Published:Updated:

முதல் செஞ்சுரி... பிரஸ் மீட்... சக வீரர்கள் அழுத்தம்... சச்சின் பகிர்ந்த நாஸ்டால்ஜியா!

அழுத்தமான சூழ்நிலையை நான் விரும்புகிறேன். ஏனென்றால், கடந்தகாலத்தில் நான் ஏதாவது செய்திருக்கிறேன் என்றால் அது அழுத்தத்தினால்தான். - சச்சின்

சச்சின்
சச்சின்

இந்திய அணியின் பேட்டிங் லெஜண்ட் சச்சின், தன்னுடைய முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நினைவை பகிர்ந்துள்ளார். 1990-ல் மான்செஸ்டரில் டெஸ்ட் போட்டியை விளையாட இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. சுற்றுப் பயணத்தின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சச்சின் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிக ரன்களை எடுத்துள்ளதால் சர்வதேச பத்திரிகையாளர்களைச் சந்திக்க வேண்டும் என அணியின் மற்ற வீரர்கள் அழுத்தம் கொடுத்ததாகக் கூறினார்.

சச்சின்
சச்சின்

இந்தியா டுடே ஏற்பாடு செய்திருந்த சிறப்பு சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய சச்சின், ``ஆமாம், எனக்கு அது நினைவிருக்கிறது. ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. உடை மாற்றும் அறையில் மற்ற வீரர்கள் என்னை பயமுறுத்திக்கொண்டிருந்தனர். நான் அதற்கு முன்பு, சர்வதேச பத்திரிகையாளர்களைச் சந்தித்தது இல்லை; போட்டிக்குப் பின்பும் பேட்டி கொடுத்தது இல்லை. `இன்று, நீங்கள் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளீர்கள். பத்திரிகையாளர்கள் எல்லா வகையான கேள்விகளையும் உங்களிடம் கேட்கப்போகிறார்கள்” எனக் கூறி அழுத்தம் கொடுத்ததாகக் கூறினார்.

மேலும், ``மாதவ் மந்திரி அந்த நேரத்தில் எங்கள் அணியின் மேலாளராக இருந்தார். அவர் என்னிடம் `இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை’ என்று கூறினார். `நான் இங்குதான் இருக்கப்போகிறேன். நீ செய்தியாளர்களிடம் வெறும் போட்டியைக் குறித்துப் பேச வேண்டும். பேசு' என்று மேலாளர் ஆறுதலாக இருந்ததாகவும் பகிர்ந்துள்ளார்.

சச்சின்
சச்சின்

``நான் சதம் அடித்ததும் மற்ற வீரர்கள் பால்கனியிலிருந்து சென்றுவிடவில்லை. ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, கிரண் மற்றும் பிற வீரர்களும் நின்றுகொண்டிருந்தது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. கிரிக்கெட் என்பது தனிநபரின் விளையாட்டு அல்ல. அணியிலிருக்கும் 11 வீரர்களையும் பொறுத்தது. அணி களத்தில் என்ன செய்கிறது என்பதுதான் கிரிக்கெட் விளையாட்டு. ஆனால், இதை நான் அப்போது ஏற்கத் தயாராக இல்லை. மற்ற வீரர்களை விட தனிநபர் அதிகமாக பங்களிப்பதை நீங்கள் காணலாம். ஆனால், மற்ற வீரர்களின் பங்களிப்பில்லாமல் அது சாத்தியமில்லை. எனக்கு இதைப் பற்றியெல்லாம் தெரியாது. மற்ற வீரர்கள் இந்த விஷயங்களையெல்லாம் என்னிடம் சொல்லவே முயற்சி செய்துள்ளனர்.

அழுத்தமான சூழ்நிலையை நான் விரும்புகிறேன். ஏனென்றால், கடந்தகாலத்தில் நான் ஏதாவது செய்திருக்கிறேன் என்றால் அது அழுத்தத்தினால்தான். மக்களும் என்னை அதனால் நம்பத் தொடங்கினார்கள். எனவே, இதைத் தடையாக எடுத்துக் கொள்கிறீர்களா அல்லது சாதகமாக எடுத்துக்கொள்கிறீர்களா என்பது உங்களைப் பொறுத்தது” என்றும் சச்சின் தெரிவித்துள்ளார்.

news credit : indiatoday