Published:Updated:

ஒலிம்பிக் ஹீரோக்கள்: ஒலிம்பிக்ஸில் ஒரே தங்கம்; அதையும் தூக்கி எறிந்தவர் முகம்மது அலி! ஏன் தெரியுமா?

Muhammad Ali
News
Muhammad Ali ( Zarateman )

"என் மனசாட்சியும் நான் பின்பற்றும் கொள்கையும் வியட்நாம் அப்பாவிகளுக்கு எதிராகப் போரிடுவதைத் தடுக்கின்றன." - முகம்மது அலி

Published:Updated:

ஒலிம்பிக் ஹீரோக்கள்: ஒலிம்பிக்ஸில் ஒரே தங்கம்; அதையும் தூக்கி எறிந்தவர் முகம்மது அலி! ஏன் தெரியுமா?

"என் மனசாட்சியும் நான் பின்பற்றும் கொள்கையும் வியட்நாம் அப்பாவிகளுக்கு எதிராகப் போரிடுவதைத் தடுக்கின்றன." - முகம்மது அலி

Muhammad Ali
News
Muhammad Ali ( Zarateman )
ஒலிம்பிக்ஸில் ஒரே ஒரு தங்கப் பதக்கம் மட்டும்தான் ஜெயித்திருக்கிறார் முகம்மது அலி. ஆனால், உலகம் முழுக்க அவர் பிரபலம். ஒரு சூரியன், ஒரு சந்திரன் போல, உலகம் மதிக்கும் ஒற்றைக் குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி.

குத்துச்சண்டை மேடையில் மட்டுமல்ல... சமூக அக்கறையுடனும் நிறைய சண்டைகள் போட்டவர் அலி. அமெரிக்கராகப் பிறந்து, அமெரிக்க அரசையே எதிர்த்து, பதக்கத்தை இழந்து, சிறைக்கெல்லாம் போனவரை பிற்காலத்தில் 'வாழும் சகாப்தம்' என்று அந்த அரசே அங்கீகரித்தது வரலாறு. ஏழெட்டு பதக்கங்களை அள்ளியவர்கள் அந்த நாட்டில் ஏகப்பட்ட பேர் இருந்தாலும், 96-ம் ஆண்டு அமெரிக்க நகரான அட்லாண்டாவில் ஒலிம்பிக்ஸ் நடந்தபோது அதைத் துவக்கி வைத்தவர் முகம்மது அலிதான்.

Ali hitting foreman
Ali hitting foreman

அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் லூயிஸ்வில்லி நகரில் பிறந்தபோது அவருக்கு வைக்கப்பட்ட பெயர் காஸியஸ் கிளே. அப்பா விளம்பர போர்டுகள் வரையும் பெயிண்டர். அம்மா வீட்டு வேலைகள் செய்பவர். முரட்டுத்தனமாகச் சுற்றியபடி ஊர் வம்பை இழுத்து வந்த சிறுவனாகத்தான் கிளே அந்த ஊரில் அறிமுகம். வகுப்பில் கடைசி ராங்க்.

பன்னிரண்டு வயதில் ஆடிட்டோரியத்தில் விளையாடப் போயிருக்கும் போது அவன் சைக்கிளை யாரோ திருடிவிட்டார்கள். கோபமாக வெளியே வந்த கிளே, ''அவனைக் கண்டுபிடித்து கையைக் முறித்துவிடுகிறேன்'' என்று கத்தினான். அங்கேயிருந்த வெள்ளைக்கார போலீஸ்காரர், ''அதற்கு நீ குத்துச் சண்டை கற்றுக்கொள்ள வேண்டும் பையா'' என்று கண்சிமிட்டியபடி சொல்லிவிட்டுப் போனார்.

கிளே குத்துச்சண்டையைப் பற்றி அப்போதுதான் கேள்விப்பட்டான். அடுத்த நாளே உள்ளூர் கிளப் ஒன்றில் சேர்ந்து பயிற்சி பெற்றான். ஏழே வாரப் பயிற்சியின் முடிவில் குத்துச்சண்டை மேடையில் முதல் வெற்றி. அதன்பின் இருபத்தேழு வருடங்கள் அந்த மேடை கிளேவுக்குச் சொந்தமாகிவிட்டது.

பதினெட்டு வயதில் ரோம் ஒலிம்பிக்ஸுக்கு வந்தார் கிளே. லைட் ஹெவி வெயிட் பிரிவில் அமெரிக்கா சார்பில் மோத வந்தார். போலந்து நாட்டு வீரரான பிக்னியூ என்பவர்தான் அந்தப் பிரிவில் அதுவரை சாம்பியன். அவரை வீழ்த்தவே முடியாது என்று ஐரோப்பியர்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.
தகுதிச் சுற்றில் நான்கு வெற்றிகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் பிக்னியூவை சில நிமிடங்களில் வீழ்த்தி கிளே தங்கம் வென்றார். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். கழுத்தில் மாட்டியிருந்த தங்க மெடலை இரண்டு நாள்களுக்குக் கழற்றவே இல்லை.

அமெரிக்காவுக்குத் திரும்ப விமானம் ஏறிய போது, ஏர்போர்ட்டில் ரஷ்ய நிருபர் ஒருவர் கிளேவை மடக்கிக் கேள்வி கேட்டார்.

"அமெரிக்காவுக்காக நீங்கள் பதக்கம் ஜெயித்திருக்கிறீர்கள். அமெரிக்கா போனால் வெள்ளையர்களுக்குச் சமமாக உட்கார்ந்து, வெள்ளை சர்வர்கள் சப்ளை செய்ய, நீங்கள் சாப்பிட வாய்ப்பு இருக்கிறதா?"
Clay after fight
Clay after fight

கிளே கடுப்போடு திரும்பினார். “ஏன் போட மாட்டார்கள்? நான் சாம்பியன்” என்றார்.

ஆனால், அமெரிக்காவில் அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லியில் அவரை யாரும் வரவேற்கவில்லை. கடுப்போடு வெள்ளையர்கள் ஹோட்டலுக்குப் போனார். அங்கு சப்ளையர்கள் அவர் பக்கத்திலேயே வரவில்லை. ஆக்ரோஷமாக வெளியே வந்த கிளே, தன் பதக்கத்தை ஓஹியோ நதியில் தூக்கி எறிந்தார் (அப்புறம் அவரது நண்பர்கள் அதைத் தேடி எடுத்துக்கொடுத்தார்கள்).

"என்னை மதிக்காத நாட்டுக்காக நான் ஏன் பதக்கம் வென்று தர வேண்டும்?" என்று கொதித்த கிளே, அதன்பின் அமெரிக்காவுக்காக ஒலிம்பிக் உட்பட எந்தப் போட்டிகளுக்கும் போகவில்லை. தனிப்பட்ட தொழில்முறைப் போட்டிகளில் கவனம் செலுத்தி, சீக்கிரமே ஹெவி வெயிட் சாம்பியன் ஆனார்.
முகம்மது அலி
முகம்மது அலி

1964-ம் ஆண்டு சோனி லிஸ்டனுடன் மோதி வென்றபோதுதான் அவருக்கு உலகப்புகழ் கிடைத்தது. மியாமி பீச்சில் நடந்தது போட்டி. அப்போது லிஸ்டன் தோல்வியே அடையாத வீரர். 'லிஸ்டனை வெல்ல இனி ஒருவர் பிறந்து வரவேண்டும்' என்ற நினைப்பு அமெரிக்கர்களுக்கு இருந்தது. அந்த நினைப்பைத் தகர்த்தெறிந்தார் அலி.

அடுத்த மூன்று வருடங்கள் தொடர்ந்து புகழேணியில் ஏறிக் கொண்டே போன கிளேவுக்கு பெரிய பிரச்னை வந்ததே பெயர் மாற்றத்துக்குப் பிறகுதான். அமெரிக்க கறுப்பினத்தவர்கள் மத்தியில் 'நேஷன் ஆஃப் இஸ்லாம்' என்ற அமைப்பு பாப்புலராகி இருந்தது. கறுப்பின மக்கள் அடிமைத்தளையிலிருந்து விடுபட முஸ்லிமாக மாறுவதுதான் ஒரே தீர்வு என்று சொன்ன இந்த அமைப்பில்தான் சேர்ந்துவிட்டதாக அறிவித்த கிளே, தன் பெயர் இனிமேல் 'முகம்மது அலி' என்று அறிவித்தார்.

இந்த அமைப்பை ஏதோ தீவிரவாத கும்பல் ரேஞ்சில் பார்த்த அமெரிக்கா, முகம்மது அலியையும் சந்தேகப்பட ஆரம்பித்தது. அப்போது வியட்நாம் மீதான அமெரிக்காவின் யுத்தம் உச்சகட்டத்தில் இருந்தது. அந்த நேரத்தில் அமெரிக்க குடிமக்கள் ராணுவப் பணிக்கு வரவேண்டும் என்ற கட்டாயமும் இருந்தது.
முகம்மது அலியின் தேசபக்தியைப் பரிசோதிக்க நினைத்த அரசு, அவரை ராணுவப் பணிக்கு வருமாறு நிர்ப்பந்தித்தது. "என் மனசாட்சியும் நான் பின்பற்றும் கொள்கையும் வியட்நாம் அப்பாவிகளுக்கு எதிராகப் போரிடுவதைத் தடுக்கின்றன" என்று சொல்லி, ராணுவப் பணி செய்ய மறுத்துவிட்டார் அலி.

டென்ஷனான அரசு அவரது பதக்கத்தைப் பறித்தது. குத்துச்சண்டை லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. பல மாகாணங்கள் அவர் போட்டியில் பங்கேற்பதைத் தடை செய்தன. அவரை ஹீரோவாகப் பார்த்த அமெரிக்க மக்கள், ஒரே நாளில் மனம்மாறி விரோதப் பார்வை வீசினர். ராணுவ சேவை செய்ய மறுத்ததற்காக அலி சிறையில் அடைக்கப்பட்டார்.

மூன்றரை வருடங்கள்... தளர்ந்துபோய் வெளியில் வந்தார் அலி. 'அவர் இனி அவ்வளவுதான்' என எல்லோரும் நினைக்க, அது தப்புக் கணக்கு என நிரூபிக்க ஜோ ஃபிரேஸியருடன் மோதினார் அலி. வாழ்க்கையில் அவருக்கு முதல் தோல்வி அப்போதுதான் கிடைத்தது.

வெறிகொண்ட அலி மீண்டும் கடும் பயிற்சி எடுத்தார். அப்போது ஜைரே நாட்டின் தலைநகர் கின்ஸாஸாவில் ஒரு போட்டி ஏற்பாடு செய்தனர். அப்போதைய உலக சாம்பியன் ஜார்ஜ் ஃபோர்மேனுக்கும் அலிக்கும் மோதல். ஜெயிப்பவருக்கு ஒரு கோடி டாலர் பரிசு!

ஜார்ஜ் தன்னோடு மோதுபவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைப்பதில் கில்லாடி. அலிக்கும் அந்த கதிதான் நேரும் அவரது டாக்டர் நினைத்தார். போட்டி முடிந்ததும் அலியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போக சிறப்பு விமானத்தைக் கூட ரெடி செய்துவிட்டார்.

Muhammad Ali
Muhammad Ali

1974-ம் ஆண்டிலேயே உலகம் முழுக்க 100 கோடி பேர் பார்த்த நேரடி ஒளிபரப்பு என்று சாதனை படைத்த அந்தப் போட்டி தொடங்கியது. உடல் பலத்தை இழந்திருந்த அலி, தன் மூளையால் இந்தப் போட்டியை வெல்ல முடிவெடுத்தார். அதனால் புதிய யுக்தியை கையாண்டார். ஏழு ரவுண்டுகள் வரை ஹாயாக கயிற்றில் சாய்ந்தபடி ஜார்ஜின் தாக்குதலைத் தடுத்தார். திருப்பித் தாக்குவது மாதிரி பாவ்லா காட்டினாரே தவிர, தாக்கவில்லை. எட்டாவது ரவுண்டில் ஜார்ஜ் களைத்துவிட்ட நேரத்தில் அலி விட்டார் நான்கு குத்து. ஜார்ஜ் சரிந்து விழுந்துவிட்டார்! பழையபடி அலி உலக சாம்பியன்.

லாரி ஹோம்ஸுடன் அவர் மோதிய கடைசிப் போட்டி சோகமானது. அலியிடம் அவர் எதிரிகள் எல்லோரும் வாங்கிய அடிகளை ஒட்டுமொத்தமாக ஒரே போட்டியில் திருப்பிக் கொடுத்து விட்டார் ஹோம்ஸ். கிட்டத்தட்ட 125 குத்துகள். அதன் விளைவாக நரம்புகள் பாதிக்கப்பட்டு பார்கின்ஸன் நோய்க்கு ஆளானார் முகம்மது அலி.

வெற்றி வீரராகத் துள்ளி வலம்வந்த அவர், நோயாளியாக தளர்நடையில் மற்றவர்கள் துணையோடு குழந்தை மாதிரி நடந்ததை உலகம் வேதனையுடன் பார்த்தது. அலிக்கு நேர்ந்த இந்த சோகம்தான், 'குத்துச்சண்டைப் போட்டிகளையே தடை செய்ய வேண்டும்' என்று மனித உரிமை அமைப்புகளைக் குரலெழுப்ப வைத்தது.

புகழேணியில் இருந்தபோது அவரைப் புறக்கணித்த அமெரிக்கா, அதன்பின் அவரைக் கொண்டாடியது. 20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர் என அவர் மதிக்கப்பட்டார். கலாசார, நல்லெண்ணத் தூதுவராக உலகம் முழுக்கப் பறந்திருக்கிறார் அலி. முதல் வளைகுடா போருக்கு முன், அதைத் தவிர்க்க சதாம் உசேனிடம் பேச்சு நடத்தப் போனவரும் இவர்தான்.

லைலா அலி
லைலா அலி

அலிக்கு நான்கு மனைவிகள். ஒன்பது வாரிசுகள். இதில் லைலா அலி மட்டும் அப்பாவின் சரியான வாரிசாக குத்துச்சண்டை வீராங்கனை ஆகியிருக்கிறார்.

ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வியும் வேலைவாய்ப்பும் தருவதற்காக ஓர் அறக்கட்டளையை நடத்தி வந்த முகம்மது அலி 2016-ம் ஆண்டு மறைந்தபோது உலகமே துக்கம் அனுஷ்டித்தது.