Published:Updated:

புத்தம் புது காலை : பதக்கம் வெல்வது பெண்கள்… ஆனால், அவர்களுக்கு ஏன் ஆண் பயிற்சியாளர்கள்?

இளவேனில் தனது பயிற்சியாளருடன்!
இளவேனில் தனது பயிற்சியாளருடன்! ( Alex Brandon )

டோக்கியோ 2020 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பெண் பயிற்சியாளர்கள் விகிதம் வெறும் 11% மட்டும்தான். இந்திய ஒலிம்பிக் வீரர்/வீராங்கனைகளுடன் 23 பயிற்சியாளர்கள் உடன் சென்றுள்ளனர் என்றாலும், அதில் ஒரு பெண் பயிற்சியாளர் கூட இல்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விளையாட்டில் பயிற்சியளிப்பு (coaching) என்பது இன்றுவரை ஒரு மதிப்புமிக்க துறை. ஆனால் அளவுக்கதிகமான பாலியல் பாகுபாடுகளும் (gender bias) அங்கேதான் காணப்படுகிறது!
- கேத்தி வாக்கர் (இங்கிலாந்து பெண் பயிற்சியாளர்)

இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தில், நடக்குமோ நடக்காதோ என்று பெரும் சந்தேகத்திலேயே இருந்த ஒலிம்பிக் போட்டிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜூலை 23-ம் தேதி ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் வெற்றிகரமாகத் தொடங்கி, கிட்டத்தட்ட முடியும் நிலையை எட்டிவிட்டது. இம்முறை உயரம் தாண்டுதலில் தங்கத்தைப் பகிர்ந்து கொண்ட இரு வீரர்கள், தந்தையுடன் மைதானத்தில் ஓடிய வீரர் போன்ற பல சுவாரசியங்கள், பல நெகிழ்ச்சியான சம்பவங்கள். கோவிட் நம்மிடம் ஏற்படுத்தியிருந்த மன அழுத்தத்தைக் கூட ஒலிம்பிக்ஸ் போட்டிகள் குறைத்துள்ளன.

இந்தியா சார்பாக 70 வீரர்களும், 54 வீராங்கனைகளும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதுவரை மீராபாய் சானுவின் வெள்ளி, பி.வி.சிந்துவின் வெண்கலம், லவ்லினாவின் வெண்கலம், இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னேற்றம் என இந்திய வீராங்கனைகள் ஒலிம்பிக் பதக்கங்களை "மகளிர் மட்டும்" என்று ஆரம்பத்தில் பெருமையை தூக்கிப்பிடிக்க, தொடர்ந்து ஆண்கள் ஹாக்கி அணியின் வெண்கலம், ரவிக்குமார் தஹியாவின் வெள்ளி, நீரஜ் சோப்ராவின் முன்னேற்றம் என ஆண்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.


ஆனால் இன்றைய நமது பதிவு, போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற, பெறவுள்ள வீரர், வீராங்கனைகள் பற்றியதல்ல... இவர்களுக்கு பக்கத்துணையாக இருந்து அவர்களது திறமையை வெளிக்கொணர செய்யும் அவர்கள் ‘கோச்’ என்ற பயிற்சியாளர்களை பற்றியது.

ஒவ்வொரு விளையாட்டிலும், விளையாட்டு வீரர்களின் வெற்றிக்கும், தோல்விக்கும் பின்னால் அதற்கான அடித்தளமாய் நிற்பது இந்தப் பயிற்சியாளர்கள்தான். விளையாட்டு வீரர்களுக்கு முழுமையான பயிற்சியைத் தருவது மட்டுமின்றி, விளையாட்டில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகள், விளையாடும் போது எடுக்க வேண்டிய சமயோசித முடிவுகள், வீரர்கள் மனம் தளர்கையில் உற்சாகம் அளிப்பதுடன், தகுந்த உளவியல் ஆலோசனைகள், அவர்கள் உணவு, ஆரோக்கியம் என வீரர்களின் அத்தனை விஷயங்களிலும் இந்தப் பயிற்சியாளர்களின் பங்கு மிகப் பெரியதாக இருக்கிறது.

வீராங்கனை தனது பயிற்சியாளருடன்
வீராங்கனை தனது பயிற்சியாளருடன்
Vincent Thian

இந்த விளையாட்டுத் துறையில் உலகளாவிய அளவில் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளும் அவர்களின் வெற்றிகளும் அதிகரித்து வரும் அதேவேளையில், ஆண் பயிற்சியாளர்களுக்கு இணையாக பெண் பயிற்சியாளர்கள் ஏன் அதிகரிக்கவில்லை என்பது அதிகம் விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது.

பல ஆண்டுகளாக, ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சியாளர்கள் விகிதத்தில் ஆண்கள் 90% என்றால் பெண்கள் 10% தான் இருக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இப்போது டோக்கியோ-2020 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கூட பெண் பயிற்சியாளர்கள் விகிதம் வெறும் 11% மட்டும்தான். இந்திய ஒலிம்பிக் வீரர்கள் வீராங்கனைகளுடன் 23 பயிற்சியாளர்கள் உடன் சென்றுள்ளனர் என்றாலும், அதில் ஒரு பெண் பயிற்சியாளர் கூட இல்லை என்கிறது தகவல்கள்.

அதுமட்டுமின்றி, எந்தவொரு விளையாட்டிற்கும் பெண்கள் அணிக்கு ஆண் பயிற்சியாளர்கள் 60% வரை இருக்கையில், அதுவே ஆண்கள் அணிக்கு பெண் பயிற்சியாளர்கள் என்பது அரிதிலும் அரிதாக, 1% மட்டுமே உள்ளனர் என்பது இன்னொரு விநோதம்.

பயிற்சியளிப்பது என்பது அவ்வளவு கடினமான பணியா... அது பெண்களால் முடியாதா... எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்பது இங்கே மட்டும் தோற்றுவிடுகிறதா? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் இந்திய மகளிர் கால்பந்து அணியின் முதல் பெண் கால்பந்து பயிற்சியாளர் மேமோல் ராக்கி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேமோல் ராக்கி... 2017-ம் ஆண்டில், 41வது வயதில் பெண் பயிற்சியாளரானவர். சிறுவயது முதலே கால்பந்தில் பெரும் ஈடுபாடு கொண்ட ராக்கியை, கோவாவின் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் அவரது தந்தை சேர்த்ததில் இருந்து, மாநில அளவிலும், பிறகு தேசிய அளவிலும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்று, 2001 முதல் 2007 வரை சர்வதேச போட்டிகளிலும் கலந்து வெற்றியாளராக ராக்கி இருந்தபோதிலும், விளையாட்டுக்குப் பின், கால்பந்து பயிற்சியாளராக விரும்பிய அவருக்கு அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

சிந்து
சிந்து
Dita Alangkara

"விளையாட்டு என்பது ஆண்களுக்கு லட்சியமாக இருக்க, பெண்களுக்கு அது ஒரு பொழுதுபோக்கு என்றே கருதப்படுகிறது" என்று கூறும் ராக்கி, கால்பந்து கோச்சிங்கிற்காக, தான் தனி கோச்சிங் சென்றதை நினைவுகூர்கிறார். தக்க சான்றிதழ்களையும், உரிமங்களையும் பெற்ற பின்னரும், பெண் என்ற காரணத்தாலேயே அவருக்குக் கிடைக்க வேண்டிய கோச்சிங் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது என்கிறார். என்றாலும், ஆரம்பத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு கோச்சாகவும், அருகிலிருந்த கிளப்களுக்கு கோச்சாகவும் பணியாற்றிய பிறகு கிடைத்த வாய்ப்பில், மாநில அளவிலும் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் இருந்து நிரூபித்த பிறகே தேசியப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

அதீத உடல் உழைப்பு, திடீர் பயணங்கள், காலநேரம் பாராமல் பணிபுரிய வேண்டிய கட்டாயம், குடும்பப் பொறுப்புகளை தவிர்க்க வேண்டிய நிலை, அனைத்திற்கும் மேலாக எல்லோருடைய எதிர்பார்ப்புகள் என, ஆண்கள் சூழ்ந்த விளையாட்டுத் துறையில், கோச்சிங் என்பது உண்மையிலேயே பெண்களுக்கு மிகச் சவாலான ஒன்றுதான் என்கிறார்.

மேமோல் ராக்கி மட்டுமல்ல.‌ உலகெங்கும் உள்ள பெண் பயிற்சியாளர்களின் ஒட்டுமொத்த குரலாகவும் இதுதான் இருக்கிறது என்றிருக்க, இன்னொரு பக்கம் ஆண் வீரர்கள் மட்டுமல்ல... பெண் வீராங்கனைகளில் பெரும்பான்மையோர் (80%) தங்களுடைய பயிற்சியாளர் ஆணாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஏன் இப்படி என்று தேடினால், விளையாட்டு உலகில் உலவும் எதிர்மறை உளவியல் இன்னும் ஆச்சர்யம் அளிக்கிறது. ஆண் பயிற்சியாளர்களைப் பற்றி வீராங்கனைகள் குறிப்பிடும்போது, "எப்போதும் கோச் எங்களுடனேயே இருப்பார். பார்த்தவுடனேயே விளையாட்டு அரங்கின் அமைப்பை நன்கு படிப்பதோடு, எங்கள் மனநிலையையும் கண்களாலேயே கண்டறிவார். ஒரு பயிற்சியை எப்போது தொடங்க வேண்டும், எதில் கவனம் செலுத்த வேண்டும், எப்போது முடிக்க வேண்டும் என்பதில் அவரிடம் அவ்வளவு தெளிவு இருக்கும்."

அமெரிக்க பேஸ்கெட் பால் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டான் ஸ்டேலி(Dawn Staley)
அமெரிக்க பேஸ்கெட் பால் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டான் ஸ்டேலி(Dawn Staley)
Charlie Neibergall

"எதிர் அணியினரின் அடுத்த நகர்வு, அவர்களது மனநிலை ஆகியவற்றை முன்னமே கணித்து, எங்களை வழிநடத்துவார்."

"அவரது நோக்கம், குறிக்கோள் அனைத்தும் எங்களை ஒருமுகப்படுத்துவதில் இருக்கும்."

"எதிர்பார்ப்புகள் போலவே, ஊக்கப்படுத்துதலும் எப்போதும் கூடுதலாக இருக்கும்.. அதிலும் சாக்குபோக்குகளுக்கு மன்னிப்பே இருக்காது" என்கின்றனர்.

அதேசமயம், பெண் பயிற்சியாளர்கள் ஆண்களைப் போல தீவிர பயிற்சியை அளிப்பதில்லை, திறமையை வெளிக்கொணர்வதும் இல்லை என்று பெண்களே குற்றம்சாட்டுகிறார்கள்.

"ஒரு பெண் பயிற்சியாளர் தனது மூட் ஸ்விங்ஸுக்கு ஏற்றார்போல பயிற்சிகளையும் அவ்வப்போது மாற்றிக் கொள்வார். நேர மேலாண்மை என்பது அவரிடம் இருக்காது. எளிதாக விருப்பு வெறுப்புகளுக்கு இசைந்து கொடுத்து விடுவார். முக்கியமாக, பெண் பயிற்சியாளர்கள் எப்போதும் சாம்பியன்களை உருவாக்குவதில்லை.." என்பது அவர்களின் கருத்து.

இப்படி பெண் வீராங்கனைகளே கருதும்போது ஆண்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

ஒரு பெண் வீராங்கனையை, அவரது ஆண் பயிற்சியாளர் கோபத்துடன் கடிந்து அறிவுரை கூறும்போது, ‘’அவரது சுபாவம் அப்படி’' என்று ஏற்றுக் கொள்ளும் பெண் வீராங்கனை, அதேசமயம் தனது பெண் பயிற்சியாளர் அதேபோல் கடிந்து பேசினால், ‘'என்னிடம் குறை காண்பதே இவரது வேலை'’ என்று குற்றம் சாட்டுவது இங்கே இயல்பாக இருக்கிறது.

செர்பிய  பேஸ்கெட்பால் அணியின் பெண் பயிற்சியாளர் மரினா மல்கோவிக்!
செர்பிய பேஸ்கெட்பால் அணியின் பெண் பயிற்சியாளர் மரினா மல்கோவிக்!
Charlie Neibergall

ஆனால், அமெரிக்க ஹெப்டெத்லான் தடகள வீராங்கனையான ஆனி குன்ஸ், தனது வாழ்க்கையை எடுத்துக்காட்டி, பெண் வீராங்கனைகளின் female athlete triad என்ற உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு, நிச்சயம் பெண் பயிற்சியாளர்களே உதவ முடியும் என்கிறார்.

யோசித்துப் பார்த்தோமேயானால், ஓர் ஆசிரியப் பணி போன்றதே இந்த கோச்சிங் பணியும்… எப்போது ஒரு பயிற்சியாளர், விளையாட்டு வீரர்களின் மரியாதைக்கு உரியவராகவும், அவர்களைக் காட்டிலும் ஆற்றல் மிக்கவராகவும், மதிநுட்பம் மிகுந்தவராகவும், அவர்களை முழுமையாகப் புரிந்து வழிநடத்துபவராகவும் இருக்கிறாரோ, அப்போது இத்தகைய உளவியலுக்கும் இடமிருக்காது. பயிற்சியளிப்பதில் ஆண்-பெண் பேதங்களும் தோன்றாது என்பதே உண்மை.

எல்லாவற்றையும் விட, இந்த உளவியல் அனைத்தையும் புன்னகையோடு எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய பயிற்சியாளரான பெக் கொடார்ட் சொல்லும் வார்த்தைகள் மிக மிக முக்கியமானது.

"இங்கே வெற்றி தான் பேசும். பயிற்சியாளர்களில் ஆண் பெண் பேதத்தை முறியடிக்க வேண்டுமென்றால், பெண் தனது வெற்றிக் கொடியை பறக்க வைக்க வேண்டும்... அவ்வளவு தான்" என்கிறார்.

நிச்சயம் இது பெண்களால் முடியும்!

Yes… She can coach!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு