மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியா வந்திருக்கிறார். அவர் நேற்று மும்பை வந்திருந்தார். மும்பையில் ரிசர்வ் வங்கிக்கு சென்று அதன் தலைவர் சக்தி காந்த தாஸை சந்தித்துப் பேசினார். இருவரும் பல்வேறு துறைகள் குறித்தும், உலகின் பொருளாதர நிலை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பில் கேட்ஸ் தனது மனைவியுடன் இணைந்து தொண்டு நிறுவனத்தின் மூலம் உலகம் முழுவதும் சேவையாற்றி வருகிறார். தனது தொண்டு நிறுவனம் மூலம் சேவைகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் வழங்குவது குறித்து ஆய்வு செய்வதற்காக இந்தியா வந்திருக்கிறார். மும்பையில் உள்ள பில் கேட்ஸ்ஸை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன் மனைவி அஞ்சலியுடன் சென்று சந்தித்துப்பேசினார். இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படத்தை சச்சின் டெண்டுல்கர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்த பலரும் இரு ஜாம்பவான்கள் என்று புகழ்ந்துள்ளனர். சச்சின் தனது சோஷியல் மீடியாவில், `நாங்கள் வாழ்நாள் முழுவதும் மாணவர்கள்தான். குழந்தைகள் நலம் குறித்து தெரிந்து கொள்ள அருமையான வாய்ப்பு கிடைத்தது.
உலகம் எதிர்கொண்டுள்ள சவால்களை தீர்ப்பதற்கான வழிகள் குறித்து விவாதித்தோம்' எனக் குறிப்பிட்டுள்ளார். இருவரும் சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகளை பில் கேட்ஸ் தொண்டு நிறுவனம் செய்திருந்தது. சச்சினும் தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் சேவையாற்றி வருகிறார். இந்தியா வந்திருந்த பில் கேட்ஸ் அளித்துள்ள பேட்டியில், இந்தியா எதிர்காலத்திற்கான நம்பிக்கையை கொடுத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.