
ரேஸ்: அனுபவம்

இங்கு சாம்பியன்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள்! - ஏதோ கேஜிஎஃப் படத்தின் வசனம் போல இருக்குனு நினைச்சுக்காதீங்க. JK Tyres Championship பார்த்துட்டு வந்தபோது தோன்றிய விஷயம் இது. வருடந்தோறும் புதிய புதிய சாம்பியன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது JK Tyres. இங்கிருந்து பல ரேஸர்கள் உலகளவில் போட்டிகளில் பங்கேற்கச் செல்கிறார்கள். இந்த வருடம் கூடுதல் ஸ்பெஷல் - JK Tyres-க்கு வயது 25. வெகு விமரிசையாக இந்த ஆண்டுப் போட்டிகள் நடந்து முடிந்தன.
உலகம் முழுவதும் மோட்டோ ஜிபி, ஃபார்முலா 1 போன்ற ரேஸ்கள் பிரபலமாக இருக்கும்போது, இந்தியாவில் அந்தக் குறையைப் போக்கும்விதமாக JK Tyres சாம்பியன்ஷிப் நடைபெறும். இந்த வருடம் இன்னும் சுவாரசியம் என்னவென்றால், புதிதாக எண்ட்யூரன்ஸ் லீக் கப் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.



மிகக் கடினமான இந்த சாம்பியன்ஷிப்பின் முதல் இரண்டு சுற்றுகளை நமது முந்தைய இதழ்களிலும் யூ-ட்யூப் சேனலிலும் பார்த்திருப்பீர்கள். 60 நிமிடத்தில் 20 - 20 - 20 நிமிடங்களாக ஒரு டீமில் உள்ள இரண்டு ரேஸர்கள் மாற்றி மாற்றி பைக்கை ஓட்ட வேண்டும். பைக் ஆக்ஸில் வளைஞ்சது, ப்ரேக் லாக் ஆனது - இப்படிப் பல தடைகள் வந்தாலும் 48 போட்டியாளர்கள் கலந்துகொண்ட ரேஸில் மோட்டார் விகடன் சார்பாக பங்கேற்ற நானும் நண்பரும் வெற்றிகரமாக 27-வது இடத்தில் ரேஸை நிறைவு செய்தோம். ப்ரொஃபஷனல் ரேஸர்ஸ் பங்கு கொண்ட இந்த ரேஸில் நாமும் இருந்தோம் என்பதே பெருமை தானே! இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று டிசம்பர் 16, 17, 18 கோயம்புத்தூர் கரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற்றது. அதில் ஆபிசியல் மீடியா பார்ட்னராக நாம் கலந்து கொண்டதோடு மட்டுமில்லாமல், ராயல் என்ஃபீல்டு Continental GT Cup மீடியா ரேஸிலும் பங்கேற்றோம். மீடியா ரேஸ் நிச்சயம் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
ராயல் என்ஃபீல்ட் பைக்குகளை நீங்க எங்கெல்லாம் பார்த்துள்ளீர்கள். போக்குவரத்து சிக்னல்ல, உயரமான மலைத்தொடர்ல, நேஷனல் ஹைவேஸ்ல - இப்படிப் பார்த்திருக்கலாம். ஆனா ரேஸ் ட்ராக்குல 650 சிசி கான்ட்டினென்ட்டல் ஜிடி பைக்கை வளைச்சு வளைச்சு ஓட்டுறதைப் பார்க்குறதே மோட்டோ ஆர்வலர்களுக்குத் தனி அனுபவம்தான்.

எண்ட்யூரன்ஸ் கப் முடிந்த நாளின் மதியத்தில் ராயல் என்ஃபீல்டு மீடியா ரேஸ் தொடங்கியது. மூன்று சுற்றுகளாக நடந்த இந்த ரேஸும், ஏதோ சாம்பியன்ஷிப் ரேஞ்சுக்கு... க்ராஷ்... பைக் பழுது... ட்ராக் ஃபைட் என்று சுவாரசியத்திற்குக் குறைவில்லாமல் இருத்தது. இந்தியா முழுவதும் இருந்து கலந்து கொண்ட 13 மீடியாக்களுடன் ரேஸ்.
ரேஸ்களின் அழகே யார் வெற்றி பெறுவார் என்பதைக் கணிக்க முடியாததே! கண்ணிமைக்கும் நேரத்தில் வெற்றியாளர் மாறி விடுவார். நீங்க ரேஸ் பிரியராக இருந்தால் JK டயர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை அவர்களது ஆபிஷியல் இணைய தளத்தில் லைவ்வாகப் பார்க்க முடியும்.
புதிதாக ஆரம்பித்திருக்கிற 2023 வருடத்தில் பல உலகப் புகழ் பெற்ற மோட்டோ ஜிபி மற்றும் ஃபார்முலா E ரேஸ்கள் இந்தியாவுக்கு வரவிருக்கின்றன. இந்த வருடம் இன்னும் பல சுவாரசியங்களுக்காகக் காத்திருப்போம்!