Published:Updated:

டிரேவான் புரொம்மெல்: உசேன் போல்டின் அரியணையில் அமரக் காத்திருக்கும் அமெரிக்க வேகப்புயல்!

Trayvon Brommel
Trayvon Brommel

மின்னல் வெட்டிய மண்ணில் கால்பதிக்கப் போகும் மாவீரன் யார் என்பதை எதிர்பார்த்து ஒட்டுமொத்த உலகமும் காத்துக்கொண்டிருக்கிறது.

கால்களால் பறந்த உசேன் போல்ட் என்னும் அரக்கனுக்குப் பிறகு அந்த 100 மீட்டர் ஓட்டத்துக்கான தங்கப் பதக்கம் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் சுமந்துகொண்டு அந்த மகுடத்தையும் சூடிக்கொள்ளத் தயாராக இருக்கிறார் அமெரிக்க வீரர் டிரேவான் புரொம்மெல்.

ஒவ்வொரு களத்திலும் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்காவில் அந்த 100 மீட்டர் டிராக்கில் மட்டும் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. முதல் 25 ஒலிம்பிக் தொடர்களில் 16 முறை இங்கு தங்கம் வென்றிருந்த அணி அமெரிக்க. ஆனால், கடைசி 3 ஒலிம்பிக் தொடர்களில் அவர்களால் தங்கத்தைத் தீண்டக்கூட முடியவில்லை. ஒரு மாபெரும் அணி, ஒற்றை மனிதன் முன் மண்டியிட்டது. உசேன் போல்ட், 100 மீட்டர் டிராக்குகள் ஜமைக்காவின் கொடியை உறக்கப் பறக்கவிட்டிருந்தார். அந்த மகத்தான மனிதன் இப்போது ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், மீண்டும் இந்தக் களத்தைக் கைப்பற்ற ஆயத்தமாகியிருக்கிறது அமெரிக்கா. அவர்களின் மிகச் சிறந்த அஸ்திரம்தான் இந்த புரொம்மல்.

Trayvon Brommel
Trayvon Brommel

இந்த புரொம்மல் யாரென்று தெரியவேண்டுமா. ரியோ ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் போல்ட் வென்றபோது, கடைசியாக ஒருவர் வருவாரே, அவர்தான் புரொம்மல். 4x100 மீட்டர் ரிலேவில் போல்ட் வெல்லும்போது ஃபினிஷ் லைனில் தட்டுத்தடுமாறி விழுந்து, வலியால் துடித்து வீல் சேரில் அழைத்துச் செல்லப்படுவாரே, அவர்தான் புரொம்மல். அப்போது கடைசியாய் வந்த, தடுமாறி விழந்த இந்தப் புயல்தான் அந்த மின்னல் நின்ற போடியத்தில் ஏறப்போகிறது. தன் தோல்விகளையும் தடுமாற்றங்களையும்தான் படிக்கற்களாய் மாற்றியிருக்கிறார் இந்த 26 வயது வீரர்.

2016 ஒலிம்பிக்கிற்குக்காக தகுதிச் சுற்றுக்கு 4 வாரம் முன்பாக பாதத்தில் கடும் வலியை அனுபவித்தார் அவர். பாதத்தில் எலும்பு கூடுதலாக வளர்ந்திருப்பது கண்டறியப்பட்டது. ஆபரேஷன் செய்தே ஆகவேண்டும். ஆனால், ஒலிம்பிக் வாய்ப்பு பறிபோய்விடும். வலியைக் குறைக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, ஆபரேஷன் செய்யாமலேதான் ரியோவுக்குச் சென்றார் புரொம்மெல். கடைசியாக வந்தார். தடுமாறி விழுந்தார்.

அடுத்ததாக அறுவை சிகிச்சை. 10 மாதங்களுக்கு எந்த ரேஸிலும் பங்கேற்கவில்லை. பங்கேற்ற முதல் ரேஸிலும் முதல் சுற்றிலேயே வெளியேறினார். மீண்டும் காலில் பிரச்னை. மீண்டும் அறுவை சிகிச்சை. இம்முறை 2 வருடங்களுக்கு ஓய்வு! அடுத்த ரேஸ், சதை கிழிந்தது. புரொம்மெலின் தடகள வாழ்க்கை முடிந்துவிட்டது என்றுதான் கருதப்பட்டது.

ஆனால், அவர் தளர்ந்துவிடவில்லை. 21 வயதிலேயே மின்னல் மனிதனோடு போட்டியிட்டவர், எளிதில் ஓய்ந்துவிட விரும்பவில்லை. பயிற்சியாளரை மாற்றினார். பயிற்சி முறைகளை மாற்றினார். தன் அனுபவத்தை மெருகேற்றிக்கொண்டார். தன்னை, தன் கால்களை வலுவாக்கிக்கொண்டார். மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கினார். மீண்டு வந்தார். இந்த சீசனில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர்களில் மிகச் சிறந்த டைமிங் (9.77 நொடிகள்) வைத்திருப்பது இவரே! அமெரிக்க அணியின் ஒலிம்பிக் தகுதிச் சுற்றிலும் 9.8 நொடிகளில் முடித்து முதலாவதாக வந்திருக்கிறார்.

Trayvon Brommel
Trayvon Brommel

ஆனால், இந்த முறையும் வலியோடுதான் ஒலிம்பிக் அரங்கில் கால்பதிக்கப்போகிறார் புரொம்மெல். சிறுவயதில் அவரை ஓட்டப் பந்தயத்துக்குத் தயாராக்கிய பயிற்சியாளர் கார்லின் பாய்ட் கடந்த ஆண்டு உயிரிழந்திருக்கிறார். இம்முறை வலி இருக்கப்போவது கால்களில் இல்லை. அவர் மனதில். ஆனால், தன் பயிற்சியாளருக்காக, தன்னை நம்பும் தேசத்துக்காக அந்த வலியை எனர்ஜியாக மாற்றி டோக்கியோ டிராக்கில் சரித்திரம் படைக்க நினைப்பார். நிச்சயம் அவர் அதைச் செய்து முடிப்பார்!

ஒலிம்பிக் ஹீரோக்கள்: ஜெஸ்ஸி ஓவன்ஸின் கால்கள் ஓடியது அவருக்காக மட்டுமல்ல!

அமெரிக்கா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் இவரைத்தான் ஃபேவரிட் என்று காட்டுகிறது. உசேன் போல்ட் அலங்கரித்த மேடையில் அடுத்து ஏறப்போவது இவர்தான் என்று ஆருடம் சொல்கிறார்கள். ஜமைக்காவிடம் தொடர்ந்து மூன்று முறை இழந்த மகுடத்தை மீண்டும் தனதாக்கி தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட புரொம்மெல் தான் மிகச் சிறந்த ஆயுதம் என்று அமெரிக்காவும் நம்புகிறது. அதை நிறைவேற்ற புரொம்மலுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

இதில் வேடிக்கை என்னவெனில், கார்லின் பாய்ட் தலைமையில் புரொம்மெல் பயிற்சி பெற்ற அந்த அமெரிக்க அகாடெமியின் பெயர் - Lightning Bolt Track Club!
அடுத்த கட்டுரைக்கு