ஹாக்கி: 41 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த இந்தியா... ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை!

தொடர்ந்து ஹாக்கியில் தங்கப்பதக்கங்களாக வாங்குக்குவித்த அணி இந்தியா. ஆனால், அது எல்லாமே 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கோடு முடிந்துபோனது. 41 ஆண்டுகளாக பதக்கம் இல்லாமல் பல இழிவுகளைச் சுமக்கும் அணியாக மாறிப்போனது. இன்று தன் இழந்த மாண்பை இந்திய அணி மீட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய அணிக்குப் பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்த இன்றைய நாளை இந்தியர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வாழ்த்து!
பரபரப்பான போட்டியில், இந்தியா கம்பேக் கொடுத்து ஆதிக்கம் செலுத்தி வென்ற நிலையில், பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இந்திய அணிக்குத் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா வெற்றி!
வரலாறு படைத்த இந்திய அணி. ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைத் தனதாக்கி உள்ளது. துவக்கத்தில் 3-1 என்ற கணக்கில் ஜெர்மனி முன்னணியில் இருந்த நிலையில், இந்தியா அபாராமாக விளையாடி அசத்தலான கம்பேக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளது.
இறுதிக்கட்ட அட்டாக்கிங்கிற்காக இந்தியா கோல்கீப்பருக்குப் பதிலாக கூடுதல் வீரரைக் களமிறக்கியுள்ளது. ஜெர்மனியும் அதையே செய்துள்ளது. ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களுக்கு இப்படியொரு முடிவை இரு அணிகளும் எடுத்துள்ளன. இதனிடையே ஒரு பெனால்டி கார்னர் வாய்பை ஜெர்மனி கோலாக மாற்றத் தவறியுள்ளது.
இறுதிக்கட்ட பரபரப்பில் ஜெர்மனி நான்காம் கோல்!
கடைசி குவாட்டரின் இறுதிக்கட்ட பரபரப்பில் ஜெர்மனி மேலும் ஒரு கோல் அடித்து 4-5 என்ற நிலையில் இருக்கிறது. ஜெர்மனியின் லூக்கஸ் அடித்த ஷாட், இந்திய கோல்கீப்பர் ஶ்ரீஜேஷின் கால்களுக்கு இடையே சென்று கோலானது.
இருந்தபோதும் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது.
இந்தியா முன்னிலை
5-3 என்ற கணக்கில் இந்தியா ஜெர்மனியைவிட முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவின் சிம்ரன்ஜித் சிங் 2 கோல்களையும், ஹர்திக் சிங், ஹர்மன்ப்ரீத் சிங், ரூபிந்தர்பால் சிங் 1 கோலையும் அடித்துள்ளனர். மூன்று குவாட்டர்கள் முடிந்த நிலையில் பரபரப்பான கட்டத்தில் இறுதி 15 நிமிடங்கள்...
இந்தியா இன்று வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியுடன் மோதுகிறது. ஜெர்மனி அணி 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் முதல் தொடர்ந்து எல்லா ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்று வருகிறது. 2008 பீஜிங், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜெர்மனி, 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.