Published:Updated:

ஒலிம்பிக் ஹீரோக்கள் - ஜாங் ஷான்: ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய போட்டியில் வென்ற தங்கமங்கை!

பாரம்பரியமாக ஆண்கள் ஜெயித்து வந்த ஒரு போட்டியில், 24 வயதுப் பெண் ஒருவர் திடீரென வந்து ஜெயித்துவிட்டுப் போனது சீரியஸான விளைவுகளை ஏற்படுத்திவிட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒலிம்பிக்ஸில் ஆண்களும் பெண்களும் ஒன்றாகக் கலந்து மோதும் போட்டிகளில் எப்போதுமே ஜெயிப்பது ஆண்கள்தான் (இப்படிப்பட்ட போட்டிகள் இப்போது கிடையாது).

இதனாலேயே, 'விளையாட்டுத்துறை யில் பெண்களைவிட ஆண்கள்தான் மேலானவர்கள்... ஆண்களால் சாதிக்க முடிந்த பல விஷயங்களைப் பெண்களால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது' என்ற கருத்து அழிக்க முடியாமல் பலர் மனதில் பதிந்துவிட்டது.

புகழ்பெற்ற வீராங்கனைகள் பலர் உருவானாலும் கூட, இந்தக் கருத்தை அவர்களாலும் மாற்ற முடியவில்லை!

நூறு மீட்டர் ஓட்டத்தில் வீரர்களின் சாதனைக்கும் வீராங்கனைகளின் சாதனைக்கும் இடையே சில மைக்ரோ நொடிகள்தான் வித்தியாசமாக இருக்கும். நீளம் தாண்டுதலில் ஆண்களைவிட பெண்கள் குறைவான தூரத்தைத்தான் தாண்டமுடியும். பளுதூக்குதல், உயரம் தாண்டுதல் என எல்லா விளையாட்டுகளிலும் இதே கதைதான்!

ஆனால், அதிகம் அறியப்படாத ஒரு பெண், திடீரென ஒலிம்பிக்ஸ் களத்தில் தோன்றி, பல ஆண்களைத் தோற்கடித்துத் தங்கம் வென்றார். ஒலிம்பிக்ஸில் ஆண்களும் பெண்களும் ஒன்றாகக் கலந்து கொள்ளும் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஒரே பெண் - ஜாங் ஷான்! சீன தேசத்து வீராங்கனை. கடந்த 1992-ம் ஆண்டு பார்ஸிலோனா ஒலிம்பிக்ஸில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் 'டபுள் ட்ராப் ஸ்கீட் ஷூட்டிங்' பிரிவில் தங்கம் வென்றவர்.

விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரை, சீனா ஒரு மர்ம தேசம். திடீரென யாராவது வீரர்கள், வீராங்கனைகள் வருவார்கள். சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை அள்ளுவார்கள். அவர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள் என்று யாருக்குமே தெரியாது. அடுத்த சில வருடங்களில் அவர்கள் பரபரப்பிலிருந்து ஒதுங்கி, காணாமல் போய் விடுவார்கள்!

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு, விளையாட்டு வீரர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் வைத்திருந்தது. வெற்றி பெற்றுவிட்டதற்காக அவர்கள் ரொம்ப ஆரவாரப்பட முடியாது. தங்களின் வெற்றிக் கதையை விளக்கமாகச் சொல்லி பரவசப்பட முடியாது.

நாட்டு மக்களும் அவர்களை பெரிய ஸ்டார்களாகத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட மாட்டார்கள். 'ஒஹோ... பதக்கம் ஜெயிச்சுட்டீங்களா?' என்று கேட்டுவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். கொஞ்சம் வயதாகித் திறமை குறைந்துவிட்டால், அவர்களை ஒதுங்கச் சொல்லிவிட்டு, அடுத்த தலைமுறையில் திறமைசாலிகளைத் தேட ஆரம்பித்து விடுவார்கள்.

ஜாங் ஷான்
ஜாங் ஷான்
Screenshot from YouTube
இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் தளர்த்திக் கொண்டு, சீனா போற்றிய ஒரே வீராங்கனை ஜாங் ஷான். அவர் ரொம்ப ஸ்பெஷல்!

