்திருக்கும் தென்னாப்பிரிக்க அணியைத் தாக்க இதைவிட சரியான தருணம் அவர்களுக்குக் கிடைத்திடாது. ஆனால், இந்த வாய்ப்பை ஆப்கானிஸ்தான் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுமா என்பதுதான் கேள்வி.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சஹாலின் சுழலில் மொத்தமாகக் காலியானது தென்னாப்பிரிக்க அணி. இடது கை பேட்ஸ்மேன்கள், கூக்ளியில் அவுட்டாகியிருந்தாலும் பரவாயில்லை, வழக்கமான லெக் ஸ்பின்னர்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதுதான் உச்சகட்ட கொடுமை. அதை ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டால் நிச்சயம் தென்னாப்பிரிக்காவுக்குத் தண்ணி காட்டலாம்.

#SAvAFG
#SAvAFG

முகமது நபி - இலங்கைக்கு எதிராகத் தன் ஆஃப் ஸ்பின்னால் மிரட்டினார். இடது கை பேட்ஸ்மேன்கள் நிறைந்திருக்கும் தென்னாப்பிரிக்க அணியிலும் நிச்சயம் சிக்கலை ஏற்படுத்துவார். இவர் ஒருபக்கம் நெருக்கடி கொடுக்க, மறுபக்கம் ரஷீத் தன் வித்தைகளைக் காட்டவேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இவரது சுழல் எடுபடாமல் போனாலும், இலங்கைக்கு எதிராக மீண்டு வந்தார். ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் காயமடைந்தது சற்று பின்னடைவாக அமையலாம்.

முன்பெல்லாம் முதல் ஸ்பெல்லிலேயே முஜீப்பைப் பயன்படுத்தும் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக அவரை அணியிலேயே சேர்க்கவில்லை. இங்கிலாந்து ஆடுகளங்களில் அது எடுபடாது என்று நினைத்து நிறுத்திவிட்டார்கள் போல. ஆனால், டி காக் ஆடும்போது பழைய யுக்தியைப் பயன்படுத்துவது பயன்தரலாம். அவரோடு ஆடும் ஓப்பனர்களுமே சொதப்பி வருவதால், முஜீப் வீசும் ஒரு நல்ல ஓவர், தொடக்க ஜோடியைப் பிரிக்க வாய்ப்புண்டு. அவரை இன்று களமிறக்குவது ஆப்கானிஸ்தானுக்குச் சாதகமாக இருக்கக்கூடும்.

Amla
Amla

தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் இந்தப் போட்டியிலாவது முன்னேற வேண்டும். கேப்டன் டுப்ளெஸ்ஸி தவிர்த்து யாரும் பெரிய இன்னிங்ஸ் ஆடுவதில்லை. நன்றாக ஆட்டத்தைத் தொடங்கும் வான் டெர் டூசன் அரைசதம் கடப்பதற்குள் வெளியேறிவிடுகிறார். இவர்கள் இருவரும் இன்று நல்லதொரு பார்ட்னர்ஷிப் அமைப்பது முக்கியம்.

ஹஷிம் அம்லா... ஒருகாலத்தில் இவர்தான் அதிவேக 4000, அதிவேக 5000 என்றெல்லாம் சாதனை படைத்துக்கொண்டிருந்தார் என்று நினைக்கும்போது பரிதாபமாக இருக்கிறது. அம்லா நல்ல பேட்ஸ்மேன் என்ற அறிகுறியே ஏதும் இல்லை. ஆப்கானிஸ்தானின் சுழலைச் சமாளித்தால் மட்டுமே தென்னாப்பிரிக்கா வெற்றியை நினைத்துப்பார்க்க முடியும்.

#SAvAFG
#SAvAFG

இதுவரை

தென்னாப்பிரிக்கா

vs இங்கிலாந்து - 104 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி

vs வங்கதேசம் - 21 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி

vs இந்தியா - 6 விக்கெட் வித்யாசத்தில் தோல்வி

vs வெஸ்ட் இண்டீஸ் - மழையால் ஆட்டம் ரத்து

ஆப்கானிஸ்தான்

vs ஆஸ்திரேலியா - 7 விக்கெட் வித்யாசத்தில் தோல்வி

vs இலங்கை - 34 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி (DLS)

vs நியூசிலாந்து - 7 விக்கெட் வித்யாசத்தில் தோல்வி

Duplessis
Duplessis

பிளேயிங் லெவன்

ஆப்கானிஸ்தான் அணியில் முஜீப் ஆடினால் நன்றாக இருக்கும். ஆனால், கூடுதல் பேட்ஸ்மேன் வேண்டும் என்று அவர்கள் நினைப்பதால், அவருக்கு இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. தவ்லத் சத்ரான் ஃபிட்னஸ் பிரச்னையில் அவதிப்படுவதால் அவருக்குப் பதிலாக இறங்கவும் வாய்ப்புண்டு. தென்னாப்பிரிக்க அணியில், தொடர்ந்து சொதப்பிவரும் அம்லாவுக்குப் பதிலாக டுமினியையே சேர்க்கலாம். மிடில் ஆர்டராவது பலப்படும். அதேசமயம் மார்க்ரம் ப்ரமோட் ஆவது, அவருக்கும் கைகொடுக்கும்.

தென்னாப்பிரிக்கா (உத்தேச அணி) : குவின்டன் டி காக், எய்டன் மார்க்ரம், ஹஷிம் அம்லா / ஜே.பி.டுமினி, ஃபாஃப் டுப்ளெஸ்ஸி, ராஸி வான் டெர் டூசன், டேவிட் மில்லர், ஆண்டைல் ஃபெலுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், பியூரான் ஹெண்ட்ரிக்ஸ், ககிசோ ரபாடா, இம்ரான் தாஹிர்.

ஆப்கானிஸ்தான் (உத்தேச அணி) : ஹஸ்ரதுல்லா சசாய், நூர் அலி சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்ரதுல்லா ஷாஹிதி, நஜிபுல்லா சத்ரான், முகமது நபி, குல்பாதீன் நைப், இக்ரம் அலி கில், ரஷீத் கான், தவலத் சத்ரான் / முஜீப் உர் ரஹ்மான், ஹமீது ஹசன்.

பின் செல்ல