Published:Updated:

தோனி சொல்லிக்கொடுத்த ப்ராசஸ்... டோக்கியோ ஒலிம்பிக்கில் பின்பற்றப்போகும் தமிழக வீரர்கள்!

வருண் தாக்கர் மற்றும் கே.சி.கணபதி
வருண் தாக்கர் மற்றும் கே.சி.கணபதி ( Official Twitter handle of Team India )

படகோட்டத்தில் அதிக நேரம் பயிற்சி எடுக்க வேண்டியிருக்கும் என்பதால், பள்ளிப்படிப்பு பாதிக்கப்பட்டது. படகோட்டத்தின் மீதிருந்த ஆர்வத்தால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சிங்கப்பூருக்கு பயிற்சிக்காக சென்று தன்னை மெருகேற்றியிருக்கிறார்.

வாழ்வில் சாதிக்க கல்வி ஒரு தடையில்லை என்பதை இரண்டு தமிழக வீரர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய வருண் தாக்கரும் கே.சி.கணபதியும் இப்போது ஒலிம்பிக்கில் ஆடுவதற்காக டோக்கியோவிற்கு பறந்திருக்கிறார்கள். படகோட்டும் போட்டியில் பங்கேற்க இருக்கும் இவர்களின் பின்னணி என்ன?

வருண் தாக்கர் மற்றும் கே.சி.கணபதி இருவருமே சென்னையை சேர்ந்தவர்கள். 26 வயதாகும் வருண் தாக்கரின் தந்தை ஷிப்பிங் பிரிவில் பணிபுரிந்தவர். இவர் வார விடுமுறை நாட்களில் பொழுதுபோக்குக்காக படகோட்டும் பயிற்சிக்கு செல்வது வழக்கம்.  அப்போது வருண் தாக்கரையும் அவரது சகோதரியையும் உடன் அழைத்து சென்றிருக்கிறார். அப்படியே வருணுக்கு படகோட்டத்தின் மீது ஆர்வம் உண்டாகியிருக்கிறது.

படகோட்டத்தில் அதிக நேரம் பயிற்சி எடுக்க வேண்டியிருக்கும் என்பதால், பள்ளிப்படிப்பு பாதிக்கப்பட்டது. படகோட்டத்தின் மீதிருந்த ஆர்வத்தால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சிங்கப்பூருக்கு பயிற்சிக்காக சென்று தன்னை மெருகேற்றியிருக்கிறார்.

கே.சி. கணபதியும் வருணை போன்றேதான் சென்னையை சேர்ந்தவர். படகோட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர். ஆரம்பகாலத்தில் சென்னையில் ஒரே பயிற்சி மையத்திலேயே இருவரும் பயிற்சி பெற்றிருக்கின்றனர். முதலில் இருவரும் தனித்தனியாக ஒற்றையர் பிரிவிலேயே ஆடியிருக்கின்றனர். அப்போது, இவர்கள் இருவருமே பல முறை மோதியிருக்கின்றனர். 

2010-ல் இந்தியாவில் 29er வகை படகுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த பிரிவில் பங்கேற்றால் நல்ல எதிர்காலம் இருக்கும் என இருவரும் நினைக்க, இதுவரை எதிரெதிராக போட்டி போட்டு கொண்டிருந்தவர்கள் ஒன்றிணைந்தனர். 2011-லிருந்து இருவரும் இணைந்து ஒரு அணியாக பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தனர். ஆரம்பக்கட்ட பயிற்சிகளுக்கு பிறகு இருவருமே 49er பிரிவுக்கு மாறினர்.

வருண் தாக்கர் மற்றும் கே.சி.கணபதி
வருண் தாக்கர் மற்றும் கே.சி.கணபதி
Varun Thakkar's Twitter handle
2014 முதல் பெரிய தொடர்களில் பங்கேற்று வரும் இந்த கூட்டணி, 2018 ஆசிய போட்டிகளில் வெண்கலம் வென்றிருந்தது. 2019 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றிருந்தது. சமீபத்தில் முஸன்னாஹ் ஓப்பன் சாம்பியன்ஷிப்பை வென்ற இந்த கூட்டணி, ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் வென்று டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவான் ஸ்டூவர்ட் எனும் அனுபவமிக்க படகோட்டும் வீரரிடம் இருவரும் ஒலிம்பிக்கிற்காக பிரத்யேக பயிற்சியை பெற்று வருகின்றனர். கொரோனா காரணமாக வெளிநாடுகளுக்கு பயிற்சிக்கு செல்ல முடியாததால் இராமேஸ்வரத்திலேயே சில நாட்கள் பயிற்சி செய்திருக்கின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் தாரக மந்திரமான 'Result is a by-Product of Process' என்பதே இவர்களுடைய நம்பிக்கையாகவும் இருக்கிறது.

வெற்றியை விட செயல்திட்டத்தின் மீதே அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். யதார்த்தத்தை புரிந்துக்கொண்டு டார்கெட்டை செட் செய்திருக்கிறது இந்த கூட்டணி.

நீடித்த நிலையான வளர்ச்சிக்கு படிப்படியாக முன்னேறுவதே சரியான விஷயமாக இருக்கும்!

அடுத்த கட்டுரைக்கு