சீனாவின் நான்சோங்க் நகரத்தில் பிறந்தவர் ஜாங் ஷான். பள்ளிக்கூடம் போனபோது, எட்டு வயதில் அவரைக் கூடைப்பந்து போட்டியில் சேர்த்துக் கொண்டார்கள். பந்தைப் பறித்துக்கொண்டு வேகமாக முன்னேறி, குறிபார்த்துக் கூடையில் எறிந்து, அணிக்கு வெற்றி தேடித் தருவதில் ஜாங் ஷான் கெட்டிக்காரி. ஜாங் ஷானால் அவரது பள்ளியின் கூடைப்பந்து டீம், மாகாண அளவில் புகழ்பெற ஆரம்பித்தது. ரொம்ப தூரத்தில் இருந்துகூட அவரால் குறிபார்த்து, அந்த வளையத்துக்குள் பந்தைப் போட முடிந்தது!

ஒலிம்பிக் ஹீரோக்கள்: ஜெஸ்ஸி ஓவன்ஸின் கால்கள் ஓடியது அவருக்காக மட்டுமல்ல!

பதினாறு வயதில் ஜாங் கூடைப்பந்து ஆடுவதைப் பார்ப்பதற்காக வந்த லோக்கல் துப்பாக்கி சுடுவோர் கிளப் தலைவர், இவரது குறிபார்த்துப் பந்தை எறியும் திறமையைக் கண்டு அதிசயித்துப் போய், ''பேசாமல் நீ துப்பாக்கிச் சுடக் கற்றுக்கொள்! உனக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது!'' என்று அட்வைஸ் செய்தார்.

அந்த நாளில்தான் அவர் வாழ்க்கையில் மகத்தான திருப்பம் நிகழ்ந்தது. அதற்கு முந்தின நாள்வரை துப்பாக்கியையே பார்த்திராத ஜாங் ஷான், துப்பாக்கி பிடித்தார்.

ஆனால், எட்டு ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்ஸில் தங்கப்பதக்கம் வாங்கப் போகிறோம் என்று அப்போது அவருக்குத் தெரியாது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துப்பாக்கிச் சுடுதலில் அவருக்குப் பிடித்தது 'டபுள் ட்ராப் ஸ்கீட்' பிரிவு. ரொம்பக் கஷ்டமான விளையாட்டு இது. எதிரெதிரே இருக்கும் இரண்டு கோபுரங்களிலிருந்து பொம்மைப் புறாக்கள் பறக்கவிடப்படும். ஒன்று - கோபுரத்தின் உயரத்திலிருந்து கீழ்நோக்கி எதிர்திசையில் பறக்கும். இன்னொன்று - மற்றொரு கோபுரத்தின் கீழேயிருந்து எதிர்திசையில் மேல்நோக்கிப் பறக்கும். இப்படி எதிரெதிர் திசைகளில் வேறு வேறு உயரங்களில் பறக்கும் இரண்டையும் சுட்டு வீழ்த்தவேண்டும். புறாக்களைப் பறக்க விடும் வரை துப்பாக்கியை இடுப்பருகே வைத்திருக்கவேண்டும். புறாக்கள் பறக்க ஆரம்பித்த பிறகே குறிபார்க்க முடியும்.

சவாலான இந்த விளையாட்டு கொஞ்சம் ஜாலியாகவும் இருந்ததால், ஜாங் ஷானுக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. ஐந்தே வருடங்கள்... இந்தப் பிரிவில் தேசிய சாம்பியன் ஆனார் அவர்!

1992-ம் ஆண்டு பார்ஸிலோனா ஒலிம்பிக்ஸுக்கு சீனா தன் குழுவை அனுப்பியபோது, அதில் ஜாங் ஷான் இடம்பிடித்தார். அப்போது ஒலிம்பிக்ஸில் மற்ற பல விளையாட்டுகளிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் பிரிவுகள் இருந்தபோதும், இதில் மட்டும் அப்படிக் கிடையாது. ஒரே பொதுப் பிரிவு... இருபாலாரும் பங்கேற்க வேண்டும்.

அதுவரை இந்தப் போட்டியில் கலந்துகொண்ட பெண்களில் பலர், முதல் சுற்றிலேயே வெளியேறிவிடுவார்கள். தங்கம், வெள்ளி, வெண்கலம் மூன்றையுமே ஆண்கள்தான் வெல்வார்கள்.

'போர்க்களங்களில் துப்பாக்கித் தூக்கி அனுபவம் பெற்றவர்கள் ஆண்கள். அதனால், அவர்களாலேயே இந்த விளையாட்டில் ஜெயிக்க முடியும்' என்று பலரும் நம்பினர்.

ஜாங் ஷான்
ஜாங் ஷான்
2021chengdu.com
ஆனால், பார்ஸிலோனாவில் கதை தலைகீழாக மாறியது! நாற்பது ஆண்கள், ஐந்து பெண்கள் கலந்து கொண்ட போட்டியில் அத்தனை பேரையும் தோற்கடித்து, இருநூறுக்கு இருநூறு பாயிண்ட்டுகள் எடுத்து, புதிய உலக சாதனை படைத்துத் 'தங்கமங்கை'யாக தலைப்புச் செய்தி ஆனார் ஜாங் ஷான்!
பாரம்பரியமாக ஆண்கள் ஜெயித்து வந்த ஒரு போட்டியில், 24 வயதுப் பெண் ஒருவர் திடீரென வந்து ஜெயித்துவிட்டுப் போனது சீரியஸான விளைவுகளை ஏற்படுத்திவிட்டது.

ஒலிம்பிக்ஸில் எல்லாப் போட்டிகளையும் நடத்துவது ஒலிம்பிக் கமிட்டிதான் என்றாலும்கூட, ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக இருக்கும் அமைப்புகள் தனியாக கண்ட்ரோல் செய்யும்.

சர்வதேசத் துப்பாக்கிச் சுடுவோர் சங்கம், முழுக்க முழுக்க ஆண்களால் நிர்வகிக்கப்படும் அமைப்பு. இந்த அமைப்பு, இந்தப் போட்டிக்குப் பிறகு இந்தப் பிரிவில் பெண்கள் பங்கேற்கத் தடை விதித்துவிட்டது. இதனால், 96-ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்ஸில் ஜாங் ஷான் பங்கேற்க முடியவில்லை. தன் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் வாய்ப்பின்றிப் போனது.

கனடாவைச் சேர்ந்தவர் சூஸன் நட்ராஸ். இவரும் இந்தப் பிரிவில் பலமுறை பங்கேற்றவர். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் தனியாளாக அவர் பெரும் போராட்டம் நடத்தினார்.

ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச துப்பாக்கிச் சுடுவோர் சங்கம் என எல்லா இடங்களிலும் போய்ப் பேசினார். 'இந்தப் பிரிவில் பெண்களுக்குத் தனியாக ஒரு போட்டி உருவாக்க வேண்டும்' என வற்புறுத்தினார்.

ஒலிம்பிக் ஹீரோக்கள் - அபேப் பிகிலா: ஒட்டுமொத்த ஆப்பிரிக்க மக்களையும் பிகிலடிக்க வைத்த மாவீரன்!

'கலப்புப் போட்டியாக இருந்தபோதே நான்கைந்து பெண்கள்தான் வருவார்கள். பெண்கள் இதற்கெல்லாம் லாயக்கற்றவர்கள்' என்று எல்லா கமிட்டிகளும் நிராகரித்தபோது, ஜாங் ஷான் பெற்ற வெற்றியைத்தான் உதாரணமாகக் காட்டினார் சூஸன்.

பல்வேறு நாட்டுத் தலைவர்களின் ஆதரவையும் சூஸன் நாட, 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்ஸில் பெண்களுக்குத் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஜாங் ஷான், சூஸன் இருவருமே அந்தப் போட்டியில் வெற்றிப் பெருமிதத்தோடு பங்கேற்றனர்.

இடையில், ஒலிம்பிக்ஸ் இல்லாமல் வெளியில் நடந்த பல்வேறு உலக சாம்பியன் போட்டிகளில் வென்று சாம்பியனான ஜாங் ஷான் ஒலிம்பிக்ஸில் சொதப்பிவிட்டார்! இந்த முறை அவரால் எட்டாவது இடத்தையே பிடிக்க முடிந்தது (சூஸனும் ஜெயிக்க முடியவில்லை என்பது வேறு விஷயம்!). புதிதாக நிறையப் பெண்கள் வந்துவிட்டார்கள்!

தன் தோல்வி குறித்து ஜாங் ஷான் இப்படிச் சொன்னார்...
"எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் தங்கம் ஜெயித்தபோது, கைத் துப்பாக்கியை என் உடலின் ஒரு பாகம் போலவே உணர்ந்தேன். அது எனக்கு ஆறாவது விரல் போல் தெரிந்தது. ஆனால், ஏனோ எனக்கு இப்போது அந்த உணர்வு எழவில்லை!”
ஜாங் ஷான்
ஒருவேளை ஆண்களும் கலந்து கொண்டிருந்தால், அவர் வெறியோடு சுட்டுத் தங்கம் வென்றிருப்பாரோ, என்னவோ?!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு