Published:Updated:

யாஷஸ்வினி தேஸ்வால் : இந்தியாவின் தங்க ஏக்கத்தை தீர்க்கப்போகும் நம்பர் 1 வீராங்கனை!

யாஷஸ்வினி தேஸ்வால்
யாஷஸ்வினி தேஸ்வால் ( DD )

அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு இந்தியாவிற்கு வேறு யாருமே தங்கப்பதக்கம் வென்று கொடுக்கவில்லை. அந்த பதக்க ஏக்கத்தை தீர்த்து வைக்கும் அத்தனை திறனும் யாஷஸ்வினிக்கு இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

யாஷஸ்வினி தேஸ்வால்... இந்த பெயர் வரலாற்றில் இடம்பிடிப்பதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருக்கிறது. அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வென்று கொடுப்பார் என நம்பப்படுகிற ஒரு சிலரில் இவரும் ஒருவர். 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் உலகளவில் நம்பர் 1 வீராங்கனையாக இருப்பதால் மற்றவர்களை விட இவர் மீது பெரிய நம்பிக்கை உருவாகியிருக்கிறது.

24 வயதாகும் இவர் டெல்லியில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் ஆட்சி அதிகார பணிகளில் பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். தந்தை காவல்துறை ஆணையர், தாய் வருமான வரித்துறை கமிஷனர். உறவினர்கள் சிலர் இராணுவத்திலும் பணியாற்றுகிறார்கள். இதனால் சிறுவயதிலேயே இவருக்கு துப்பாக்கிகள் அறிமுகமாகிவிட்டன.

டெல்லியில் நடைபெற்ற 2010 காமென்வெல்த் போட்டியில் துப்பாக்கிச்சுடுதலை பார்வையிட நேரில் சென்றிருக்கிறார் யாஷஸ்வினி. அதுதான் அவருக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. வசதி வாய்ப்புகளும் ஏதுவாக இருந்ததால் துப்பாக்கிச்சுடுதல் பயிற்சியை எளிதில் தொடங்கிவிட்டார் யாஷஸ்வினி. தேஜிந்தர் சிங் திலோன் எனும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியிடம் தனது பயிற்சியை தொடங்கினார்.

வீட்டிலேயே அவருக்கென துப்பாக்கிச் சுடுதலுக்கான பிரத்யேக தளம் அமைத்து பயிற்சி வழங்கப்பட்டது. 2012-ல் 15 வயதில் துப்பாக்கிச்சுடுதல் பயிற்சியை தொடங்கியவர், 2014 இளையோருக்கான ஒலிம்பிக்ஸில் கலந்துக்கொண்டார். இந்த ஒலிம்பிக்ஸில் 6-வது இடம்பிடித்தார். பயிற்சியை தொடங்கிய ஆரம்பக்கட்டத்திலேயே இப்படி ஒரு பெர்ஃபார்மென்ஸை யாரும் எதிர்பார்க்கவில்லை. யாஷஸ்வினி துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவிற்கு பெரும் நம்பிக்கையாக உருவெடுப்பார் என கணித்தவர்கள், அவருக்கென பிரத்யேக பயிற்சிகளை கொடுக்க ஆரம்பித்தனர். விளைவு, ஜுனியர் போட்டிகளில் அடுத்தடுத்த பதக்கங்களை வென்று அசத்தினார்.

ஆசிய ஜுனியர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றவர், 2016-17 ஜுனியர் உலகக்கோப்பைகளில் 2 தங்கம் 2 வெள்ளி வென்றார். இதெல்லாம் ஒரு ட்ரெய்லர்தான், சீனியர் போட்டிகளுக்கு தகுதியான பிறகு யாஷஸ்வினியின் ஆட்டம் வேற லெவல் ஆனது.

கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் உலகக்கோப்பைகளில் 3 தங்கம் 2 வெண்கலம் வென்றிருக்கிறார். 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் உலகளவில் நம்பர் 1 வீராங்கனை என்ற நிலைக்கு உயர்ந்தார்.
யாஷஸ்வினி தேஷ்வால்
யாஷஸ்வினி தேஷ்வால்
DD

இந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி உலகக்கோப்பையில் 2 தங்கம் வென்று அசத்தியிருந்தார். கடந்த மாதம் நடைபெற்ற உலகக்கோப்பையில் வெண்கலம் வென்று இப்போது முழு ஃபார்மில் இருக்கிறார்.

உலகளவிலான தரவரிசையில் யாஷஸ்விக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் சக இந்திய வீராங்கனையான மனு பாகெருக்கும் அவருக்கும் எப்போதுமே கடும்போட்டியாக இருக்கும்.

யாருக்கு தங்கம்? என்ற உயர்ந்தபட்ச இலக்கை உடைய போட்டி என்பதால் ரசிகர்களும் இந்த ரைவல்ரியை ரசிப்பார்கள். டெல்லி உலகக்கோப்பையில் கூட யாஷஸ்வினி தங்கம் வெல்ல, மனு பாக்கர் இரண்டே புள்ளிகள் வித்தியாசத்தில் வெள்ளி வென்றிருந்தார்.

டோக்கியோவில் இருவரும் ஒரே பிரிவில் பங்கேற்பதால், முதல் சுற்றில் தகுதிப்பெறும்பட்சத்தில் யாஷஸ்வினிக்கும் மனு பாக்கருக்குமே கடுமையான போட்டி நிலவ வாய்ப்பிருக்கிறது.

எனக்கு யாருடனும் போட்டி கிடையாது. எனக்கு என்னுடைய முந்தைய செயல்பாடுதான் போட்டி. முன்பு செய்ததை விட சிறப்பாக செய்வதே என்னுடைய இலக்கு. இதனால் எந்த வீராங்கனைகளை கண்டும் நான் பதற்றமடையமாட்டேன்.
யாஷஸ்வினி தேஷ்வால்

அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு இந்தியாவிற்கு வேறு யாருமே தங்கப்பதக்கம் வென்று கொடுக்கவில்லை. அந்த பதக்க ஏக்கத்தை தீர்த்து வைக்கும் அத்தனை திறனும் யாஷஸ்வினிக்கு இருக்கிறது. டோக்கியோவில் யாஷஸ்வினி வைக்கப்போகும் வரலாற்றில் மறக்கமுடியாத அழுத்தமான குறியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு