இந்தியாவில் விளையாட்டுத் துறைக்கான மிக உயரிய விருதான ’கேல் ரத்னா விருது’ ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29-ம் தேதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான ’கேல் ரத்னா விருதை’, கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவுக்கும் சேலத்தைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் தடகள வீரர் மாரியப்பனுக்கும் காணொளி காட்சி மூலம் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இவ்விருதைப் பெற்ற பாரா ஒலிம்பிக் தடகள வீரர் மாரியப்பன், சேலம் தீவட்டிப்பட்டியை அடுத்த பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்தவர்.

இவர், ’ரியோ டி ஜெனிரோ’வில் 2016-ல் நடந்த மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் பெற்றார். கடந்த 2017, ஜனவரி 25-ம் தேதி இந்திய அரசு இவருக்கு ’பத்மஶ்ரீ’ விருதினை அறிவித்தது. அதையடுத்து இப்போது ’ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது’ வழங்கப்பட்டுள்ளது.

விருது குறித்து மாரியப்பனிடம் பேசினேன். ''எனக்கு இந்திய அரசு கேல் ரத்னா விருது வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருது பெறுவதற்கு என்னை பரிந்துரைச் செய்த மாநில அரசுக்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடியரசு தலைவரின் கையால் இந்த விருது வாங்கியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உலகளவில் இந்தியாவின் புகழ் உயரப் பாடுபடுவேன். இன்னும் கடுமையாகப் போராடுவேன். தங்கப்பதக்கங்கள் தொடரும்'' என்றார்.