T20 உலகக்கோப்பையில், பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர், 'Heart broken' எமோஜியைப் பதிவிட்டு பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததை வருத்தத்துடன் சுட்டிக்காட்டி இருந்தார். இதனிடையே, அந்த ட்வீட்டுக்கு இந்திய வீரர் முகமது ஷமி பதில் ட்வீட் செய்திருந்தார். அதில், “சாரி பிரதர் (sorry brother) இதுதான் கர்மா" என்று அதில் தெரிவித்திருந்தார்.
இந்த ட்விட்டானது இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், "கிரிக்கெட் வீரர்கள் வெறுப்பை வளர்க்கக் கூடாது" என்று முகமது ஷமியின் ‘கர்மா’ ட்வீட்டுக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய ஷாகித் அப்ரிடி, “வெறுப்பை வளர்க்கும் செயல்களில் நாம் ஈடுபடக்கூடாது. இதுபோன்ற செயல்களைச் செய்ய ஆரம்பித்தால், சாமானியர்களிடம் இருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்? நாம் கிரிக்கெட் வீரர்கள். இந்த விளையாட்டின் முன்மாதிரிகளாக இருக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களிடையே வெறுப்பை வளர்க்க வேண்டாம். விளையாட்டின் மூலம்தான் இந்தியா - பாகிஸ்தான் உறவுகள் மேம்படும். பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடுவதைக் காண நாங்கள் விரும்புகிறோம். அதே சமயம் இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாடுவதை நாங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் ஓய்வுபெற்ற வீரராகவே இருந்தாலுமே இப்படிச் செய்யக்கூடாது. அப்படியிருக்கையில், தற்போதைய அணியில் அங்கம் வகிக்கும் நீங்கள் இதைத் தவிர்த்திருக்க வேண்டும்" என்று சமிக்கு அப்ரிடி அறிவுரை வழங்கியிருக்கிறார்.