இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். விசாகப்பட்டினம் மைதானம் சென்னையைப் போல் ஸ்லோ பிட்சாக இருக்காது. பேட்ஸ்மேன்களுக்கு கைகொடுக்கும் வகையில்தான் இருக்கும். ``நாங்கள் முதலில் பந்துவீசத்தான் முடிவு செய்தோம். இந்த பிட்ச் சேஸிங் செய்ய சிறப்பாக இருக்கும்" என்ற கருத்தை முன்வைத்தார் இந்திய கேப்டன் கோலி.
இந்திய தரப்பில் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா இருவரும் களமிறங்கினர். சென்னை சேப்பாக்கத்தில் ஹோப் - ஹெட்மயர் ஆடிய ஆட்டம் ரசிகர்களுக்கு நினைவிருக்கும். 288 என்ற டார்கெட்டை அசால்டாக சேஸ் செய்திருந்தனர். எனவே, பெரிய டார்கெட்டை செட் செய்ய வேண்டும் என்ற பொறுப்புடன் ஆடினார்கள் இந்திய வீரர்கள்.
முதல் 20 ஓவர்கள் ரோஹித்- ராகுல் இருவரும் அவசரம் காட்டவில்லை. களத்தில் நீண்டநேரம் நிலைத்திருந்தால் பின்னர் அதிரடி காட்டலாம் என முடிவு செய்திருந்தனர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் நிதானமாக ஆட ராகுல்தான் சற்று அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தார். ரோஹித் சர்மா அரைசதம் அடிக்க 67 பந்துகளை எடுத்துக்கொண்டார். 70 ரன்கள் எடுத்திருந்தபோது ரோஹித் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஹெட்மயர் வீணடித்தார். 30-ஓவர்கள் கடந்த பின்னரும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட் வீழ்த்த முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் புலம்பினர். ரோஹித் சர்மாவின் கேட்சை ஹெட்மயர் வீணடித்தது அவர்களுக்கு மேலும் பின்னடைவு ஏற்படுத்தியது.
அதன்பின்னர் ரோஹித் அட்டாக் செய்ய ஆரம்பித்தார். கே.எல்.ராகுலுக்கு முன்னதாக தனது சதத்தைப் பதிவு செய்தார். சர்வதேச ஒருநாள் போட்டியில் ரோஹித்தின் 28-வது சதமாக இது பதிவானது. 2019-ம் ஆண்டு ரோஹித் பதிவு செய்த 7-வது சதம் இது. அதேபோல் இந்த வருடம் ஒருநாள் தொடரில் 1,300 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். சதம் விளாசிய பின்னர், ரோஹித் தனது அதிரடியை தொடங்கினார். இதற்கிடையில் கே.எல்.ராகுல் தனது சதத்தை பதிவு செய்தார். சிறப்பாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 102 ரன்களுக்கு அவுட்டானார். ரோஹித் - கே.எல்.ராகுல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 227 ரன்களைச் சேர்த்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதுவும் ரோஹித்தின் சாதனையில் சேர்ந்தது. ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்களில் அதிகபட்ச ரன்களைப் பதிவு செய்தவர்கள் என்ற பட்டியலில் ரோஹித் கடந்த 7 வருடங்களாக முதலிடத்தில் உள்ளார்.
2013-ல் 209 ரன்கள்,
2014-ல் 264,
2015-ல் 150,
2016-ல் 171,
2017-ல் 208,
2018-ல் 162,
2019-ல் 159 ரன்கள் எடுத்துள்ளார். இது தனி நபர் அதிகபட்சமாகும்.
ஸ்ரேயஸ் ஐயர் - பன்ட் இருவரும் அதிரடிகாட்டினர். ஸ்ரேயஸ் 53, பன்ட் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்களைக் குவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் காட்ரெல் 2 விக்கெட்டுகளையும் பவுல், ஜோசப், பொல்லார்ட் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.