Published:Updated:

கனவுகள் வித் கண்டிஷன்ஸ் அப்ளை... ஒலிம்பிக் சொல்லும் உண்மை என்ன?!

ஒலிம்பிக்ஸ் ( John Locher )

மீண்டும் மீண்டும் ஒரே ஒரு உண்மைதான் முகத்தில் அறைகிறது. இங்கே நீங்கள் கனவு காணலாம்.... ஆனால், உங்களுடைய சமூக பொருளாதார பின்னணிக்கு ஏற்ற கனவை மட்டுமே காண முடியும். இதுவே ஒலிம்பிக் சொல்லும் உண்மை!

கனவுகள் வித் கண்டிஷன்ஸ் அப்ளை... ஒலிம்பிக் சொல்லும் உண்மை என்ன?!

மீண்டும் மீண்டும் ஒரே ஒரு உண்மைதான் முகத்தில் அறைகிறது. இங்கே நீங்கள் கனவு காணலாம்.... ஆனால், உங்களுடைய சமூக பொருளாதார பின்னணிக்கு ஏற்ற கனவை மட்டுமே காண முடியும். இதுவே ஒலிம்பிக் சொல்லும் உண்மை!

Published:Updated:
ஒலிம்பிக்ஸ் ( John Locher )
காலங்காலமாக ஒரு விஷயம் சொல்லப்பட்டு வருகிறது. நாம் எதை அடைய நினைக்கிறோமோ அதை முழுமனதாக விரும்பி முயற்சி செய்தால் நிச்சயம் அடைந்துவிடுவோம் என்பதே அது. ஆனால், இந்த விதி நம் நாட்டுக்கு எந்தளவு பொருந்தும் என தெரியவில்லை.

இங்கே நீங்கள் ஒரு விஷயத்தை முழுமையாக காதலித்தால் மட்டும் அது உங்களுக்கு கை கூடிவிடாது. உங்களுடைய சமூக பொருளாதார பின்னணி அதற்கேற்ற வகையில் இருக்க வேண்டும். அப்படியிருக்கும் பட்சத்திலேயே நீங்கள் நினைத்த விஷயத்தை நினைத்த மாதிரியே அடைய முடியும். இது விளையாட்டுக்கும் பொருந்தும்.

சச்சின் ஏன் பேட்ஸ்மேன் ஆனார்... நடராஜன் ஏன் பௌலர் ஆனார் என்பதற்கான பின்னணியை உணர்ந்தோமானால் இது புலப்படும்.

கிரிக்கெட் வீரர் நடராஜன் - விராட் கோலி
கிரிக்கெட் வீரர் நடராஜன் - விராட் கோலி

சச்சினின் குடும்பப் பின்னணி, நகர வாழ்க்கை, பொருளாதாரம் என அவருக்கு இயற்கையாகவே கிடைக்கப்பெற்ற எதுவும் நடராஜனுக்கு இயற்கையிலேயே கிடைக்கப் பெறவில்லை. ஒரு சிறுகிராமத்தில், எளிய பின்னணியை கொண்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலிருந்து வந்தவர் நடராஜன்.

சச்சின் பேட்ஸ்மேன் ஆனதற்கும் நடராஜன் பௌலர் ஆனதற்கான காரணமுமே கூட இதில்தான் ஒளிந்திருக்கிறது.

கிரிக்கெட்டில் நீங்கள் ஒரு பேட்ஸ்மேனாக வேண்டுமெனில் அதற்கு நீங்கள் ஒரு கணிசமான தொகையை சில உபகரணங்களை வாங்குவதற்கு மட்டுமே செலவழித்தாக வேண்டும். உயர் நடுத்தர குடும்பங்களினால் அல்லது தன்னுடைய பிள்ளையை பேட்ஸ்மேன் ஆக்கியே தீர வேண்டும் என்கிற குடும்பங்களால் மட்டுமே அந்த செலவை செய்ய முடியும்.

இதை சுஷாந்த் சிங் நடித்த தோனியின் பயோபிக் படத்தில் அழகாக காண்பித்திருப்பார்கள்.

ஒலிம்பிக்ஸ்
ஒலிம்பிக்ஸ்
Anupam Nath
தோனி பேட்டிங் ஆடுவதற்கு தேவையான கிட் பேக்கை வாங்கிக் கொடுப்பதற்கு அவர் நண்பர் படாதபாடு பட்டிருப்பார். தோனியின் சமூக பொருளாதார பின்னணியை உணருவதன் மூலம் இதன் வீரியத்தை புரிந்துகொள்ள முடியும்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்றைக்குமே இந்திய அணியில் பௌலர்களாக இருப்பவர்களின் சமூக பொருளாதார பின்னணியையும் பேட்ஸ்மேன்களாக இருப்பவர்களின் பின்னணியையும் எடுத்துப்பார்த்தால் இரண்டுக்கும் இடைப்பட்ட வித்தியாசம் வெளிப்படையாக தெரியும்.

ஒரு பௌலராக நினைப்பவருக்கு ஒரு ஷூ மட்டுமே கிடைத்தால் போதும்... அதுவும் சீனியர்கள் சிலர் கொடுக்கும் பழைய ஷூவாக இருந்தால் கூட போதும். இதனாலயே எளிமையான பின்னணியை கொண்டவர்கள் பௌலர்களாக இருப்பார்கள்.

பேட்ஸ்மேன்களின் பின்னணியை எடுத்துப்பார்த்தால் நிச்சயம் எல்லாவிதத்திலும் பௌலர்களை விட உயர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.

130 கோடி பேரின் மூச்சுக்காற்றாக கிரிக்கெட் மாறியிருப்பதால் இன்றைக்கு சில விதிவிலக்குகளும் இங்கே உண்டாகியிருக்கிறது. ஒரு ஆட்டோ ஓட்டுநர், ஒரு பானி பூரி கடைக்காரரின் மகன் என சில வீரர்கள் பேட்ஸ்மேன்களாக ஜொலிக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால், இன்னமும் மேலே குறிப்பிட்ட விஷயங்கள் முழுமையாக மாறவில்லை. விதிவிலக்காக இருக்கும் இந்த வீரர்களிடமே கூட அவர்கள் கிரிக்கெட்டுக்குள் நுழைய இருந்த தடைகளையும் ஒரு கிட் பேக் வாங்குவற்கு அவர்கள் எதிர்கொண்ட சிரமங்களையும் கேட்டால் பல கண்ணீர் கதைகளை சொல்வார்கள்.

Indian Olympians
Indian Olympians
David Goldman

பொதுவாக ஒரு இந்திய கிரிக்கெட் ரசிகருக்கு பௌலர்களை விட பேட்ஸ்மேன்களைத்தானே பிடிக்கும்... சிறுவயதில் பேட்டை பிடித்து சிக்ஸ் அடிக்கத்தானே அனைவரும் விரும்புவோம். நடராஜனும் சிறுவயதில் அதைத்தானே விரும்பியிருப்பார்?நடராஜன் மட்டும் சிறுநகரத்தில் உயர் நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்தால் ஒரு கங்குலியாக வர வேண்டும் என்றே விரும்பியிருப்பார். ஆனால், அவருடைய சமூக பொருளாதார பின்னணி அதற்கு இடம் கொடுக்கவில்லை.

நடராஜன் பௌலராக என்னென்ன காரணிகள் இருந்ததோ அதேதான் இந்த தமிழக ஒலிம்பியன்களான ரேவதி, தனலட்சுமி போன்றவர்களுக்கும் ஓட்டப்பந்தயத்தை தேர்ந்தெடுப்பதற்கான காரணிகளாக இருந்திருக்கும்.

உடலை வறுத்தி மூச்சு முட்ட ஓட வேண்டும் என்பதா இவர்களின் கனவாக இருந்திருக்கும்? இவர்களின் சமூக பொருளாதார பின்னணியே இவர்களை அந்த கனவை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளியிருக்கிறது.

ரேவதி
ரேவதி
கைகளும் கால்களும் உடல் திறனும் மட்டுமே இவர்களின் மூலதனம். ஒரு சாரார் பொருளாதார ரீதியாக செலவு செய்து வெளிநாடுகளில் பயிற்சிகளை மேற்கொள்ள, இவர்கள் அதற்கெல்லாம் சேர்த்து உடலை வருத்தி கடின உழைப்பை மட்டுமே முதலீடாக போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்கிற்கு தகுதியானவர்கள் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அதில் பல உண்மைகள் விளங்கும். சமூக பொருளாதார பின்னணி ஒரு விளையாட்டு வீரரின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை வெளிப்படையாக அறிய முடியும். ஒரு டேபிள் டென்னிஸ் வீராங்கனையின் பொருளாதார பின்னணி எதுவும் ஒரு மல்யுத்த வீரரின் பின்னணியோடு துளி கூட ஒத்துப்போகாது. ஒரு ஓட்டப்பந்தய வீரரின் பின்னணிக்கும் ஒரு துப்பாக்கிச் சுடும் வீரரின் பின்னணிக்கும் இடையே பாததூர வேறுபாடு இருக்கிறது.

முதலில் என்னிடம் உங்கள் வீட்டின் வருமானம் என்னவென்று கேட்டார்கள், நான் எங்கள் வீட்டின் உண்மையான வருமானத்தை விட அதிகமான ஒரு தொகையை சொன்னேன். அதனாலயே என்னை வாள் வீச்சு பயிற்சிக்கே தேர்வு செய்தார்கள்.
பவானி தேவி
பவானி தேவி
பவானி தேவி

இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வாள் வீசியிருக்கும் வடசென்னையை சேர்ந்த பவானி தேவி இப்படிச் சொல்லியிருக்கிறார். வாள் வீச்சு விளையாட்டுக்கு நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். அந்த கவச உடையும் வாளுமே லட்சங்களிலிருந்துதான் கிடைக்கும். அதனாலயே பவானி தேவியிடம் அப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

இந்தியா சார்பில் ஒலிம்பிக் வாள் வீச்சுக்குத் தேர்வாகியிருக்கும் முதல் நபர் என்கிற வரலாற்றை படைத்திருக்கிறார் பவானி தேவி. ஒருவேளை பவானி தேவி தன்னுடைய குடும்பத்தின் உண்மையான வருமானத்தை கூறியிருந்தால் அவருடைய கைகள் காலத்துக்கும் வாளேந்தியிருக்க முடியாது.

படகோட்டுதல் ஒலிம்பிக்கில் புகழ்பெற்ற பழமையான போட்டி. கடல், கப்பல் இதெல்லாம் எளிதில் எல்லோரையும் கவர்ந்துவிடும். ஆனால், அப்படி கவர்ந்துவிட்டது என்பதற்காக நீங்கள் படகோட்டும் போட்டிகளில் மட்டுமே பங்கேற்க வேண்டுமென நினைத்தால் நீங்கள் பரம்பரை பணக்காரராக இருந்தால் மட்டுமே முடியும். சராசரியாக வருடத்திற்கு 30 முதல் 50 லட்சம் வரை செலவு செய்யும் சக்தி உடையவர்களால் மட்டுமே படகோட்டும் போட்டிகளுக்கு செல்ல முடியும்.

ஒரு படகோட்டும் வீரருக்கு ஒரு தடகள வீரராக மாறும் அத்தனை வாய்ப்புகளும் இருக்கிறது. ஆனால், காட்டிலும் மேட்டிலும் ஓடி உடல் திறனை மட்டுமே மூலதனமாக போட்டு வரும் ஒரு தடகள வீரரால் படகோட்டும் கனவுகளைக் கூட காண முடியாது.

பொருளாதாரம் மட்டுமல்ல, சமூக பின்னணிகளும் ஒரு வீரரின் கனவை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அதிகம் அறியப்படாத குதிரையேற்ற போட்டி இன்றைக்கும் கௌரவத்துடன் சம்பந்தப்பட்ட போட்டியாகவே பார்க்கப்படுகிறது.

கிராம - நகர வேறுபாடுகள் இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உள்ளரங்க விளையாட்டுகளில் கோலோச்சுபவர்களின் பின்னணியை தேடிப்பார்த்தால், பெரும்பாலும் நகரத்தை சேர்ந்த உயர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அந்த நகர நடுத்தர பெற்றோர்களுக்கு தங்களின் பிள்ளைகள் ஏதோ ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்கிற ஆர்வமும் இருக்கிறது. அதேநேரத்தில், தங்களுடைய பிள்ளைகள் அதிகம் வருந்திக் கொள்ளாமல் மிகவும் பாதுகாப்பான சூழலில் இருக்க வேண்டும் எனவும் விரும்புகின்றனர். அதனாலயே உள்ளரங்க விளையாட்டுகளில் ஊரிலேயே சிறந்த பயிற்சி மையத்தை தேடிப்பிடித்து தங்களின் பிள்ளைகளை சேர்த்து விடுகின்றனர்.

கோல்ஃப் விளையாட்டு
கோல்ஃப் விளையாட்டு

ஒரு வகையில் நடுத்தர வர்கத்தின் மினிமம் கியாரன்ட்டி மனநிலையின் வெளிப்பாடே இது. ஒருவேளை பிள்ளைகள் பெரியளவில் ஜெயித்தால் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இல்லையென்றாலும் தங்களின் பிள்ளைகள் உடல்ரீதியாக பெரிதாக வருந்தியிருக்கமாட்டார்கள் என எண்ணுகிறார்கள். இந்த கூட்டல் கழித்தல் கணக்கு வழக்குகளையெல்லாம் கிராமம் அல்லது சிறுநகரத்தை சேர்ந்த பெற்றோர்களிடம் எதிர்பார்க்கவே முடியாது.

இங்கே இந்தியாவில் ஏழைகளுக்கும் பின் தங்கியவர்களுக்கும் என ஒரு குறிப்பிட்ட விளையாட்டுகள் இருக்கின்றன. பணக்காரர்கள், நகரவாசிகள், மேட்டுக்குடியினர் போன்றோருக்கென குறிப்பிட்ட விளையாட்டுகள் இருக்கின்றன.

ஒரு சாரார் இன்னொரு எதிர்நிலையில் இருக்கும் விளையாட்டுக்குள் நுழைவதோ சாதிப்பதோ விதிவிலக்குகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாகவே நடந்து கொண்டிருக்கிறது.

பெருமுதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் - ஏழை நடுத்தர வர்க்கத்தினருக்கும் இடையே இருக்கும் அதிபயங்கர வேறுபாடுகளும், இன்னமும் சமநிலையை அடையாமல் இருக்கும் சமூக பின்னணிகளுமே இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

மீண்டும் மீண்டும் ஒரே ஒரு உண்மைதான் முகத்தில் அறைகிறது. இங்கே நீங்கள் கனவு காணலாம்... ஆனால், உங்களுடைய சமூக பொருளாதார பின்னணிக்கு ஏற்ற கனவைத்தான் காண முடியும்.

கனவுகள் வித் கண்டிஷன்ஸ் அப்ளை!