Published:Updated:

அமெரிக்கா, சீனாவின் ஒலிம்பிக் ஆதிக்கத்துக்குக் காரணம் பெண்கள்... இந்தியா தவறவிடுவது அங்குதான்!

China & USA focus more in the female athletes
China & USA focus more in the female athletes ( AP )

இந்தியாவின் ஏமாற்றத்துக்கு ஏதேதோ காரணங்கள் சொல்லி நம்மை சமாதானம் செய்துகொள்கிறோம். ஆனால், நாம் செய்யத் தவறும் அந்த முக்கிய விஷயத்தை, இந்த டாப் அணிகள் ஸ்மார்ட்டாக செய்யும் விஷயத்தைப் பற்றி நாம் யோசிக்கவேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

என்ன அது? எல்லா விளையாட்டுகளிலும் பெண்களுக்கான சம வாய்ப்பு. பெண்கள் அணியிலும் அதிக முதலீடு. இதுதான் இந்த அணிகள் இந்த ஒலிம்பிக் தொடரில் ஆதிக்கம் செலுத்தக் காரணமாக இருந்திருக்கிறது.

USA in Tokyo 2020
USA in Tokyo 2020
Info: M.Magesh

113 மெடல்கள் வென்றிருந்த அமெரிக்காவுக்கு, ஆண்கள் வென்றுகொடுத்தது என்னவோ 41 மெடல்கள்தான். பெண்கள்தான் 66 பதக்கங்கள் வென்று கொடுத்தனர். கலப்பு அணிகளால் 6 பதக்கங்கள் கிடைத்தன. ஆண்களை விட பெண்கள் 15 பதக்கங்கள் அதிகமாக வென்றனர். சீனா அள்ளிய 88 பதக்கங்களில், ஆண்கள் 35 வென்றனர். பெண்கள் 47. கலப்பு அணிகள் மூலம் 6 மெடல்கள் கிடைத்தன.

தொடர்ந்து ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்தும் இந்த நாடுகளுக்கு அதிக பதக்கங்களை வென்றுகொடுத்திருப்பது பெண்கள்தான். காரணம், இந்த நாடுகளுக்காக அதிகம் பங்கேற்பவர்களும் பெண்கள்தான்.

USA athletes count
USA athletes count
Info: M.Magesh

மொத்தம் 615 பேர் பங்கேற்ற அமெரிக்க அணியில் 330 பெண்கள். அதேபோல், 406 பேர் கொண்ட சீன அணியில் 281 பேர் பெண்கள். ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி அணியில் 148 ஆண்களே பங்கேற்ற நிலையில் 185 பெண்கள் கலந்துகொண்டார்கள். பிரிட்டன் அணியில் பங்கேற்ற 376 பேரில் 200 பேரும், 484 பேர் பங்கேற்ற ஆஸ்திரேலியக் குழுவில் 259 பேரும் பெண்களே.

113 ஆண்கள் பங்கேற்ற நெதர்லாந்து அணியில் இருந்த பெண்களின் எண்ணிக்கை 165. ஆக, இந்த ஒலிம்பிக்கில் முதல் 7 இடங்களைப் பெற்ற நாடுகளில், ஜப்பானைத் தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளிலுமே பெண்களே அதிக அளவில் பங்கேற்றிருந்தனர்.

China athletes count
China athletes count
Info: M.Magesh

இங்குதான் மற்ற நாடுகள் கோட்டை விடுகின்றன. ஆண்கள் விளையாட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பெண்களுக்கு எல்லா நாடுகளும் கொடுப்பதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதாரணமாக, வாட்டர் போலோ விளையாட்டை எடுத்துக்கொள்வோம். இதன் ஆண்கள் பிரிவில் ரியோ, டோக்கியோ ஒலிம்பிக் தொடர்களில் செர்பியா தங்கம் வென்றது. லண்டனில் குரோஷியா தங்கம் வென்றது. ஆண்கள் பிரிவில் மிகச் சிறந்த அணிகளாக இருந்தாலும், இந்த நாடுகளின் பெண்கள் வாட்டர் போலோ அணிகள் ஒலிம்பிக் தொடருக்கே தகுதி பெறவில்லை. பெண்கள் பிரிவில் இந்த 3 ஒலிம்பிக் தொடர்களிலும் தங்கம் வென்ற அணி - அமெரிக்கா!

USA women's Waterpolo team
USA women's Waterpolo team
AP

வாட்டர் போலோ மட்டுமல்ல. வாலிபால், பேஸ்கட் பால் பெண்கள் பிரிவிலும் டோக்கியோவில் தங்கம் வென்றது அமெரிக்க பெண்கள் அணி. அதுபோக, சாஃப்ட்பாலில் வெள்ளியும், கால்பந்தில் வெண்கலமும் அமெரிக்க பெண்கள் அணிக்குக் கிடைத்தன.

USMNT & USWNT comparison
USMNT & USWNT comparison
Info: M.Magesh

அமெரிக்காவின் ஆண்கள் கால்பந்து அணி கடந்த 100 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே உலகக் கோப்பை காலிறுதிக்குத் தகுதிபெற்றிருக்கிறது. 2018 உலகக் கோப்பைக்குத் தகுதி பெறவேயில்லை. ஆனால், பெண்கள் அணியோ நான்காவது முறையாக உலக சாம்பியன் ஆகியிருக்கிறது.

ஜிம்னாஸ்டிக்ஸை எடுத்துக்கொண்டாலும் இதே கதைதான். கிரீஸ், ஆர்மீனியா போன்ற அணிகள் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் ஒரேயொரு ஆணை அனுப்பி ஒரு பதக்கம் வென்றன. ஆனால், அந்த நாடுகள் சார்பில் பெண்கள் வரவே இல்லை. 4 ஆண்கள், 1 பெண் சென்ற துருக்கி அணியில், ஆடவர் பிரிவில் 1 வெண்கலம் கிடைத்தது. அதேசமயம், சீனா 8 ஆண்களையும், 13 பெண்களையும் அனுப்பியிருந்தது. அமெரிக்கா சார்பில் 6 ஆண்களும் 14 பெண்களும் பங்கேற்றனர். இங்குதான் கிரீஸ், துருக்கி போன்ற நாடுகள் சறுக்குகின்றன.

China dominates in Gymnastics
China dominates in Gymnastics
AP

மற்ற நாடுகளிலெல்லாம் ஒரு விளையாட்டில் ஆண்கள் பிரிவில் வெற்றியடைந்தால்தான், பெண்கள் பக்கமும் அந்த சங்கங்களின் பார்வை நகரும். அமெரிக்கா, சீனா போன்ற பெரிய நாடுகளில் அப்படியில்லை. பெண்கள் பிரிவில் மற்ற நாடுகள் ஈடுபாடு காட்டாததால், அந்தப் பிரிவில் இந்தப் பெரிய நாடுகள் நன்றாக தங்களைப் பலப்படுத்திக்கொண்டன. ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் தங்கள் குழுவில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்தனர்.

பெய்ஜிங் ஒலிம்பிக்கின் அமெரிக்க குழுவில் பெண்களை விட 24 ஆண்கள் அதிகமாக இருந்தனர். 2012-ல் ஆண்களை விடவும் 8 பெண்கள் அதிகமாகினர். ரியோவில் எட்டு பதினெட்டானது. டோக்கியோவில் அது 45-ஆக உயர்ந்து நிற்கிறது.

Swing in the percentage of female athelets in US Olympics team is evident
Swing in the percentage of female athelets in US Olympics team is evident
Info: M.Magesh

2012 ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட சீன அணியில் ஆண்களைவிட 54 பெண்கள் அதிகமாகப் பங்கேற்றிருந்தனர். ரியோவில் அந்த எண்ணிக்கை 95 ஆனது. இப்போது அது 156 என பல மடங்கு உயர்ந்திருக்கிறது!

Women's domination is always seen in the Chinese Olympics contingent
Women's domination is always seen in the Chinese Olympics contingent
Info: M.Magesh

நெதர்லாந்தின் லண்டன் ஒலிம்பிக் குழுவில் 95 ஆண்களும் 80 பெண்களும் இடம்பெற்றிருந்தனர். ரியோவுக்கு ஆண்களைவிட 28 பெண்கள் அதிகமாகச் சென்றனர். இம்முறை அந்த எண்ணிக்கை 52 என உயர்ந்திருக்கிறது. டோக்கியோவில் 36 மெடல்கள் வென்று தங்களின் மிகச் சிறந்த ஒலிம்பிக் மெடல் டேலியைப் பதிவு செய்திருக்கிறது நெதர்லாந்து.

பிரிட்டன், ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி, ஆஸ்திரேலியா என ஒவ்வொரு அணியிலும் அப்படித்தான்.

பெண்கள் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்பதும், அதற்கான வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படுவதும், ஆண்கள் பிரிவுக்கு இணையான தரத்தில் அவர்களுக்கு வசதிகள் செய்துதரப்படுவதும் அந்த அணிகள் அதிக பதக்கங்கள் வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

Netherlands following the trend
Netherlands following the trend
Info: M.Magesh

இந்தியாவைப் பொறுத்தவரை எப்போதும் ஆண்களே ஒலிம்பிக்கிற்கு அதிகமாகச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நாம் பின்னால் சென்றுகொண்டிருக்கிறோம். வில்வித்தையில் 3 ஆண்கள் சென்றால், ஒரு பெண்ணே சென்றிருக்கிறார். தடகளத்தில் பங்கேற்கச் சென்ற ஒன்பது பேரிலும் மூவர் கலப்பு ஓட்டத்துக்குச் சென்றவர்கள். மகளிர் ஹாக்கி அணியுமே இதுவரை 3 ஒலிம்பிக் தொடர்களில்தான் பங்கேற்றிருக்கிறது. இம்முறை சிறப்பாகச் செயல்பட்ட பிறகுதான் அவர்களைப் பற்றிப் பேசுகிறோம். இல்லாவிட்டால், இன்னும் ஆண்கள் அணி மட்டுமே இந்திய ஹாக்கி அணியாக கருதப்படும்.

This is where India should focus
This is where India should focus
Info: M.Magesh

ஒரு குறிப்பிட்ட விளையாட்டில் கவனம் செலுத்தவேண்டும் என்பதைத் தாண்டி, பங்கேற்கும் விளையாட்டில் பெண்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்குவதும் அவசியம்! நம் ஒலிம்பிக் கனவுகள் நிஜமாவதற்கு இது அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு