Published:Updated:

சிமோன் பைல்ஸ்... உலக ஜிம்னாஸ்டிக்கின் ராஜமாதா டோக்கியோவில் புதிய சவாலுக்குத் தயார்!

Simone Biles
Simone Biles

ஏழு தேசிய சாம்பியன்ஷிப் பதக்கம், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற 19 பதக்கங்கள், ஐந்து ஒலிம்பிக் பதக்கம் (இதில் நான்கு தங்கம்). அதுமட்டுமல்லாமல், ஜிம்னாஸ்டிக் வரலாற்றில் இவரைப் போன்ற சிறந்த வீரரைப் பார்த்ததில்லை என்ற நிலையை எட்டியாகிவிட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இத்தனைக்குப் பிறகும் நீங்கள் நிரூபிக்க வேண்டியது ஏதாவது இருக்கிறதா? பலரும் இல்லை என்றுதான் கூறுவார்கள். ஆனால் இவருக்கு எதுவுமே போதாது. வென்றுகொண்டே இருக்கவேண்டும். சாதித்துக்கொண்டே இருக்கவேண்டும். சிமொன் பைல்ஸ்... டோக்கியோவிலும் ஆதிக்கம் செலுத்தத் தயாராகிவிட்டார்!

4 அடி 8 அங்குலம் உயரம் மட்டுமே கொண்ட இந்த தங்க மங்கை அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர். 24 வயதாகும் இவர்தான் இப்போதைய ஜிம்னாஸ்டிக் உலகின் தன்னிகரற்ற சாம்பியன். 2013-ம் ஆண்டு ஜிம்னாஸ்டிக் போட்டியில் அறிமுகமானதிலிருந்து, தன்னுடைய ஒப்பற்ற திறமை, ஆற்றலை பயன்படுத்தி தேசிய, உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் என அனைத்துப் போட்டிகளிலும் பதக்கங்களாக வாங்கிக் குவிக்கிறார். இதுவரை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மட்டும் 25 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இன்னொன்றை சொன்னால் வாயடைத்துப் போவீர்கள். முக்கியமான சர்வதேசப் போட்டிகளில் ஏதாவது புதுவிதமான நகர்வை (ஜிம்னாஸ்டிக்கில்) செய்தால் அதற்கு அந்த வீரரின் பெயரே சூட்டப்படும். இதுவொரு கௌரவம். இப்படி பைல்ஸ் பெயரில் நான்கு ஜிம்னாஸ்டிக் திறன்கள் இருக்கிறது. ஐந்தாவதாக ஒன்றை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நிகழ்த்துவதற்கு தயாராக இருக்கிறார். புவுயீர்ப்பு விசையை தோற்கடித்து செய்யும் இந்த வித்தையை இதுவரை ஒலிம்பிக் போட்டியில் ஆண் ஜிம்னாஸ்டிக் வீரர்கள் மட்டுமே செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Simone Biles
Simone Biles

“பைல்ஸ் ஒரு அதிசியப்பிறவி. அவர் புதிதாக எதையும் செய்ய வேண்டாம். ரியோ ஒலிம்பிக்கில் செய்ததை தொடர்ந்தாலே போதும். இந்த முறையும் அவர்தான் வெற்றி பெறுவார். ஆனாலும், அவர் தன்னை சவாலுக்கு உட்படுத்தி கொள்கிறார். தனக்கு தானே போட்டி போட்டுக் கொள்கிறார். ஒரு வகையில் இதுவும் நல்லதுதான். எங்கள் விளையாட்டை இது அடுத்தக்கட்டத்துக்கு உயர்த்துவதோடு மற்ற வீரர்களுக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கும்” என்கிறார் 2012 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரான ஜோர்டின் வீபர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2016 ரியோ ஒலிம்பிக்கில் வெற்றிக்கு மேல் வெற்றி குவித்த பிறகு, தனது உடலுக்கு ஓய்வு கொடுப்பதற்காகவும், அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு மனதளவில் தயாராகவும் ஒரு வருடம் எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுத்தார் பைல்ஸ். இந்த சமயத்தில் ஒருமுறை கூட அவர் ஜிம் செல்லவில்லை.

இதற்கிடையில், முன்னாள் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் மருத்துவர் லேரி நாசரால் தானும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டேன் என்ற அதிர்ச்சியான செய்தியை 2018ம் ஆண்டு உலகுக்கு தெரிவித்தார் சிமோன் பைல்ஸ். ஏற்கனவே நூற்றுக்கணக்கான வீரர்கள் நாசர் மீது புகார் தெரிவித்திருந்தனர். நாசரால் பாதிக்கப்பட்ட பலரும் முறையிட்டும் அவரை நீக்க மறுத்து வந்தது அமெரிக்க ஜிம்னாஸ்டிக் கழகம். இது வேலைக்கு ஆகாது என முடிவு செய்த பைல்ஸ், தனக்கு நேர்ந்ததை சமூக ஊடகத்தில் பதிவிட்டார். இனி அந்த பயிற்சி மையத்திற்கு வர மாட்டேன் என்றும் அதில் கூறியிருந்தார். நாசரால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்காகவும் இனி எதிர்காலத்தில் எந்த ஒரு வீரரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் இந்தக் கடிதத்தை எழுதினார் பைல்ஸ். அதன்பிறகே அந்தப் பயிற்சி மையத்தை மூடியது அமெரிக்கா.

