Published:Updated:

விறகைத் தூக்கி நடந்தாள், வியர்வை ஊற்றி வளர்ந்தாள்! மீராபாய் சானு பயோபிக் - எபிசோட் - 3

Mirabai Chanu

ஒலிம்பிக் நாயகி மீராபாய் சானுவின் கதை படமாக்கப்பட்டால் எப்படி இருக்கும்! இதோ, அந்த பயோபிக்கின் மூன்றாம் பாகம்!

விறகைத் தூக்கி நடந்தாள், வியர்வை ஊற்றி வளர்ந்தாள்! மீராபாய் சானு பயோபிக் - எபிசோட் - 3

ஒலிம்பிக் நாயகி மீராபாய் சானுவின் கதை படமாக்கப்பட்டால் எப்படி இருக்கும்! இதோ, அந்த பயோபிக்கின் மூன்றாம் பாகம்!

Published:Updated:
Mirabai Chanu
மீராபாய் சானு பயோபிக் - பாகம் 1: "உன் பொண்ணு இரும்பு மனுஷிப்பா"

இது பாடலுக்கான நேரம்.

மீராபாய் சானுவின் பயிற்சிகள், போராட்டங்கள், வளர்ச்சி, அவர் குடும்பத்தின் தியாகம் போன்றவை மான்டேஜ் காட்சிகளாய் விரிகின்றன.

“விறகைத் தூக்கி நடந்தாள், வியர்வை ஊற்றி வளர்ந்தாள்

தேசம் மறந்த மண்ணின் விடியலாய் அவளே வருவாள்…”

மணிப்பூரிலிருந்து மிசோரம் செல்லும் லாரிகள்தான் மீராவின் வாகனங்கள். ஒவ்வொரு நாளும் அந்தப் பாதையில் செல்லும் லாரியில் ஏறித்தான் பயிற்சிக்குச் செல்கிறாள். அப்படியொரு லாரியைப் பிடித்துத்தான் வீடு திரும்புகிறாள். அவள் லட்சியம் அறிந்து லாரி டிரைவர்களும் அதற்கு உதவுகிறார்கள். சில நேரங்களில் காத்திருந்து கூட அவளை அழைத்துச் செல்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பயிற்சி அரங்கில் வெயிட்களை தூக்கும் சானு, வீட்டிலும் மரக்கட்டைகளைத் தூக்கி பயிற்சி செய்கிறாள். அங்கே ஒவ்வொரு நாளும் வெயிட்டின் எடை கூடுகிறது. இங்கே ஒவ்வொரு நாளும் மரக்கட்டை பெரிதாகிக்கொண்டிருக்கிறது. அவள் தூக்குவதற்காக காட்டுக்குள் சென்று பெரிய பெரிய மரக்கட்டைகளை வெட்டி கயிறு கட்டி கஷ்டப்பட்டு இழுத்து வருகிறார்கள் அவள் உடன்பிறப்புகள். ஜூனியர் லெவலில் பள்ளி அளவிலான, மாவட்ட அளவிலான போட்டிகளில் கலக்குகிறாள் மீரா.

தங்கம், வெள்ளி முலாம்கள் பூசப்பட்ட குட்டி மெடல்களும் சான்றிதழ்களும் வீட்டில் குவிகின்றன. கிரித்தி, தாம்பி ஆகியோரின் வேலைப்பளு கூடுகிறது. மீராவுக்கு செய்யும் செலவுகள் கூடுகிறது.

மீரா வெற்றிகளைக் குவிக்க, அவள் சகோதர, சகோதரிகள் ஒவ்வொருவராக தங்கள் பால் கிளாசை அவளுக்குக் கொடுக்கிறார்கள். அவ்வப்போது வாத்தியாரின் மனைவி மீராவிடம் பாதம், பிஸ்தா போன்றவற்றைக் கொடுத்துச் செல்கிறார்.

மாநில அளவிலான பளுதூக்குதல் போட்டியில் ஜஸ்ட் லைக் தட் வெற்றி பெறுகிறாள். அனைவரின் கவனமும் அவள் பக்கம் திரும்புகிறது.

செய்தித்தாளை Zoom In செய்தால் அதில் அவள் வெற்றி பெற்ற படமும் செய்தியும் இடம்பெற்றிருக்கிறது. Zoom Out செய்தால் அது மீரா வீட்டு சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கிறது.

பாடல் முடிந்தது

CUT

2011 - பட்டாயா - ஆசிய ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐந்தாம் இடம் பெறுகிறார் மீராபாய் சானு. அவரால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மணிப்பூர் வந்ததும் அவருக்கு ஆறுதல் சொல்லி அவரைத் தேற்றுகிறார் அனிதா.

பயிற்சிகள் இன்னும் உக்கிரமாகின்றன. 150 கிலோ, 160 ஆகிறது. மீராவுக்குள் இருக்கும் வேட்கை பார்த்து அனிதாவே ஆடிப்போகிறார்.

சில நாள்களாக வீட்டில் யாருடனும் சரியாகப் பேசாமலேயே இருக்கிறாள் மீரா. எந்தக் கேள்விக்கும் ஒற்றை வார்த்தைக்கு மேல் பதில் வருவதில்லை. தன் மகளின் நிலை அறிந்து வருந்தினாலும், அவள் வெற்றி வேட்கையைப் புரிந்துகொண்டு தன்னைத் தானே தேற்றிக்கொள்கிறார்.

அடுத்த ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்புக்கான டிரயல்ஸ்.

போட்டிக்கு சில நிமிடங்கள் முன்னதாக... அனிதாவிடம் வந்து நிற்கிறார் ஒரு ஆண் பயிற்சியாளர். அவர் பார்வையில் ஒரு திமிர் தெரிகிறது.

ஆண் பயிற்சியாளர்: "நான் ஷிவ்பால் சிங். பஞ்சாப் கோச். நீங்கதான் அந்த மணிப்பூர் கோச்சா"

அனிதா: "மிசோரம் கோச். என் ஸ்டூடன்ட் மீராதான் மணிப்பூர்"

ஷிவ்பால் சிங்: "அட ரெண்டுக்கும் என்ன வித்யாசம் இருக்கு?"

வெகுண்டெழும் கடும் கோபத்தை அடக்கிக்கொண்டு உள்ளே சென்றுவிடுகிறார் அனிதா. போட்டிகள் தொடங்குகின்றன. மீரா சிறப்பாகச் செயல்படுகிறாள். ஷிவ்பால் சிங்கின் மாணவி குர்ஜித் கௌர் ஓரளவு நன்றாகவே செயல்படுகிறாள். ஆனால், மீராவுக்கு அருகில் கூட வர முடியவில்லை. இறுதியில்163 கிலோ தூக்கி ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தேர்வாகிறார் மீரா. குர்ஜித் 152 கிலோவே தூக்குகிறார்.

தன்முன் அமைதியாக நின்றுகொண்டிருக்கும் குர்ஜித்தைக் கடிந்துகொண்டிருக்கிறார் ஷிவ்பால். அருகில் சென்று நிற்கிறார் அனிதா.

அனிதா (குர்ஜித்திடம்): "கண்ணா, உன் post match form fill பண்ணலைனு கூப்பிட்றாங்க பாரு"

தன்னைக் கோபமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் ஷிவ்பாலை அன்னார்ந்து பார்த்துவிட்டு டெஸ்க் நோக்கி நகர்கிறாள் குர்ஜித். அங்கே மீரா ஃபார்ம் ஃபில் செய்துகொண்டிருக்கிறாள்.

அனிதா (ஷிவ்பாலிடம்): "163-கும் 152-கும் பெரிய வித்யாசம் இருக்குல... அது மிசோரமுக்கும் மணிப்பூருக்கும் நடுவலேயும் இருக்கு"

ஷிவ்பால் பேசாமல் நிற்கிறார்.

அனிதா: "களிமண்ணைப் பிடிக்கும்போது கை சுத்தமா இருக்கணும்னு சொல்வாங்க. இல்லைனா, அதுல கண்டதும் கலந்து சீக்கிரம் உடைஞ்சிடுமாம். குழந்தைங்க களிமண்ணு சார். நம்ம மனசு சுத்தமா இருக்கணும்"

சொல்லிவிட்டு நகர்கிறார் அனிதா.

CUT

சில நாள்கள் கழித்து...

ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கப்பவர்கள், மயான்மர் கிளம்ப விமான நிலையத்தில் தயாராய் அமர்ந்திருக்கிறார்கள். முதல் முறையாக விமான நிலையம் வந்திருக்கும் சிறுவர்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கண்ணாடி தடுப்புகள் வெளியே தெரியும் விமானங்களைப் பார்த்து வியந்துகொண்டிருக்கிறார்கள். காலை நேரம். சூரியன் உதித்துக்கொண்டிருக்க, மேல்வானம் தங்க நிரத்தில் தகதகித்துக்கொண்டிருக்கிறது. அருகே அமர்ந்திருக்கும் சஞ்சிதா சானு மீராவிடம் சொல்கிறார் - “வானத்தைப் பாரேன் எப்டி தங்கமா மின்னுதுனு”

மீரா: “எனக்கு எல்லாமே தங்கமாத்தான் தெரியுது”

CUT

மியான்மர். போட்டி நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் இறுக்கமாகவே இருக்கிறார் மீரா. கண்ணில் காண்பதெல்லாம் அவருக்குத் தங்கமாகவே தெரிகிறது. பயிற்சியில் இருக்கும்போது தூக்கவேண்டிய வெயிட்டும்கூட தங்கமாகவே அவர் கண்களில் படுகிறது. வெறித்தனமாக பயிற்சி செய்கிறார்.

போட்டி நாள். மேடையில் ஏறுகிறார். ஒவ்வொரு வாய்ப்பிலும் அநாயசமாக தூக்கிக்கொண்டே இருக்கிறார். Snatch, Clean & Jerk சேர்ந்து 168 கிலோ தூக்குகிறார். தங்கம்! அதுநாள் வரை தன் கற்பனையில் கண்டதை இப்போது கண்களில் காண்கிறார். கழுத்தில் தொங்குவதை கைகளில் இருக்கமாய்ப் பிடித்து முத்தமிடுகிறாள். வழிந்தோடும் கண்ணீரில் பட்டுத் தெரிக்கும் ஒளியின் பிரதிபலிப்பில் அவன் காண்பதெல்லாம் தங்கமாய் மிளிர்கிறது.

CUT

2011. வேகமாக வீட்டிற்குள் ஓடி வருகிறாள் மீரா.

மீரா: “அம்மா நான் நேஷனல் கேம்ப் போறேன். நான் நேஷனல் கேம்ப் போறேன்”

தாம்பி: “எங்க பஞ்சாபா?”

மீரா: “ஆமாம்மா. பாட்டியாலாக்கு. என்னை கூப்டுட்டாங்கமா. நான் நேஷனல் கேம்ப் போறேன்.”

ஒரு நொடி ஸ்தம்பித்து நிற்கிறார் தாம்பி. மகிழ்ச்சியில் வார்த்தை வரவில்லை. மகளைக் கட்டியணைத்து உச்சி முகர்கிறார். மனது இலகுவாகி பாரம் குறைந்த உணர்வு. கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. அதன் பிரதிபலிப்பில் மீரா தங்கமாய் மிளிர்கிறாள்.”

CUT
Mirabai Chanu
Mirabai Chanu

பாட்டியாலா. கைகளில் உடமைகளும், தோள்களில் பொறுப்பும், நெஞ்சம் முழுக்க கனவும் சுமந்து உள்ளே நுழைகிறாள் மீரா. பலதரப்பட்ட விளையாட்டு மைதானங்கள், வீரர்களைக் கடந்து உள்ளே நுழைகிறாள். எல்லாம் புதிதாக இருக்கிறது. வழியனுப்பி வைத்த குடும்பத்தினரின் முகம் கண்முன் வந்துகொண்டே இருக்கிறது. அவள் அறைக்குச் சென்றதும் மெத்தையில் படுத்துவிடுகிறாள். லேசாகக் கண்ணீர் கசிகிறது. ரூம் மேட்கள் உள்ளே வந்ததும் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து அமர்கிறாள். அறிமுகம் செய்துகொள்கிறாள்.

ரூம் மேட் 1: “எந்த ஊரு மீரா நீ. அசாமா”

அந்தக் கேள்வியின் தொணியே தன் முன் என்னென்ன சவால்கள் இருக்கப்போகின்றன என்பதை மீராவுக்கு உணர்த்தியது.

மீரா: “இல்ல மணிப்பூர்”

தன் குடும்பத்தை ரொம்பவே மிஸ் செய்வது போல் உணர்ந்தாள். கண்களின் ஓரம் கண்ணீர் சேர்ந்திருந்தது. ஆனால், அதில் பட்டுத் தெறித்த ஒளியின் பிரதிபலிப்பில் இப்போது தங்கம் தெரியவில்லை. அதுவரை அனுபவித்திடாத ஒரு புதிய உணர்வு அவளுக்குள் தொற்றிக்கொண்டது - பயம்.

CUT

தொடரும்...

மீராபாய் சானு பயோபிக் - பாகம் 1: "உன் பொண்ணு இரும்பு மனுஷிப்பா"