Published:Updated:

சிமோன் பைல்ஸ் : விளையாடுவதை விட விலகுதல் கடினமானது… ஏன் நம்பிக்கை இழந்தார் ஜிம்னாஸ்டிக் பேரரசி!

சிமோன் பைல்ஸ்

ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்கம், 1 வெண்கலம் என்று அசத்தியவர் சிமோன் பைல்ஸ். இந்த ஒலிம்பிக்கிலும் சிமோனுக்கென்று தங்கப் பதக்கங்களைத் தனியே எடுத்து வைத்துவிட்டுதான் டோக்கியோவில் ஒலிம்பிக் தீபத்தையே ஏற்றினார்கள். அப்படிப்பட்டவர் ஏன் விலகினார்?!

சிமோன் பைல்ஸ் : விளையாடுவதை விட விலகுதல் கடினமானது… ஏன் நம்பிக்கை இழந்தார் ஜிம்னாஸ்டிக் பேரரசி!

ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்கம், 1 வெண்கலம் என்று அசத்தியவர் சிமோன் பைல்ஸ். இந்த ஒலிம்பிக்கிலும் சிமோனுக்கென்று தங்கப் பதக்கங்களைத் தனியே எடுத்து வைத்துவிட்டுதான் டோக்கியோவில் ஒலிம்பிக் தீபத்தையே ஏற்றினார்கள். அப்படிப்பட்டவர் ஏன் விலகினார்?!

Published:Updated:
சிமோன் பைல்ஸ்

சர்வதேச ஆட்டக்களத்தில் இறங்கி மோதுவதற்கு தனி மனோபலம் வேண்டும். அது பயிற்சியில், அனுபவத்தில் வந்துவிடும். ஆனால், உலகமே உற்றுநோக்கும் ஒரு நட்சத்திர வீராங்கனை, டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்காவைப் பதக்கப் பட்டியலில் முன் நகர்த்திச் செல்லவிருக்கும் ஒலிம்பிக் சூப்பர் ஸ்டார், Greatest Of All Time (GOAT) – என்ற புகழுடன் ஜிம்னாஸ்டிக் வரலாற்றின் தலைசிறந்த வீராங்கனை என்ற புகழுடன் இருப்பவர், டோக்கியோவில் மீடியா முன்பு தோன்றி ‘’நான் களமிறங்கப் போவதில்லை’’ என்று அறிவிக்கிறார் என்றால் அதற்கு நிச்சயம் பல மடங்கு மனோபலம் தேவை!

ஆம், விளையாடுவதைவிட விலகுதல் மிக மிகக் கடினமான காரியம்! அதை சிமோன் பைல்ஸின் கோணத்தில் இருந்து நோக்கினால் மட்டும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

சுமார் 11,000 வீரர்கள் கலந்து கொண்டிருக்கும் இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில், தனித்து மிளிரும் நட்சத்திரமாக பேசப்படுபவர் சந்தேகமின்றி அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ்தான். ஸ்போர்ட் இல்லஸ்டேரட்டட் தனது டோக்கியோ ஒலிம்பிக்ஸ் சிறப்புப் பதிப்பில் அட்டையில் சிமோன் பைல்ஸின் புகைப்படத்தைத்தான் பதிப்பித்திருக்கிறது. கட்டுரைக்கான தலைப்பு : Simone in Full : The GOAT’s True Greatness Is Still To Come.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
‘‘உங்களை உலகம் முன்னோடி அல்லது தலைசிறந்தவர் என்று சொல்கிறதென்றால் அதை நீங்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளலாம்.’’
சிமோன் பைல்ஸ்

GOAT என்று அழைக்கப்படுவது குறித்து கேட்டபோது, சிமோன் சொன்ன பதில் இது. அவரது ஜிம்னாஸ்டிக் உடையில்கூட ஆடு ஒன்றின் உருவத்தை கற்களால் நம்பிக்கையுடன் பதித்துக் கொண்டிருக்கிறார் சிமோன். அவரது வலது கையில் ஒலிம்பிக் வளையங்களைப் பச்சை குத்திக் கொண்டுள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் 19 தங்கப்பதக்கங்களை வாங்கிய வீராங்கனை என்றாலும் சிமோனுக்கு ஒலிம்பிக் என்பது தவிர்க்க முடியாத பெருங்கனவுதான். சென்ற ஒலிம்பிக்கில் 4 தங்கம், 1 வெண்கலம் என்று அசத்தியவர். இந்த ஒலிம்பிக்கிலும் சிமோனுக்கென்று தங்கப் பதக்கங்களைத் தனியே எடுத்து வைத்துவிட்டுதான் டோக்கியோவில் ஒலிம்பிக் தீபத்தையே ஏற்றினார்கள்.

சிமோன் பைல்ஸ்
சிமோன் பைல்ஸ்

கடந்த ஜூலை 25 முதல் 27 வரை, ஜிம்னாஸ்டிக்கில் பெண்களுக்கான ஆல்-அரவுண்ட் குழுப் போட்டி நடந்தது. இதில் சிமோன் இடம்பெற்றிருந்த அமெரிக்கப் பெண்கள் அணி வெள்ளி வென்றது. தங்கம் ரஷ்யாவுக்கு. 2016 ரியோ டி ஜெனிரோவில் தங்கம் வென்ற அமெரிக்கப் பெண்கள் அணிக்கு இது சறுக்கல்தான். இது குழுப் போட்டிதான் என்றாலும் அதைத் தன் தனிப்பட்ட பின்னடைவாக உணர்ந்தார் சிமோன். 13.766 என்ற அவர் எடுத்திருந்த மிகக்குறைந்த புள்ளிகள் சிமோனை அழுத்தத்துக்கு உள்ளாக்கியது.

2016 ஒலிம்பிக்கில் இந்த குழுப் பிரிவில் Vault, Uneven Bars, Balance Beam, Floor Exercise என நான்கிலும் அதிகப் புள்ளிகள் எடுத்து அமெரிக்க அணி தங்கம் வாங்க காரணமாக சிமோன் இருந்தார். டோக்கியோவில் Vault தவிர, வேறெதிலும் பங்கேற்காத சிமோன், அதிலும் தன்னால் முழுக்கவனத்துடன் விளையாட முடியவில்லை என்று உணர்ந்தார்.

போடியத்தில் தன் அணியுடன் வெள்ளிப் பதக்கம் வாங்க ஏறியபோதே அவரது தலை இறங்கித்தான் இருந்தது. அதற்குப் பின்பே சிமோன் தனது கடினமான முடிவை அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது மிகப்பெரிய களம். ஒலிம்பிக் என்ற மாபெரும் நிகழ்வு. ஆனால், இந்தக் களத்திலிருந்து வெளியேறும்போது நாங்கள் சாதாரணமாக நடந்து போகவே விரும்புகிறோம். மருத்துவக் குழுவினர் வந்து எங்களை ஸ்ட்ரெச்சரில் தூக்கிக் கொண்டு போவதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. இப்போது என் மீது நான் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறேன். என் உடல் நலம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், என் மன நலத்தில் கவனம் எடுக்க நினைக்கிறேன். இந்த உலகம் நாம் செய்ய விரும்புவதை எல்லாம் ஏற்று அதன்படி நடக்காமல், நாம்தான் நம் உடலையும் மனதையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். குழுப் போட்டியிலிருந்தும், தனி நபர் போட்டிகளில் இருந்தும் விலகுகிறேன்.
சிமோன் பைல்ஸ்
simone biles supporter
simone biles supporter

சிமோனின் இந்த முடிவு உலகின் இயக்கத்தை ஒரு நொடி வெர்ச்சுவலாக ஸ்தம்பிக்கச் செய்தது உண்மைதான். என்னதான் ஒலிம்பிக்கில் ஆறு மெடல் வாங்கிய அசகாய சாம்பியனாக இருந்தாலும் அமெரிக்க-ஆப்பிரிக்க பெண் அல்லவா! நிறவெறி தீரா உலகின் கொடூர சொற்களும் வசைகளும், கூசச் செய்யும் விமர்சனங்களும் வந்து கொண்டே இருக்கின்றன.

2004 தொடங்கி, ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் ஜிம்னாஸ்டிக் ஆல்-அரவுண்ட் தனிநபர் பெண்கள் பிரிவில் அமெரிக்காவே தங்கப் பதக்கம் வாங்கிக் கொண்டிருக்கிறது. 2016-ம் ஆண்டில் அதில் தங்கம் வாங்கினார் சிமோன். இந்த முறையும் இந்தப் பிரிவில் தங்கம் வாங்கி அப்படிப்பட்ட சாதனையைத் தொடர்ந்து இரண்டு முறை செய்த முதல் அமெரிக்கர் என்று வரலாறு படைப்பார் என்று காத்திருந்தார்கள்.

ரஷ்யாவின் முன்னாள் வீராங்கனை லாரிஸா லாட்டினினா (1956, 1960), செக்கோஸ்லாவியாவின் முன்னாள் வீராங்கனை வெரா காஸ்லேவ்ஸ்கா (1964, 1968) ஆகிய இருவர் மட்டுமே ஒலிம்பிக் வரலாற்றில் அந்த அரிய சாதனையைச் செய்திருக்கிறார்கள். அந்த இருவரும்தான் ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்கில் அதிகப் பதக்கங்கள் வென்ற முதல் இரு இடத்திலும் இருக்கிறார்கள்.

லாரிஸா மற்றும் வெராவின் வரலாற்றுச் சாதனைகளை முறியடிக்கும் திறன் கொண்ட ஒரே பெண் சிமோன் மட்டுமே என்று விளையாட்டு விமர்சகர்கள் சொன்ன ஆருடங்கள் எக்கச்சக்கம். தவிர, அமெரிக்க முன்னாள் நீச்சல் வீராங்கனை ஜென்னி தாம்ப்ஸன் ஒலிம்பிக்கில் எட்டு தங்கங்கள் வாங்கியிருக்கிறார். அதையும் சிமோன் முறியடிப்பார் என்று எழுதித் தீர்த்தார்கள்.

சிமோன் பைல்ஸ்
சிமோன் பைல்ஸ்

அந்த எதிர்பார்ப்பு சட்டென முறிந்து போனதை சிலரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனால், சிமோன் பைல்ஸின் இந்த முடிவை புரிந்து கொண்டு, அவரை ஆதரித்து, அரவணைத்து வந்து கொண்டிருக்கும் செய்திகள்தாம் நிறைய.

‘’ஒலிம்பிக் நெருங்க நெருங்க வீரர்கள் மீதான அழுத்தம் அதிகரித்துக் கொண்டே செல்வது கவலை அளிக்கிறது. ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களும் மனிதர்களே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிமோன் பைல்ஸுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். அவர் சரியாக வேண்டும்’’ என்று செய்தி தெரிவித்திருப்பவர் அமெரிக்காவின் ஒலிம்பிக் சாம்பியனும் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையுமான அலெக்ஸாண்ட்ரா ரைஸ்மேன்.

அமெரிக்க ஸ்கேட்டரான ஆடம் ரிப்பனின் செய்தி இது. ‘’சிமோன் எவ்வளவு பெரிய அழுத்தத்தில் இருக்கிறார் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது. அவருக்கு என் அன்பை அனுப்புகிறேன். அவரும் ஒரு மனிதர்தான் என்பதை நாம் எளிதில் மறந்துவிடுகிறோம்’’, ‘‘இந்த விஷயத்திலும் தான் ஒரு சாம்பியன் என்று நிரூபித்திருக்கிறார் சிமோன்’’, ‘’உங்கள் புன்னகை மிக அழகானது. அதை பாதுகாத்துக் கொள்ளுங்கள்’’, ‘’ஒருமுறை சாம்பியன் ஆனவர் எப்போதும் சாம்பியன்தான்’’, ‘’இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தியாகம்!’’, ‘’சிமோனின் முடிவுக்காக நாம் பெருமைப்பட வேண்டும்!’’, ‘’சிமோனிடமிருந்து உலகம் கற்றுக் கொள்ளட்டும்!’’

இப்படி பல பாசிட்டிவ் வாழ்த்துகள் சிமோனின் முடிவை ஆதரித்து குவிந்து கொண்டிருக்கின்றன.

சிமோன் பைல்ஸ்
சிமோன் பைல்ஸ்

சிமோனின் இந்த மன அழுத்த நிலையை ஜிம்னாஸ்டிக் பதத்தில் ‘Twisties’ என்கிறார். ஓடி வந்து காலை ஊன்றி, பாய்ந்து பறந்து அந்தரத்தில் உடலைச் சுழற்றி சாகசம் செய்யும் நேரத்தில் திடீரென தன்னிலை உணர்வை இழக்கும் நிலைதான் இது. அப்படிப்பட்ட நிலையில் தான் இருப்பதை உணர்ந்ததால்தான் சிமோன் பின் வாங்கியிருக்கிறார்.

உலகின் இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் தங்கள் உடல் தங்களுக்குச் சொந்தமானதல்ல என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு என்று சிமோன் உரக்கச் சொல்லியிருக்கிறார். அதையும் மீறி தேசத்துக்காக, கனவுகளுக்காக, ரசிகர்களுக்காக என்று அவர் களமிறங்கினால் காயங்கள் உண்டாகலாம். காலம் முழுக்க எழுந்து நடக்க முடியாத பண்டமாக படுக்கையில் கிடக்கும் அவல நிலையும் நேரலாம். அதையெல்லாம் உணர்ந்து ‘தனக்காக’ சிமோன் எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. அவரைப் போன்ற விளையாட்டு வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரியானதும்கூட.

விளையாட்டுதான் சிமோனின் வாழ்க்கைதான் என்றாலும் வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாதல்லவா! இனியும் காலமும் களங்களும் காத்திருக்கின்றன, சிமோன் நிச்சயம் மீண்டு வருவார் என்பதை அவரது இன்றைய ட்விட்டர் செய்தி புன்னகையுடன் சொல்கிறது.

The outpouring of love & support I’ve received has made me realize I’m more than my accomplishments and gymnastics which I never truly believed before.

ட்விட்டரில் சாம்பல் நிற இதயம் பதிவிடுவது சிமோன் பைல்ஸின் வழக்கம். இந்த விலகலினால் நம் இதயங்களில் மேலும் நெருக்கமானவராக மாறியிருக்கிறார் இந்த தேவதை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism