Published:Updated:

Tokyo Olympics : மனு பாக்கர்... சீறிப்பாயும் தோட்டாவுக்கு பின்னால் ஒரு சஞ்சலமற்ற நதி!

மனு பாக்கர்
மனு பாக்கர்

மனு பாக்கர் கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் முந்தைய ரெகார்டுகளையெல்லாம் உடைத்து 9 தங்கங்களை வென்ற போது, மொத்த தேசமும் மிரண்டு போனது.

2018-ம் ஆண்டிலிருந்தே நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். மனதை சீராக்க ரொம்பவே சிரமப்பட்டு கொண்டிருக்கிறேன். இங்கே அது இன்னும் அதிகமாகியிருக்கிறது. எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை. அதற்கு இதுதான் சரியான நேரம்.
நவோமி ஒசாகா

இப்படி கூறி பிரெஞ்சு ஓபனிலிருந்து இடையிலேயே வெளியேறியவர் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா.

விளையாட்டு வீரர்களின் உடல்தகுதியை தாண்டி மனநிலை பற்றி இப்போது அதிகம் பேசப்படுகிறது. மனச்சோர்வின் காரணமாக பல வீரர்களும் விளையாட்டு போட்டிகளிலிருந்து ஒதுங்குவதையும் பார்க்க முடிகிறது. கொரோனா லாக்டெளனுக்குப் பிறகு இது மிகவும் அதிகரித்திருக்கிறது.  இந்த விஷயத்தில்தான் தனித்து தெரிகிறார் மனு பாக்கர். 

துப்பாக்கிச்சுடுதல் முழுக்க முழுக்க மனநிலை சார்ந்த ஒரு விளையாட்டு. ட்ரிகரை அழுத்தும் அந்த ஒரு நொடியில் மனதிற்குள் தேவையில்லாத விஷயங்கள் ஃப்ளாஷ் அடித்துவிட்டால் அவ்வளவுதான். பல வருட காத்திருப்பு, ஏக்கம், கனவு எல்லாம் அந்த ஒரு நொடி கவனச்சிதறலுக்கு இரையாகிவிடும். ஆனால், மனு பாக்கருக்கு ஒரு முறை கூட அப்படி நடந்ததில்லை. ஒரு முறை கூட அவரின் மனம் சமநிலை தவறியதில்லை. இத்தனைக்கும் அவர் பெரிய அனுபவமிக்க வீராங்கனையெல்லாம் இல்லை. வெறும் 19 வயதே ஆகியிருக்கும் டீன் ஏஜர்!

மனம் அலைபாய்வதற்கும் குழம்பி தவிப்பதற்கும் திக்குத்திசை தெரியாமல் சிதறுண்டு செல்வதற்கும் அத்தனை வாய்ப்பும் உள்ள வயது. ஆனால், மனு பாக்கர் கையில் துப்பாக்கி ஏந்தி நிற்கும் போது நமக்கு அப்படி தெரியவே தெரியாது.

Manu Bhaker
Manu Bhaker
Manu's Twitter handle
மூச்சை இழுத்துவிட்டு ஸ்டாண்ட் எடுத்து இடக்கையை பேன்ட் பாக்கெட்டுக்குள் விட்டு வலக்கையை மேலிருந்து நிதானமாக இறக்கி டார்கெட்டை லாக் செய்யும் போது, ஆள் அரவமற்ற அடர்ந்த காட்டில் சஞ்சலமற்று கிடக்கும் நதிக்கு நிகரான அமைதியையும் நிதானத்தையுமே அவரிடம் காண முடியும். சீறிப்பாயும் தோட்டாவிற்கான மூலதனம் இந்த நிதானம்தான்!

16 வயதில் ஜென் நிலையில் இப்படி ஒரு வீராங்கனை கேரளாவில் நடைபெற்ற தேசியளவிலான போட்டியில் முந்தைய ரெக்கார்டுகளையெல்லாம் உடைத்து 9 தங்கங்களை வென்ற போது, மொத்த தேசமும் மிரண்டு போனது.

சக வீராங்கனைகள் வருங்கால சூப்பர் ஸ்டாரை அருகில் பார்த்துவிட்ட பூரிப்போடு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். எந்த சலனமும் இல்லாமல் போடியத்தின் மீது ஏறி தனக்கான பதக்க அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டு இறங்கினார் மனு பாக்கர்.

கடந்த மூன்று நான்கு வருடங்களாக இதுதான் அவரின் வாடிக்கை. எந்த தொடருக்கு சென்றாலும் சைலன்ட் கில்லராக முந்தைய ரெக்கார்டுகளை உடைத்து தங்கம் வென்று தனது பெயரை அழுத்தமாக பதிவு செய்துவிடுவார்.

ஹரியானாவின் ஜாஜர் பகுதியில் பிறந்த மனு முதலில் தேந்தெடுத்தது துப்பாக்கிச் சுடுதலை அல்ல. கிரிக்கெட் தொடங்கி நீச்சல், கராத்தே, பாக்ஸிங் என பலதரப்பட்ட விளையாட்டுகளில் பயிற்சி பெற்றிருக்கிறார். எல்லா தோட்டாக்களும் எல்லா துப்பாக்கிகளுக்கும் செட் ஆகிவிடாதே! அந்தந்த துப்பாக்கிக்களுக்கு ஏற்ற பிரத்யேகமான தோட்டாக்கள் மட்டும்தான் அவற்றுக்கு செட் ஆகும். மனு எத்தனையோ விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினாலும் அவருக்கு கனகச்சிதமாக செட் ஆனது என்னவோ துப்பாக்கிச் சுடுதல்தான். 90-களில் ஆசிய மற்றும் காமென்வெல்த் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்ற வீரரான ஜஸ்பால் ராணாவிடமே தனது பயிற்சியை மேற்கொண்டார் மனு.

மனுவின் துப்பாக்கியிலிருந்து சீறிப்பாயும் தோட்டாவின் வேகத்திற்கு ஒப்பாகவே அவரின் வளர்ச்சியும் இருந்தது.

மனு பாக்கர்
மனு பாக்கர்
2018-லிருந்து 2021 வரை 6 உலகக்கோப்பை தொடர்களில் ஆடிய மனு பாக்கர் அத்தனையிலும் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். குறிப்பாக, 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவி சவுரப் சௌத்ரி மனு பாக்கர் கூட்டணி ஒரு முறை கூட தங்கத்தை தவறவிட்டதில்லை.

இளையோருக்கான ஒலிம்பிக்கில் தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம், காமென்வெல்த் போட்டியில் தங்கம் என இவரின் தோட்டாக்கள் குறி வைத்தது தங்கத்தை மட்டும்தான். பெரிய தொடர்களில் இதுவரை 14 தங்கங்ளை வென்றிருக்கும் மனு 4 வெள்ளிகளை வென்றிருக்கிறார். ஒரு வெண்கலம் கூட அவரது பதக்கப் பட்டியலில் இல்லை. மனு பாக்கரின் திறமைக்கு சாட்சி இதுதான். 99% தங்கம் வென்றுவிடுவார் மிஸ் ஆனால் வெள்ளி உறுதி இதுதான் மனுபாக்கர் கொடுத்திருக்கும் நம்பிக்கை.

டோக்கியோ ஒலிம்பிக்கில் 10மீ, 10மீ கலப்பு இரட்டையர், 25 மீ பிஸ்டல் பிரிவுகளில் பங்கேற்கும் மனு மூன்று தங்கத்தோடு நாடு திரும்பினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற நிலையே இருக்கிறது.

மனு பாக்கர்
மனு பாக்கர்

முதலில் குறிப்பிட்டதை போல மனு பாக்கரின் பெரும்பலம் அவருடைய சீரான மனநிலை மற்றும் நிதானம். அதை வேறு யாராலும் குலைத்துவிட முடியாது. தானே அதை குலைத்துவிடக் கூடாது என்பதற்காக இப்போது சமூக வலைதளங்களிலிருந்தும் ஒதுங்கிவிட்டார். இந்தக் கட்டுப்பாடு, இந்த தெளிவு இதுதான் மனு பாக்கர்.

19 வயதிலேயே அனைத்து தொடர்களிலும் உச்சபட்ச வெற்றியை பார்த்துவிட்டவர், இனி அடைவதற்கு வேறென்ன இருக்கிறது? இப்படியெல்லாம் அவருக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. நாம் அவருக்காக கொண்டாடிக் கொண்டிருக்கும் போது சஞ்சலமற்ற அவர் மனது நாளைய ஒலிம்பிக் போட்டியை டார்கெட்டாக லாக் செய்திருக்கும்.
அடுத்த கட்டுரைக்கு