Published:Updated:

வந்தனாக்களால் மட்டுமே இந்த உயரம் தொட்டிருக்கிறோம்... தேசத்தின் மகளை யாரும் களங்கப்படுத்தமுடியாது!

வந்தனா கட்டாரியா ( John Minchillo )

ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்திருக்கும் ஒரே இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா. அவரால்தான் இந்தியா நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிப்பெற்றது. பிரிட்டனுக்கு எதிரான வெண்கலத்துக்கான போட்டியிலும் வந்தானா கோல் அடித்திருந்தார்.

வந்தனாக்களால் மட்டுமே இந்த உயரம் தொட்டிருக்கிறோம்... தேசத்தின் மகளை யாரும் களங்கப்படுத்தமுடியாது!

ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்திருக்கும் ஒரே இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா. அவரால்தான் இந்தியா நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிப்பெற்றது. பிரிட்டனுக்கு எதிரான வெண்கலத்துக்கான போட்டியிலும் வந்தானா கோல் அடித்திருந்தார்.

Published:Updated:
வந்தனா கட்டாரியா ( John Minchillo )

2016 ரியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெள்ளி வென்றவுடன், கூகுளில் ஒரு விஷயம் அதிகம் தேடப்பட்டிருந்தது. சிந்து எத்தனை புள்ளிகள் எடுத்தார், எந்த செட்டை வென்றார், அவருடைய பழைய ரெக்கார்டுகள் என்ன?... இப்படியான கேள்விகளாக இருந்திருக்கும் என நினைத்தால் நம்மை விட அப்பாவி வேறு யாரும் இல்லை. சிந்துவின் சாதி என்ன என்பதே அதிகம் தேடப்பட்டிருந்தது. இந்தியாவில் அப்படித்தான்.

எவ்வளவு கல்வியறிவு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டாலும் இன்னமும் ஒரு பெருங்கூட்டம் சாதியை உயர்த்திப் பிடித்துக்கொண்டேதான் இருக்கிறது. தேசத்தின் பெருமையாக உலகளவில் இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களையுமே கூட சாதியைப் பார்த்தே தோளில் தூக்கி கொண்டாடலாமா, வேண்டாமா என்பதை சிலர் முடிவு செய்கின்றனர். இந்த கொடூரத்தில் சமீபமாக சிக்கியிருப்பது இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனாவின் குடும்பம்.

டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதியில் அர்ஜென்டினா அணியுடன் மோதிய இந்திய அணி தோல்வியை தழுவியிருந்தது. கடைசி நொடி வரை போராடியே தோற்றிருந்ததால் இந்திய வீராங்கனைகளுக்கு பாராட்டுகளே குவிந்து வருகிறது. ஆனால், உத்திரப்பிரதேசத்தின் ஹரித்வாரில் உள்ள இந்தியா வீராங்கனை வந்தனாவின் வீட்டின் முன்பு ஒரு கும்பல் கூச்சலிட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

வந்தனா கட்டாரியா
வந்தனா கட்டாரியா
John Locher
இந்திய அணியில் தலித்துகள் அதிகமாக இருப்பதாலேயே தோல்வியடைந்தது எனக்கூறி சிலர் பிரச்சனையில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த நபர்கள் மீது வந்தனாவின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

வந்தனா இந்த தேசத்தின் பெருமை. அவருடைய ஆட்டத்தால்தான் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா காலிறுதிக்கே முன்னேறியது. ஆரம்பத்தில் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோற்றிருந்தது. அயர்லாந்துக்கு எதிராக 1-0 என நூலிழையில் வெற்றிபெற்றிருந்தது. இதை ஆறுதல் வெற்றியாக கருதி இந்திய அணி மூட்டை முடிச்சை கட்டிவிடுவார்கள் என்றே கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தென்னாப்பிரிக்கவிற்கு எதிரான போட்டியில் மிகச்சிறப்பாக ஆடி இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் வந்தனாவே. ஹாட்ரிக் கோல்களை அடித்திருந்தார். ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்திருக்கும் ஒரே இந்திய வீராங்கனை எனும் பெருமையையும் பெற்றார். இந்தியாவும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்றது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக வந்தனா அவர் வாழ்வின் மிகப்பெரிய தியாகத்தை செய்திருக்கிறார். சொந்தபந்தம் முழுவதும் வந்தனா ஹாக்கி ஆட எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவருக்கு முழு ஆதரவாக நின்றவர் அவருடைய அப்பா மட்டுமே.

மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். அந்த சமயத்தில் வந்தனா பெங்களூருவில் பயோ பபிளில் ஒலிம்பிக்கிற்கான பயிற்சியில் இருந்தார்.

வந்தனா பயோ பபுளில் இருந்து வெளியேறியிருந்தால் ஒட்டுமொத்த அணியின் பயணம் மற்றும் பயிற்சி திட்டமும் பாதிக்கப்பட்டிருக்கும். அதற்காக தன் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்வதை கூட தவிர்த்திருந்தார் வந்தனா. அந்த ஈடுசெய்ய முடியாத இழப்பின் வலியை சுமந்து கொண்டே டோக்கியோவிற்கு பயணப்பட்டார் வந்தனா.

இந்த ஒலிம்பிக் மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளாகவே வந்தனா இந்திய அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கிறார். ஒரு ஃபார்வர்ட் வீரராக இந்தியாவின் அட்டாக்கிங் முகமாக அறியப்பட்டவர். 2013 ஜுனியர் உலகக்கோப்பையில் வெண்கலம் வென்ற போது அந்த அணியில் அதிக கோல் அடித்திருந்தவர் வந்தனாவே. சீனியர் அணிக்காகவும் 200 போட்டிகளுக்கும் மேல் ஆடி 60+ கோல்களை அடித்திருக்கிறார். ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை, காமென்வெல்த் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக ஆடியதற்கு மிக முக்கிய காரணம், அவற்றிலெல்லாம் வந்தனா சிறப்பாக ஆடியிருந்தார்.

வேற்றுமை, பிரிவினைவாதங்கள் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டது விளையாட்டு. ஆனால், அப்படியிருக்கக்கூடாதென ஒரு கூட்டம் எப்போதுமே முயன்று கொண்டிருக்கிறது. அவர்களுக்கு வரலாற்று நெடுகிலுமே பல முறை சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. முகமது அலியின் ஒவ்வொரு குத்துமே அதற்கு ஒரு உதாரணம். வெண்கல பதக்கத்திற்கான இந்தியாவின் இறுதி ஆட்டத்திலுமே இந்தியாவின் இறுதி கோலை அடித்தவர் வந்தனா கட்டாரியாதான். இந்தியா வெண்கலம் வெல்லாமல் வெளியேறியிருக்கலாம். ஆனால், வந்தனாக்களால் மட்டுமே இன்று ஹாக்கி இந்த உயரம் தொட்டிருக்கிறது. வேற்றுமை பேசுபவர்கள் விளையாட்டை விட்டு ஒதுங்கி நிற்கலாம்!

வந்தனா இந்த தேசத்தின் பெருமைமிகு அடையாளம்!