Published:Updated:

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மனதை மயக்கிய பிக்டோகிராம் நிகழ்வு! அது என்ன பிக்டோகிராம்? அதன் வரலாறு என்ன?

டோக்கியோ ஒலிம்பிக்ஸ், பிக்டோகிராம் நிகழ்வு
டோக்கியோ ஒலிம்பிக்ஸ், பிக்டோகிராம் நிகழ்வு

எந்த நாட்டில் ஒலிம்பிக் நடக்கிறதோ அந்நாட்டின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் பிக்டோகிராம்கள் வடிவமைக்கப்படும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒலிம்பிக்கில் வீரர்களின் விளையாட்டைப் பார்க்க மக்கள் ஆர்வமாகக் காத்திருக்க, தொடக்கவிழாவில் புதுமையான ஒரு நிகழ்வை அரங்கேற்றி மக்களை வியக்கவைத்தது ஜப்பான். ஒவ்வொரு ஒலிம்பிக் தொடரிலும் விளையாடப்படும் விளையாட்டுகளுக்கு பிக்டோகிராம்களை (Pictogram) வெளியிடுவது வழக்கம்.

1964-ல் இதே ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இருந்தே விளையாட்டுகளுக்கான பிக்டோகிராம்களை வெளியிடுவது அதிகாரப்பூர்வமான ஒன்றாக ஆக்கப்பட்டுவிட்டது. அந்தத் தொடரில் இருந்து ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும், விளையாடப்படும் விளையாட்டுகளுக்கு எந்த நாட்டில் ஒலிம்பிக் நடக்கிறதோ அந்நாட்டின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் பிக்டோகிராம்கள் வடிவமைக்கப்படும். இந்த ஆண்டும் நடந்து கொண்டிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் விளையாட்டுகளுக்கான பிக்டோகிராம்களை 2019 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

பெர்லின் ஒலிம்பிக்கில் பயன்படுத்தப்பட்ட பிக்டோகிராம், 1936
பெர்லின் ஒலிம்பிக்கில் பயன்படுத்தப்பட்ட பிக்டோகிராம், 1936

பிக்டோகிராம்களுக்கான வரலாறு என்ன, அவை ஏன் உருவாக்கப்பட்டன?

இந்த விளையாட்டுச் சின்னங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து வரும் விளையாட்டு வீரர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே உருவாக்கப்பட்டன. அதிகாரப்பூர்வமாக 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில் தான் விளையாட்டுச் சின்னங்கள் வெளியிடப்படுகின்றன எனத் படித்தோம். ஆனால், அதுதான் முதல் முறையாக விளையாட்டுச் சின்னங்கள் வெளியிடப்பட்ட ஒலிம்பிக் அல்ல. 1912 ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்ஸ் மற்றும் 1924 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் சின்ன சின்ன பிக்டோகிராம்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் பெரிய அளவில் இல்லை. 1936 பெர்லின் ஒலிம்பிக்ஸ் மற்றும் 1948 லண்டன் ஒலிம்பிக்கில் வடிவமைக்கப்பட்ட பிக்டோகிராம்கள்தான் கொஞ்சம் கவனம் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அப்போதும் அதிகாரப்பூர்வமாக அவை வெளியிடப்படவில்லை.

ஒலிம்பிக் போட்டிகளில் பாலின சமத்துவம் இருக்கிறதா, பெண்களின் பங்கேற்பு ஏன் முக்கியம்?!

1964-ல் டோக்கியோவில் ஒலிம்பிக் நடத்தப்பட்டபோது ஜப்பானிற்கு மொழி குறித்த சவால் இருந்தது. ஜப்பானைத் தவிர வேறு எங்கும் ஜப்பானிய மொழி பேசப்படுவதில்லை. எனவே ஒலிம்பிக் போட்டிக்கு வருபவர்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் இடங்களில் பிக்டோகிராம்களைப் பயன்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. விளையாட்டு வீரர்களும், பிற நாட்டுப் பங்கேற்பாளர்களும் மொழி புரியாமல் குழம்பிவிடக்கூடாது என்பதால்தான் அதிகாரப்பூர்வமாகவே பிக்டோகிராம்கள் 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெளியிடப்பட்டன. அந்த ஆண்டு ஒலிம்பிக்கைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் பிக்டோகிராம்கள் பலமடங்கு முன்னேற்றம் அடைந்தன. ஒலிம்பிக் போட்டி குறித்து எங்கெல்லாம் செய்திகள் இடம்பெறுகிறதோ அங்கெல்லாம் இந்தப் பிக்டோகிராம்கள் இடம்பெறும் என்பதால், ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடுகள் பிக்டோகிராமிற்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கின.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு வடிவமைக்கப்பட்டிருக்கும் பிக்டோகிராம்
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு வடிவமைக்கப்பட்டிருக்கும் பிக்டோகிராம்

பிக்டோகிராம்களுக்கு நாடுகள் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியபின் மக்களும் ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் வெளியாகும் பிக்டோகிராம்களை ஆவலுடன் எதிர்நோக்கத் தொடங்கினார்கள். கடந்த முறை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கூலாங்கல் போன்ற தோற்றத்தைப் பின்னணியாகக் கொண்டு வெளியான பிக்டோகிராம்கள் உலகளவில் அதிக வரவேற்பைப் பெற்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிகாரப்பூர்வமாக பிக்டோகிராம்களை ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தியது ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில்தான் என்பதால் இந்த ஆண்டும் பிக்டோகிராமில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என ஜப்பான் விரும்பியிருக்கும். எனவே, 2D-யில் மட்டுமே இருக்கும் பிக்டோகிராம்கிளை 3D-யில் செய்து காட்டி அசத்தியிருக்கிறது ஜப்பான். டோக்கியோ ஒலிம்பிற்கிக்கு வெள்ளை மற்றும் கருநீல நிறங்கள் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் பிக்டோகிராம்கள் மிகவும் எளிமையாகவும் மனதைக் கவரும் வகையிலும் அமைந்திருந்தது. ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழாவில் இந்த பிக்டோகிராம்களை அப்படியே நிஜத்தில் சித்தரித்துக் காட்டி ஒரு நிகழ்வை நடத்திக் காட்டியது ஜப்பான். அந்த நிகழ்வு பார்வையாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என அனைவரது கவனத்தையும் பெற்றது. சமூக வலைத்தளங்களிலும் அந்த பிக்ரோடகிராம் நிகழ்வுக்கான பெரும் வரவேற்பை நாம் காண முடியும்.

டோக்கியோ பிக்டோகிராம் நிகழ்வு, டோக்கியோ.
டோக்கியோ பிக்டோகிராம் நிகழ்வு, டோக்கியோ.

இந்தப் பிக்டோகிராம்களை வடிவமைக்க மஸாக்கி ஹிரோமுரா (Masaaki Hiromura) மற்றும் அவரது குழுவினருக்கு இரண்டு ஆண்டுகள் ஆனதாக அவர் தெரிவித்திருக்கிறார். வெள்ளை மற்றும் கருநீல உடையை அணிந்து கொண்டு 50 விளையாட்டுகளுக்கான பிக்டோகிராம்களையும் சித்திரித்த காட்சி டோக்கியோ ஒலிம்பிக்கின் சிறந்த ஒரு நிகழ்வு என்றுதான் கூற வேண்டும். மூன்று பேர் மட்டுமே சேர்ந்து ஐம்பது விளையாட்டுகளுக்கான பிக்டோகிராம்களையும் சித்தரித்துக் காட்டினர். கடைசியாகச் செய்த ட்ரையத்லான் விளையாட்டிற்கான சித்தரிப்பு கூடுதல் சிறப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு