Published:Updated:

`இதுக்காகவே வீ லவ் யூ தோனி..!' - ஒரு வெறித்தன ரசிகனின் உலகக்கோப்பை  அனுபவம்

தோனி
தோனி

`India are chasing 275... Not an easy task' என கமென்ட்ரி கேட்டதும், லேசாக அல்லையைப் பிடித்தது. வீசிய முதல் பந்தில் ஜெர்க்கானார் சேவாக். அதுக்கு அடுத்ததாக மலிங்கா வீசிய கவட்டையடி பந்தில் வெளியேறினார் சேவாக்.

குடும்பமாக அமர்ந்து கிரிக்கெட் பார்த்த காலம். வந்தது 2011 உலகக்கோப்பை. மேட்சுக்கு முந்தைய நாள், தெரு முனைப் பிள்ளையாரைப் பார்க்கச் சென்றிருந்தார் அம்மா. `வழக்கம்தானே' என நானும் உடன் சென்றிருந்தேன். `யார் பேருக்கு அர்ச்சனை' எனப் பூசாரி கேட்க, `தோனி பேருக்கு' என்றார் அம்மா. `இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு, `தோனியேய்ய்ய்ய்` என தேங்காயை உடைத்தேன். அடுத்த நாள், ஆரம்பித்தது இலங்கையுடனான இறுதி ஆட்டம்.

274 ரன்களை இலக்காக வைத்தது இலங்கை அணி. 2011 காலகட்டத்தில் 250+ டார்கெட் என்றாலே கொஞ்சம் பீதியாகத்தான் இருக்கும். இருந்தாலும், சச்சின், சேவாக், கம்பீர், யுவராஜ் போன்ற நம்பிக்கை நாயகர்களை நம்பிக்கொண்டு பயத்தை வெளிக்காட்டாமல் மேட்ச் பார்க்க ஆரம்பித்தேன். `India are chasing 275... Not an easy task' என கமென்ட்ரி பாக்ஸிலிருந்து வந்த குரல், லேசாக அல்லையைப் பிடித்தது. இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சற்று ஜெர்க்கானார் சேவாக். இத்தனைக்கும் அந்த உலகக்கோப்பை முழுவதும், முதல் பந்திலேயே ஒரு மேஜிக்கை நிகழ்த்துவார். முதல் பந்தில் மேஜிக் அவுட், இரண்டாம் பந்தில் சேவாக்கே அவுட். மலிங்காவின் சிரிப்பு, அவ்வளவு எரிச்சலைத் தந்தது!

தோனி
தோனி

மறுமுணையில், `கிரிக்கெட்டின் கடவுள்' இருந்தார். இரண்டு பவுண்டரிகளை விளாசிவிட்டு, கண்களில் தேங்கிநின்ற கண்ணீரைக் கொஞ்சம் துடைத்துவிட்டார். மீண்டும், ஏழாவது ஓவரை எக்கி எறிய வந்தார் மலிங்கா. அவர் வீசிய புயல் வேகப் பந்தில் அவுட்சைடு எட்ஜாகி அவுட்டானார், `கிரிக்கெட் கடவுள்' சச்சின். இனி நம் தெருமுனையில் இருக்கும் கடவுள்தான் அணியைக் காப்பாற்ற வேண்டுமெனக் கண்ணீர் கன்னாபின்னாவென வழிந்தோடியது. துள்ளிக்குதித்து ஆட்டம் போட்டது இலங்கை அணி. அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த மொத்த குடும்பத்தினரும் ஒருவரையொருவர் மௌனமாகப் பார்த்துக்கொண்டோம். எல்லோர் கண்களிலும் துக்கம் மட்டுமே! துக்கத்தைத் தூக்கியெறிய நினைத்து, அண்ணனுடன் டீக்கடைக்குச் சென்றுவிட்டேன். எங்களைப் போலவே ஏரியாவிலிருக்கும் பலபேர், ஸாம்பீக்களாக உலவிக்கொண்டிருந்தார்கள். தெருவில் மயான அமைதி! `ஒரு டீ' என்றுகூட யாரும் வாய் திறந்து கேட்கவில்லை. வெறும் சைகை மொழிதான்.

துக்கத்தை விரட்டுவதில் டீயும் தோற்றுப்போயிருந்தது. மேட்ச் என்ன நிலைமையில இருக்குன்னு பார்ப்போம். கம்பீர், யுவராஜ்லாம் இருக்கான்ல. திடீர்னு இந்த மேட்ச் தலைவன் தோனி ஆடிட்டான்னா' என எங்களை நாங்களே தேற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். அதுவரை அந்த உலகக்கோப்பையில் தோனி பெரிய இன்னிங்ஸ் ஏதும் ஆடமாலிருந்தது, ரொம்பவே வருத்தமாக இருந்தது. வீடு வந்ததும், 110 ரன்கள் என்கிற மூன்று இலக்க ஸ்கோரைப் பார்த்ததும்தான் மனம் சற்று ஆறுதல் அடைந்தது. கோலியும் காம்பீரும் மெள்ள மெள்ள ஸ்கோரை உயர்த்திக்கொண்டிருந்தார்கள். இழந்த நம்பிக்கை லேசாக எட்டிப்பார்த்தது. `என்னமோ நடக்கப்போகுது. ஆனா, அது என்னன்னுதான் தெரியலை' என்ற ஆர்வத்திலும் பயத்திலும் கண் இமைக்காமல் டி.வி-யையே பார்த்துக்கொண்டிருந்தேன். தில்ஷன் வீசிய சுழலில் சிக்கினார் கோலி. நம்பிக்கை லெவல் மீண்டும் ஜீரோ பக்கம் சென்றது. கோலி பெவிலியனை நோக்கி நடக்க, 7-ம் நம்பர் ஜெர்ஸி குறுக்கே கிராஸானது. வழக்கமாக யுவராஜ் களமிறங்கும் இடத்தில் தோனி இறங்குகிறார். `இது என்ன புதுக் கூத்து' என இந்தியா மீது எழுந்த மொத்தக் கோபமும் தோனி பக்கம் சென்றது.

என்னைப்போலவே ஆடியன்ஸ் சிலரும் அதிர்ச்சியோடு பார்த்தனர். சில நிமிடங்களிலேய அதிர்ச்சி கலைந்து, ஆரவாரம் கூடியது. அடிக்கவேண்டிய ஸ்கோரின் அளவும், பந்தின் எண்ணிக்கையும் சரிசமமாக வந்தது. தோனியும் காம்பீரும் பந்தை பவுண்டரி லைனுக்கு விரட்டினர். 93 பந்துகளுக்கு 92 ரன்கள். அதன் பிறகு காம்பீர் அடித்த பவுண்டரியைப் பார்த்த தோனி அருகே வந்து, `இதுதான் நண்பா நான் உன்கிட்ட கேட்டேன்' என்ற பாணியில் ஏதோ முணுமுணுத்தார். 52 பந்துகளுக்கு 52 ரன்கள் என்ற நிலையில் தோனியுடன் போராடிய படைத் தளபதி காம்பீர், ஃபெராரா வீசிய பந்தில் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.

தோனி
தோனி

அடுத்து களமிறங்கிய யுவராஜுக்கும் தோனிக்கும் சின்னதாய் முட்டிக்கொண்டது. அதன்பின் இருவரும் ஒன்று சேர்ந்து இந்தியாவை வெற்றியின் பாதையை நோக்கி அழைத்துச் சென்றனர். ரசிகர்களாகிய நாங்களும் ஒட்டிக்கொண்டு உடன் சென்றோம். 23 பந்துகளுக்கு 26 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும் அந்தப் பதற்றம் மட்டும் போனபாடில்லை. 21 பந்துகளில் 21 ரன்கள் என்ற நிலையில் யுவராஜ் தனது ஓட்டத்தில் சுணங்க, ரன் அவுட்டிலிருந்து ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்தார் தோனி. அதன்பின், ஆட்டத்தின் வேகம் சூடுபிடித்தது. 15 பந்துகளுக்கு 7 ரன்கள் என்ற நிலை வந்ததும் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கினார்கள் ரசிகர்கள். மயான அமைதியில் இருந்த தெரு, திருவிழாக்கோலம் சூடியது. இலங்கை வீரர்களின் முகத்தில் அவ்வளவு சோகம்.

`Absolutely magnificent...' என்ற மெல்லிய குரலில் ஆரம்பித்த ரவி சாஸ்திரியன் குரல், சற்றும் எதிர்பாராத தோனியின் ஃபினிஷிங் சிக்ஸரைப் பார்த்ததும் `Dhoni... Finishes off him style... India Lift the world cup after 28 years' என உரக்கக் கத்தியது. சந்தோஷத்தில் அழுகையே வந்துவிட்டது. அது ஒரு ஜாலியான டென்ஷன். யுவராஜ் அழ, சச்சின் அவரைத் தழுவ, மொத்த ரசிகர்கள் கூட்டமும் கொண்டாட... அந்த நெகிழ்ச்சியை இப்போதும்கூட உணர முடிகிறது. கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்கிறது.

கிரிக்கெட் வெறும் விளையாட்டுதான். இருந்தாலும் இந்த கிரிக்கெட், ஏதோவொரு வகையில் நம்மோடு பிணைந்துவிட்டது. அதுவும் 28 வருடங்கள் கழித்து இந்திய அணி உலகக் கோப்பையை ஏந்தும்போது, பெரியவர்களும் குழந்தைகளாய் மாறி கண்ணீர் வடித்தனர். இந்த மொத்த கொண்டாட்டத்திற்கும் முக்கியக் காரணம், தோனி என்கிற `கேப்டன் ஆஃப் தி ஷிப்'. எந்தவொரு நிலையிலும் தனது டெம்பரைக் கொஞ்சமும் இழக்காதவர் அவர். மனநிலையை சமநிலையில் வைத்திருப்பதால்தான், அவர் என்றும் `கேப்டன் கூல்'. அவர் கிரிக்கெட்டுக்கு வந்த புதிதில், அவரை `சடையனா'கத்தான் எங்களுக்குத் தெரியும். ஆமாம், அவரை அப்படித்தான் எங்கள் வீட்டார் அழைப்பார்கள்.

தோனி
தோனி

இலங்கையுடனான அந்த இறுதி ஆட்டத்தில்கூட, சைனஸ் பிரச்னையில் அவதிப்படும் தோனி, மூக்கை உறிஞ்சிக்கொண்டே ஒவ்வொரு ரன்களையும் அடித்திருப்பார். தோற்றுப்போய் தவறான விமர்சனங்களுக்கு ஆளானாலும் பரவாயில்லை என நினைத்துக்கொண்டு, 3 டவுடனில் இறங்கிய தோனியின் தன்னம்பிக்கையே ஏழுக்குப் பின்னாலிருக்கும் தாரக மந்திரம். இதுக்காகவே என்றென்றைக்கும் வீ லவ் யூ தோனி.

தோனியை பெஸ்ட் ஃபினிஷர் என்று சொல்வார்கள். ஆனால், பல்வேறு கோப்பைகளைப் பெற்றுத்தந்த தோனியை, இந்திய அணியின் வெற்றிப்பாதையின் தொடக்கமென்றுதான் சொல்ல வேண்டும். 15 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான், தன்னை இந்திய அணிக்குள் நுழைத்துக்கொண்டார். திரும்பிப் பார்த்தால், தோனி பயணித்திருக்கும் பாதை ஒரு வெற்றி நாயகனின் பாதை. தலைவன் இருக்கிறான்... எப்போதுமே இருப்பான்!

மகேந்திர சிங் தோனி... இந்தப் பேரு போதாதா கட்டுரையைப் படிக்க! #15YearsOfDhoni
அடுத்த கட்டுரைக்கு