Published:Updated:

`ஜனாதிபதி அளவுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்!’ - பாகிஸ்தானில் விளையாடுவது குறித்து கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்

பாகிஸ்தான் நாட்டில் நிலவும் பாதுகாப்பு குறித்து வங்கதேச செய்தியாளர்களின் கேள்விக்கு கிறிஸ் கெய்ல் அதிரடியாகப் பதிலளித்துள்ளார்.

‘யுனிவர்சல் பாஸ்’ என அழைக்கப்படும் கிறிஸ் கெயல் தனது அதிரடியான ஆட்டத்தால் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ளார். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கெய்ல் டி-20 போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தாண்டு நடக்கும் டி-20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். தற்போது கெய்ல் வங்கதேச பிரிமீயர் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்

வங்கதேசத்தில் கெய்ல் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, `கிரிக்கெட் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பாதுபாப்பான இடமா' என்ற கேள்வி கெய்லிடம் முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்தவர், ``இன்றைய தேதிக்கு உலகளவில் பாகிஸ்தான் மிகவும் பாதுகாப்பான பகுதி. ஆமாம், பாகிஸ்தானில் ஜனாதிபதிக்குரிய பாதுகாப்பு உங்களுக்கும் கிடைக்கிறது. அப்புறம் என்ன பிரச்னை. வங்கதேசத்திலும் பாதுகாப்பு நன்றாக உள்ளது. வங்கதேசத்தில் நான் நன்றாகத்தானே இருக்கிறேன்' எனச் செய்தியாளர்களிடம் கேட்க, அவர்களும், `ஆமாம்' எனப் பதிலளித்தனர். ``ஹூம் இங்கு நன்றாகத்தான் இருக்கிறேன்’’ என்றார்.

ஓய்வு தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த கெய்ல், ``45 நல்ல நம்பர் என நினைக்கிறேன். அதுவரை விளையாடுவது எனது இலக்காகும். நான் கிரிக்கெட்டை மிகவும் உணர்வுபூர்வமாக விளையாடுகிறேன். நான் உடலளவில் வலுவாக இருக்கிறேன். நான் இப்போது மிகவும் இளமையாக உணர்கிறேன். டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அணியில் இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும்” எனக் கூறினார்.

கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது தொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது. இந்நிலையில்தான் கெய்லிடம் பாதுகாப்பு தொடர்பான கேள்வியை முன்வைத்தார்கள் வங்கதேச பத்திரிகையாளர்கள்.

2009-ம் ஆண்டு இலங்கை அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. லாகூரில் நடந்த டெஸ்ட் போட்டிக்காக இலங்கை வீரர்கள் வாகனத்தில் சென்றபோது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக வீரர்கள் உயிர்தப்பினர். இதையடுத்து, இலங்கை வீரர்கள் உடனடியாகத் தாயகம் திரும்பினர். இதன்பின் பாகிஸ்தானில் சென்று விளையாடுவதை மற்ற அணிகள் தவிர்த்து வந்தன.

இந்நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது.

அடுத்த கட்டுரைக்கு