Published:Updated:

பிவி சிந்து VS உலகின் நம்பர் 1 தாய்-சூ-யிங்... யாருக்கு என்ன பலம், என்ன பலவீனம்?!

பி.வி.சிந்து
பி.வி.சிந்து ( Markus Schreiber )

சில்வர் சிந்து என விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கவும், தேசத்தின் பெருமையை உயர்த்தவும் சிந்துவுக்கு இந்த போட்டி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தாய்-சூ-யிங்குக்கும் இந்த போட்டி முக்கியமே.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரியோவில் தவறவிட்ட தங்கப்பதக்கத்தை டோக்கியோவில் எட்டிப்பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். ஆனால், அது அவ்வளவு சுலபமானதல்ல. சீன தைபேவை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனையான தாய்-சூ-யிங்குக்கு எதிராக இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் வென்றே ஆக வேண்டும். சிந்துவுக்கு இது ஒரு மிகப்பெரிய மிஷன். தன்னுடைய திறன் மொத்தத்தையும், இத்தனை வருட அனுபவம் மொத்தத்தையும் இந்த போட்டியில் வெளிப்படுத்தினால் மட்டுமே அவரால் வெல்ல முடியும். என்ன செய்யப்போகிறார் சிந்து?

சில்வர் சிந்து என விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கவும், தேசத்தின் பெருமையை உயர்த்தவும் சிந்துவுக்கு இந்த போட்டி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தாய்-சூ-யிங்குக்கும் இந்த போட்டி முக்கியமே. உலகளவில் நம்பர் 1 வீராங்கனையாக இருந்தாலும் பெரிய தொடர்களில் சொதப்பிவிடுவார் என்கிற விமர்சனம் அவர் மீது உண்டு.

2016 ரியோ ஒலிம்பிக்கிலுமே கூட சிந்துவுக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நேர் செட் கணக்கில் வீழ்ந்து நாக் அவுட் ஆகியிருந்தார். இப்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். அதனால் தன்னுடைய முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வெல்ல கடுமையாக போராடுவார்.

சிந்துவுக்கும் தாய்-சூ-யிங்குக்கும் இடையேயான போட்டிகளில் தாய்-சூ-வே ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். இருவரும் மோதிக்கொண்ட போட்டிகளில் தாய்-சூ-யிங் 18 முறை வென்றிருக்கிறார். சிந்து 5 முறை மட்டுமே வென்றிருக்கிறார்.
டை-சூ-இங்
டை-சூ-இங்
Olympics

அதிலும், கடைசியாக நடந்த மூன்று போட்டிகளிலும் தோற்றிருக்கிறார். மார்ச்சில் இருவருக்கும் இடையே கடைசியாக நடந்த பாங்காக் உலக தொடர் போட்டியில் 2-1 என்ற செட் கணக்கில் தாய்-சூ-யிங் வென்றிருந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்பாக சிந்து அவ்வளவு சிறப்பான ஃபார்மில் இல்லை. இந்த ஆண்டில் 16 போட்டிகளில் ஆடியிருந்த அவர் 10 போட்டிகளில் மட்டுமே வென்றிருந்தார். தன்னை விட தரவரிசையில் ஜோஜுவாங்கிடம் தோற்றிருந்தார். கரோலினா மரின், ரட்சனோக், தாய்-சூ-யிங் எனத் தனக்கு இணையான வீராங்கனைகளிடமும் தோல்வியை தழுவியிருந்தார். இதனால் சிந்துவின் மீதிருந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனால், ஒலிம்பிக் என்று வந்தவுடன் சிந்துவின் பர்ஃபாமென்ஸ் நெருப்பாக மாறிவிட்டது.

முதலில் ஆடிய குரூப் பிரிவு போட்டிகளில் சிந்து எதிர்கொண்ட இருவருமே பெரிய சவாலளிக்கும் வீராங்கனைகள் இல்லை. ஆனால், ரவுண்ட் ஆஃப் 16-ல் ஆடியிருந்த பிலிஃபெல்ட்டும், காலிறுதியில் ஆடிய யமகுச்சியும் சிந்துவுக்கு இணையான வீராங்கனைகள். இருவரிடமுமே கடைசியாக ஆடிய சில போட்டிகளில் சிந்து தோற்றிருந்தார். அப்படியிருந்தும் இங்கே ஒலிம்பிக்கில் அவர்களுக்கு ஒரு செட் கூட விட்டுக்கொடுக்காமல் துவம்சம் செய்து அசரடித்திருந்தார்.

சொல்லப்போனால், டோக்கியோவில் இதுவரைக்கும் ஆடியிருக்கும் நான்கு போட்டிகளிலுமே சிந்து ஒரு செட்டில் கூட எதிராளிகளால் வீழ்த்தப்படவில்லை.

தாய்-சூ-யிங் நல்ல ஃபார்முடனே டோக்கியோவிற்கு வந்தார். குரூப் போட்டிகளில் இவருக்குப் பெரிதாக சவாலளிக்கும் வகையில் எந்த வீராங்கனையும் வரவில்லை. அதனால், ஒரு செட்டில் கூட வீழ்த்தப்படாமல் காலிறுதிக்கு தகுதிப்பெற்றுவிட்டார். காலிறுதியில் தாய்-சூ-யிங் கொஞ்சம் தடுமாறியிருக்கவே செய்தார். தாய்லாந்தை சேர்ந்த ரட்சனோக்குடனான இந்த போட்டியில் முதல் செட்டை 14 - 21 என இழந்திருந்தார். ஆனால், மீண்டு வந்து அடுத்த இரண்டு செட்களையும் வென்றிருந்தார்.

பேக்ஹேண்டில் ரொம்பவே வலுவான வீராங்கனையாக இருக்கிறார் தாய்-சூ-யிங். ஹார்ட் ஹிட்டிங் ஸ்மாஷ்களை கூட பேக் ஹேண்ட்டில் சாஃப்ட்டாக ரிட்டன் செய்து புள்ளிகளை அள்ளிவிடுகிறார். மேலும், இந்த பேக் ஹேண்ட் பலத்தால் அதிகமாக மூவ் செய்ய வேண்டிய தேவையில்லாமல் இருக்கிறார். நடுவிலேயே நின்று கொண்டு இரண்டு பக்கமும் கொஞ்சம் நகர்ந்து மட்டும் ஆடிக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால், இரண்டு மூலைகளுக்கும் மூவ் ஆகிக் கொண்டே இருக்கும் எதிராளியை விட இவருக்கு யோசித்து இடம்பார்த்து ரிட்டன் ஷாட் அடிக்க அதிக நேரம் கிடைக்கிறது. இதுவே தாய்-சூ-யிங்கின் அடிப்படையான பலமாக இருக்கிறது.

பி.வி.சிந்து
பி.வி.சிந்து
சிந்துவை பொறுத்தவரைக்கும் அவருடைய ஸ்மாஷ்கள்தான் அவருடைய பலம்.

தாய்-சூ-யிங் நடுப்பகுதியிலேயே நின்று கொண்டு பெரும்பாலான ஆட்டத்தை ஆடுவதால், சிந்து கொஞ்சம் ரிஸ்க் எடுத்து வலுவான நீண்ட ஸ்மாஷ்களை அடித்தால் அவர் திணறுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாய்-சூ-யிங் உயரம் குறைவாக இருப்பதால் துள்ளி ஸ்மாஷ் அடிக்கும் போது கன்ட்ரோல் இல்லாமல் லைனுக்கு வெளியே அடித்து புள்ளிகளை அதிகமாக இழக்கிறார். இன்-அவுட் பார்ப்பதில் சிந்து கில்லாடி. அதனால் இந்த முறையில் அவருக்கு அதிக புள்ளிகள் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. அழுத்தமான தருணங்களில் கூட நிதானத்தை இழக்காமல் இருக்கும் சிந்துவின் அணுகுமுறையும் அவருக்கு பெரிய பலமாக இருக்கும்.

லாங் ரேலிக்களில் சிந்து சீக்கிரமே சோர்வடைவது கொஞ்சம் பின்னடைவு. யமகுச்சிக்கு எதிரான போட்டியில் 14-8 என சிந்து பெரிய லீடில் இருக்கும்போது, லாங் ரேலிக்களின் மூலமே அவர் ஆட்டத்தை மாற்றினார். லாங் ரேலிக்களுக்கு பிறகு மொமன்டம் அப்படியே யமகுச்சி பக்கம் மாற தொடங்கியது. சிந்து இந்த விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

தாய்-சூ-யிங் நெவர் கிவ் அப் ஆட்டிட்யூட் உடையவர். முதல் செட்டை கொஞ்சம் அப்படி இப்படி ஆடி தோற்றாலும், அடுத்தடுத்த செட்களில் மீண்டு எழுந்து மிரட்டி விடுவார். ரட்சனோக்குக்கு எதிரான காலிறுதி போட்டியும், சிந்து கடைசியாக தாய்-சூ-யிங்வுடன் மோதிய போட்டியுமே இதற்கு உதாரணம். தாய்-சூ-யிங்-க்கு எதிராக கடைசி கேம் பாயின்ட்டை எடுக்கும் வரை எந்த நொடியிலும் அவருக்கு சிறு இடம் கூட கொடுத்துவிடக் கூடாது.

பி.வி.சிந்து
பி.வி.சிந்து
சில்வர் சிந்து தங்கமகளாக மாறுவதற்கு இந்த போட்டியை வென்றே ஆக வேண்டும். அப்படி வெல்லும்பட்சத்தில் இந்தியாவுக்கு அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு இரண்டாவது தங்கம் வென்று சாதனை வந்து சேரும். மேலும், தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்களில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையும் கிடைக்கும். விட்றாதீங்க சிந்து!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு