கட்டுரைகள்
Published:Updated:

வரலாற்றைத் துளைத்த தங்கத்தோட்டா!

வரலாற்றைத் துளைத்த 
தங்கத்தோட்டா!
பிரீமியம் ஸ்டோரி
News
வரலாற்றைத் துளைத்த தங்கத்தோட்டா!

நெஞ்சம் மறப்பதில்லை-5|

ஒலிம்பிக்ஸ் போட்டிகள்மீதான வசீகரமும் மரியாதையும் எந்தச் சமயத்திலும் குறைந்ததாகத் தெரியவில்லை. விளையாட்டுலகில் எத்தகைய மகத்தான சாதனைகளைச் செய்திருந்தாலும் ஒலிம்பிக்ஸ் பதக்கத்தை வெல்லவில்லையெனில் அவையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படாது. அத்தனை உலக நாடுகளும் ஒன்றாக ஒரே இடத்தில் முட்டி மோதிக்கொள்வதால்தான் இத்தனை மவுசு.

ஒவ்வொரு நாடும் இந்த ஒலிம்பிக்ஸ் அரங்கை தங்களின் வல்லாதிக்கத்தை நிரூபித்துக்காட்டுவதற்கான இன்னொரு களமாகப் பார்க்கிறார்கள். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் வர்த்தகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் மட்டும் சண்டை இல்லை. விளையாட்டுரீதியிலும் சண்டைதான். ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் முதலிடத்தை யார் எட்டுகிறார்களோ அவர்களே உலகளவில் பெரும் ஆதிக்கம் மிக்க நாடாக கருதிக்கொள்கிறார்கள். ஒலிம்பிக்ஸ் என்பது வெறும் விளையாட்டுத் தொடர் என்ற இடத்திலிருந்து நகர்ந்து அதற்கும் மேலான ஓர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை எட்டியிருக்கிறது.

இப்படியான சூழலில் ஒவ்வொரு நாடுமே ஒலிம்பிக்ஸ் தொடரில் தங்களுக்கான தருணங்களை உருவாக்கிக்கொள்வது ரொம்பவே முக்கியம். அந்த வகையில் 1896 ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸிலிருந்து இந்தியா அந்த உலக அரங்கில் தனக்கான தருணங்களை எப்படி உருவாக்கியது எனப் பார்த்தோமெனில், அத்தனை அதிகமாக இந்தியாவிற்கெனத் தனித் தருணங்களே இருக்காது.

வரலாற்றைத் துளைத்த 
தங்கத்தோட்டா!
வரலாற்றைத் துளைத்த தங்கத்தோட்டா!

தொடக்கக் காலத்தில் ஹாக்கியில் மட்டுமே இந்திய அணி முத்திரை பதித்துவந்தது. அதிலும் 1980-க்குப் பிறகும் சமீபத்திய வெற்றிக்கும் இடைப்பட்ட சமயத்தில் பெரிதாக சாதித்தே இல்லை. லியாண்டர் பயஸ், கர்ணம் மல்லேஸ்வரி எனச் சிலர் அவ்வப்போது ஒலிம்பிக்ஸில் சாதித்தாலும், அந்த உச்சபட்ச தங்கப்பதக்கம் மட்டும் இந்தியாவிற்கு சாத்தியப்படாமலேயே இருந்தது. ஒரு காலத்தில் தங்கமாக வென்று குவித்த ஹாக்கி அணியும் சோடைபோகத் தொடங்கியது. இப்படியான சூழலில்தான் 2008-ல் அந்த அதிசயம் நடந்தது.

பீஜிங் ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று அசத்தியிருந்தார் அபினவ் பிந்த்ரா. இந்திய விளையாட்டு வரலாற்றில் சமூக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வெற்றி இது. அபினவ் பிந்த்ரா சிறு வயதிலிருந்தே துப்பாக்கி சுடுதலில் பெரிய பெரிய சாதனைகளைச் செய்யத் தொடங்கினார். 1998-ல் அபினவ் பிந்த்ராவிற்கு வெறும் 15 வயதுதான். அப்போதே காமன்வெல்த் தொடரில் கலந்துகொள்ளத் தகுதிபெற்றார். 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்டபோது அபினவ் பிந்த்ராவிற்கு 17 வயதுதான். இதன் பிறகுதான் தொடர்ச்சியாக 4 முறை காமன்வெல்த்திலும் தங்கம் வென்றார்.

ஆனால், இந்தியாவின் புகழைப் பெருக்க உலக அரங்கில் இந்தியாவின் தங்கத் தருணத்தை உருவாக்க இவை மட்டுமே அபினவ்க்குப் போதுமானதாக இல்லை. அப்போதுதான் 2008-ல் பீஜிங்கில் அந்த ஒலிம்பிக்ஸ் போட்டி தொடங்கியது. சிட்னி மற்றும் ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸில் சாதிக்க முடியாததை பீஜிங்கில் அபினவ் பிந்த்ரா சாதித்துக் காட்டினார்.

வரலாற்றைத் துளைத்த 
தங்கத்தோட்டா!
வரலாற்றைத் துளைத்த தங்கத்தோட்டா!

துப்பாக்கிசுடுதல் போட்டி நடைபெறும் அரங்குகள் எப்போதுமே பெரும் நிசப்தத்தைத் தன்னகத்தே கொண்டதாக இருக்கும். அந்த அமைதி குடிகொண்ட பீஜிங் அரங்கில் அபினவ் பிந்த்ரா ஒரு ஞானியின் பேரமைதியோடு தனது இலக்கை மட்டுமே குறிவைத்து முன்னேறிக்கொண்டிருந்தார். விளைவு, அபினவின் தோட்டாக்கள் ஒவ்வொன்றும் உச்சபட்ச மதிப்பெண் வளையங்களைத் துளைக்கத் தொடங்கின. எல்லா எதிர் நாட்டு வீரர்களையும் பின்னுக்குத் தள்ளி அபினவ் பிந்த்ரா முன்னேறிக்கொண்டே இருந்தார். ஆனால், ஒரே ஒரு ஆள் மட்டும் அபினவை விடாமல் விரட்டிக்கொண்டே வந்தார். கடைசிச் சுற்று வரை வந்துவிட்ட அந்த பின்லாந்து வீரர், அபினவ் பிந்த்ராவிற்கு இணையாகத் தொடர்ந்து புள்ளிகளை எடுத்துக்கொண்டே வந்தார்.

கடைசி ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே மீதமிருக்கிறது. அந்த ஒரு வாய்ப்புதான் வரலாறாக மாறியது. பின்லாந்து வீரர் அந்த வாய்ப்பில் 9.7 புள்ளிகளை எடுத்தார். அபினவ் பிந்த்ரா தனது கடைசி வாய்ப்பில் இலக்கை குறிவைத்துத் துளைக்கத் தயாரானார். ஹாக்கிக்குப் பிறகு இந்திய தேசத்திற்கான தங்கத் தருணத்தை அந்தத் தோட்டாவே உருவாக்கிக்கொடுத்தது. அந்தக் கடைசி வாய்ப்பில் வளையத்தின் மையத்தைத் துல்லியமாகத் துளைத்து 10.8 புள்ளிகளை எடுத்துத் தங்கப்பதக்கத்தை வென்றார்.

வரலாற்றைத் துளைத்த 
தங்கத்தோட்டா!
வரலாற்றைத் துளைத்த தங்கத்தோட்டா!

1980-ல் ஹாக்கியில் இந்திய அணி தங்கம் வென்றபோது கடைசியாக அந்த உலக அரங்கில் இந்திய தேசத்தின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, 2008-ல்தான் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றபோது மீண்டும் அந்த உலக அரங்கில் இந்தியாவின் தேசிய கீதம் ஒலித்தது. அந்த உணர்ச்சிப்பெருக்குமிக்க தருணம் இந்திய சமூகத்தில் விளையாட்டு சார்ந்து ஏற்படுத்திய தாக்கம் ரொம்பவே பெரிது.

சமீபத்தில் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் நடந்ததல்லவா? அந்த ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தார்கள். இந்தியா சார்பில் டோக்கியோவிற்குச் சென்று முகாமிலிருந்த பல வீரர், வீராங்கனைகளும் தங்களது இன்ஸ்பிரேஷனாகக் குறிப்பிட்டது என்னவோ அபினவ் பிந்த்ராவைத்தான். இந்தியப் பெற்றோர்களின் மனதில் விளையாட்டு சார்ந்து ஒரு பெரும் நம்பிக்கையை அபினவ் பிந்த்ராவின் சாதனையும், அவர் வென்ற அந்த ஒலிம்பிக்ஸ் தங்கமும் ஏற்படுத்தியிருந்தன.

வரலாற்றைத் துளைத்த 
தங்கத்தோட்டா!
வரலாற்றைத் துளைத்த தங்கத்தோட்டா!

அபினவ் பிந்த்ரா தன்னுடைய சுயசரிதைப் புத்தகத்திற்கு `A Shot at History' எனப் பெயரிட்டிருப்பார். உண்மையிலே அது வரலாற்றில் துளைக்கப்பட்ட வெற்றித் தோட்டாதான். ஆனால், பலருக்கும் முன்னோடியாகப் பார்க்கப்பட்ட அபினவ் பிந்த்ரா, பின்னாள்களில் சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரத் தூதராக நின்று அவற்றை விளம்பரப்படுத்தியதெல்லாம் வேதனையின் உச்சம்.