Published:Updated:

ஒலிம்பிக் ஹீரோக்கள்: போலியோவை வென்ற வில்மா ருடால்ஃப், தங்கங்களையும் வென்ற கதை!

வில்மா ருடால்ஃப் | Wilma Rudoplh ( Joop van Bilsen / Anefo, CC0, via Wikimedia Commons )

மூன்றே வருடங்கள்... ஷூக்களை வீசியெறிந்து விட்டு வில்மா ருடால்ஃப் வெற்றுக்கால்களோடு நடந்து மைதானத்துக்குப் போனதைக் கண்டு அம்மா விக்கித்துப் போய்விட்டாள்.

ஒலிம்பிக் ஹீரோக்கள்: போலியோவை வென்ற வில்மா ருடால்ஃப், தங்கங்களையும் வென்ற கதை!

மூன்றே வருடங்கள்... ஷூக்களை வீசியெறிந்து விட்டு வில்மா ருடால்ஃப் வெற்றுக்கால்களோடு நடந்து மைதானத்துக்குப் போனதைக் கண்டு அம்மா விக்கித்துப் போய்விட்டாள்.

Published:Updated:
வில்மா ருடால்ஃப் | Wilma Rudoplh ( Joop van Bilsen / Anefo, CC0, via Wikimedia Commons )
''அவ்வளவுதான்! இனிமேல் இவள் யாருடைய துணையுமின்றி சுயமாக நடக்க சான்ஸே இல்லை. வாழ்நாள் முழுக்க ஊன்றுகோலும், வீல்சேரும்தான் இவளுக்குத் துணை!”
இப்படி உதட்டைப் பிதுக்கி டாக்டர்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு மாற்றுத் திறனாளிப் பெண், தன் ஊனத்தை மன உறுதியால் வென்று, ஒலிம்பிக்ஸில் மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றார் என்றால் நம்ப முடிகிறதா?
அப்படி ஓர் அதிசயத்தை நிகழ்த்தியவர், அமெரிக்க வீராங்கனை வில்மா குளோடின் ருடால்ஃப்.

அமெரிக்காவின் புனித பெத்லஹேம் பகுதியில் பிறந்தவர் வில்மா. வில்மாவின் அப்பா லோக்கல் ரயில்வே ஸ்டேஷனில் சுமை தூக்கும் போர்ட்டர். அம்மா வீட்டு வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தியவர். அவர்களுக்கு மொத்தம் இருபத்திரண்டு குழந்தைகள். வில்மா இருபதாவது!

சரியான கவனிப்பில்லாததாலேயே நான்கு வயதுக்குள் இரு முறை நிமோனியா ஜுரத்தில் விழுந்து செத்துப் பிழைத்தார் வில்மா. இது போதாது என்று சிவப்பு அம்மை நோய் என்ற கொடுமையான நோயும் தாக்க, நோஞ்சான் குழந்தையாகிவிட்டாள். மெகா சோதனையாக வில்மாவை போலியோவும் தாக்கியது. கால்கள் செயலிழந்துபோய் வில்மா சுருண்டு படுக்கையில் விழுந்துவிட, ரொம்ப லேட்டாகத்தான் வில்மாவை டாக்டரிடம் அழைத்துச் சென்றார் அம்மா.

வில்மா ருடால்ஃப் | Wilma Rudoplh
வில்மா ருடால்ஃப் | Wilma Rudoplh
Joop van Bilsen / Anefo, CC0, via Wikimedia Commons

டாக்டர் ஆரம்ப கட்ட சோதனையை முடித்ததுமே தெளிவாகச் சொல்லிவிட்டார். "முன்கூட்டியே வந்திருந்தால் ஊனத்தை ஓரளவு தடுத்திருக்கலாம். இப்போது நிலைமை சீரியஸ். கால்கள் சூம்பிப் போக ஆரம்பித்துவிட்டன. இனி, இவள் சுயமாக நடக்க முடியாது. ஊன்றுகோல்களின் துணை இவளுக்குத் தேவை!”

நான்கு வயது வில்மா தெளிவாகச் சொன்னாள்... ''டாக்டர் பொய் சொல்றாரும்மா! உடம்பு சரியானதுமே நான் நல்லா நடப்பேன்... ஓடுவேன்!''

அம்மா குழந்தையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டாள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தூரத்து நகரம் ஒன்றில், யாரோ ஒரு டாக்டர் போலியோவால் பாதித்த குழந்தைகளுக்கு காலில் மசாஜ் செய்து நடக்க வைப்பதாகச் சொன்னார்கள். அந்த அதிசய சிகிச்சையைத் தருவதற்காக தன் குழந்தையை அழைத்துப்போனார் வில்மாவின் அம்மா. வாரா வாரம் பத்துமணி நேரம் பஸ்ஸில் பயணித்து, அந்த டாக்டரிடம் போவார்கள்.

கொஞ்ச நாளில் அந்த டாக்டரும் கைவிரித்தார். "வீட்டிலேயே மசாஜ் செய்து கொள்ளுங்கள். ஓரளவுக்குத்தான் முன்னேற்றம் தெரியும்!" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

அந்தக் கடைசி வாரத்தில் அம்மா பஸ்ஸில் அழுதபடியே வர, ''கவலைப்படாதேம்மா! நான் நல்லா நடக்கத்தான் போறேன்'' என்று சிரித்தபடியே சொல்லி, அம்மாவைத் தேற்றினாள் குழந்தை வில்மா.

வில்மா போராடுவதைப் பார்த்துப் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் 'ஸ்பெஷல் ஷூ' வாங்கிக் கொடுத்தார். அந்த ஷூவில் பாதத்திலிருந்து முட்டிவரை பிரத்யேகமாக ஒரு ஸ்பிரிங் இருந்தது. அதுவரை தவழ்ந்து கொண்டிருந்த வில்மா, அதை அணிந்து யாருடைய துணையுமின்றி நடக்கமுடிந்தது.

வில்மா ருடால்ஃப் | Wilma Rudoplh
வில்மா ருடால்ஃப் | Wilma Rudoplh
Joop van Bilsen / Anefo, CC0, via Wikimedia Commons
கொஞ்சம் கொஞ்சமாக நடைபழகி, நடையில் வேகத்தைக் கூட்டி, சகோதரர்களோடு சேர்ந்து கூடைப்பந்து மைதானம் வரை போய்விட்டாள் வில்மா. மூன்றே வருடங்கள்... ஷூக்களை வீசியெறிந்து விட்டு வெற்றுக்கால்களோடு வில்மா நடந்து மைதானத்துக்குப் போனதைக் கண்டு அம்மா விக்கித்துப் போய்விட்டாள்.

அப்போது வில்மாவுக்கு பதினோரு வயது. பள்ளியில் கூடைப்பந்து அணியில் அவளைச் சேர்த்துக் கொண்டார்கள். மைதானத்தில் அவளது கால்கள் றெக்கை கட்டிப் பறந்தன. கூடைப்பந்து மைதானத்தில் அவள் சுற்றிச் சுழல்வதைப் பார்த்த ஓட்டப் பந்தய பயிற்சியாளர் ஒருவர் அவளைக் கூப்பிட்டு, ''அமெரிக்காவுக்காக ஓடி ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் திறமை உன் கால்களுக்கு இருக்கிறது. ஓட்டப் பந்தயத்தில் பயிற்சி பெறுகிறாயா?'' என்று கேட்டார்.

ஒரே வருடப் பயிற்சி... 1956-ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் நடந்தபோது வில்மாவுக்கு வயது பதினாறு. 400 மீட்டர் ரிலே ரேஸில் பங்கேற்ற அமெரிக்க வீராங்கனைகள் குழுவில் வில்மாவும் ஒருவர். குழுவிலேயே சின்னப் பெண் இவர்தான். வில்மா நன்றாக ஓடினாலும், இந்தக் குழுவுக்குக் கிடைத்தது வெண்கலப் பதக்கம்தான்! வில்மாவுக்குப் பெருத்த ஏமாற்றம். "அடுத்த தடவை தங்கம் வெல்லாமல் விடமாட்டேன்!" என்று சவால் விட்டபடி அமெரிக்கா திரும்பினார்.

நான்கு ஆண்டுகள் கடுமையான பயிற்சி,

1960-ம் ஆண்டு ரோமில் ஒலிம்பிக்ஸ் நடந்தபோது வில்மா மூன்று போட்டிகளில் அமெரிக்கா சார்பாக ஓடினார். முதலில் ஓடிய நூறு மீட்டர் ஓட்டத்தை பதினோரு நொடிகளில் கடந்து, புதிய உலக சாதனையோடு தங்கம் வென்றார். மூன்று நாள்கள் கழித்து இருநூறு மீட்டர் ஓட்டத்தில் அடுத்த தங்கம். இறுதியாக 400 மீட்டர் ரிலே ரேஸ். பந்தயம் தொடங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு அவரது கால் சுளுக்கிக்கொண்டது. ஆனாலும், அசுரத்தனமாக ஓடி போட்டோ ஃபினிஷில் முந்தி மூன்றாவது தங்கத்தையும் ஜெயித்தார்.

வில்மா ருடால்ஃப் | Wilma Rudoplh
வில்மா ருடால்ஃப் | Wilma Rudoplh
Lindeboom, Henk / Anefo, CC BY-SA 3.0 NL via Wikimedia Commons
பொதுவாக ஆஃப்ரோ அமெரிக்கப் பிரபலங்களைப் பாராட்டுவதில் தயக்கம் காட்டும் ஐரோப்பிய பத்திரிகைகள்கூட வில்மாவைப் புகழ்ந்தன. அவரை 'கறுப்பு மான்' என வர்ணித்தன. சிறுவயதில் ஊனமாகி நடக்கவே முடியாமல் கிடந்த ஒரு பெண் ஒலிம்பிக்ஸ் ஓட்டத்தில் தங்கம் வெல்ல முடியுமா என்று உலகமே அவரை அதிசயமாகப் பார்த்தது.

இரண்டே வருடங்களில், இருபத்திரண்டு வயதில் ஓட்டப்பந்தயங்களிலிருந்து வில்மா ஓய்வுபெற்றபோது அமெரிக்காவே அதிர்ந்தது. “என்னால் முடியும் என்பதை நிரூபிக்கவே நான் ஓடினேன். இந்த மூன்று தங்கங்களை விட உயர்ந்த நோக்கங்களுக்காக கடவுள் என்னைப் படைத்திருக்கிறார்” என்ற வில்மா, ஓர் அறக்கட்டளையை ஆரம்பித்தார்.

ஆஃப்ரோ அமெரிக்க் ஏழைக் குழந்தைகளைத் தேடிப் பிடித்து அவர்களுக்கு ஒழுக்கத்தையும், கல்வியையும் அளிப்பதையே தன் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த அவர், தனது 54-வது வயதில் மூளையில் கட்டி வந்து இறக்கும்வரை மைதானத்தில் ஓடுவதற்காகத் தன் கால்களைப் பதிக்கவில்லை.