“எனக்கு நேர்ந்ததை நினைத்து நான் கண்ணீர் விட்டு அழுதேன். மனநல ஆலோசனைக்காக ஜிம் செல்ல முடியாத நிலை கூட ஏற்பட்டது” எனக் கூறுகிறார் பைல்ஸ். முதலில் மனநல சிகிச்சைக்கு மறுத்த பைல்ஸை, அவரது தாயார் நெல்லி தான் வற்புறுத்தி அழைத்துச் சென்றுள்ளார். ஒரு வருட சிகிச்சைக்குப் பிறகே இதில் தன்னுடைய தவறு எதுவும் இல்லை என உணரத் தொடங்கியிருக்கிறார்.

Simone Biles
Simone Biles

பாதிக்கப்பட்ட நபர்களில் இப்போது பைல்ஸ் மட்டுமே அமெரிக்க தேசிய அணியில் உள்ளார். இதனால் டோக்கியோவில் அவரின் செயல்பாடுகள் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“எல்லாவற்றையும் விட, கொரோனாவால் ஏற்பட்ட தாமதத்தால் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. பயிற்சிக்கு ஒரு வருடம் அதிகமாக கிடைத்தது எந்த விதத்திலும் உதவாது” என கூறுகிறார் பைல்ஸ். ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், மற்றவர்களைவிட எப்போதும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற அவரது விடா முயற்சியும், கடுமையான உடற்பயிற்சியும், ஒப்பற்ற திறமையும் அவரை ஜிம்னாஸ்டிக் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர் என்ற நிலையை எட்ட வைக்கும். “இது சிமோன் 2.0” எனக் கூறுகிறார் பைல்ஸ்.

கடந்த 18 வருடங்களாக ஜிம்மில் என்ன செய்ய வேண்டும், எதை எதிர்பார்க்க வேண்டும் என பைல்ஸுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் கடந்த ஒரு வருட காலமாக அவர் ஓய்வில் இருந்த சமயத்தில், அவருடைய நீண்டகால பயிற்சியாளர் ஏமி பூர்மன் வேறு வேலைக்குச் சென்றுவிட்டார். தன்னுடைய ஆறு வயதிலிருந்து வேறு பயிற்சியாளரிடம் செல்லாமல் இருந்த பைல்ஸ், இப்போது முதல் முறையாக புதிய பயிற்சியாளரை நியமித்துள்ளார். தம்பதியர்களான செசிலும் லேண்டியும் முன்னாள் பிரெஞ்ச் ஜிம்னாஸ்டிக் வீரர்கள். பயிற்சியாளர் லேண்டியின் முதல் பணியே, uneven bars போட்டியில் பைல்ஸின் நம்பிக்கையை அதிகரிப்பதுதான். ஏனென்றால் இந்த ஒன்றில் மட்டும்தான் பைல்ஸ் மிகவும் பலவீனமாக இருக்கிறார்.

ஜிம்னாஸ்டிக்கில் முதுகை திருப்பி வளைவது, குதிப்பது, திரும்புவது, தனது திறனில் புதிய பாரிணாமத்தை அடைவது - இதுவே சிமோன் பைல்ஸை உற்சாகமூட்டும் விஷயங்கள். அமனார் வால்ட் (Amanar Vault) பற்றி கேட்டால் பக்கம் பக்கமாக பேசுகிறார். ஆனால் அவருடைய மனநிலை, உணர்வுகள் பற்றி கேட்டால் சுருக்கமாக பதிலளிக்கிறார்.

ஒரு வருடம் எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ளாதது அவரது ஒலிம்பிக் பயிற்சியை பாதிக்கும் என கேள்விகாள் எழுந்தது. ஆனால் ஒரு வருட ஓய்வுக்குப் பிறகு தான் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே அதற்குப் பதில் அளித்தார். யுர்செங்கோ பைக் வால்ட் என அழைக்கப்படும் இந்தப் போட்டிக்கு மிக அதிகப்படியான ஆற்றல் தேவைப்படும். “ஒரு வருடம் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருந்தது மனதளவிலும் உடலளவிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்ற வருடம் என் உடலில் இந்தளவிற்கு வலி இல்லை. போன வருடம் இருந்த உடல் எனக்கு இப்போது கிடைத்தால், அதைவிட சந்தோஷம் வேறு எதுவும் கிடையாது” என்கிறார் பைல்ஸ்.

Simone Biles
Simone Biles

தனது லட்சியத்தை பைல்ஸ் ஒருபோதும் மறைக்க விரும்பியதில்லை. அதை அப்படியே ஆரத் தழுவிக் கொள்கிறார். அவரது சிறப்பியல்புக்கு இதுதான் முக்கிய காரணம். அவரது எண்ணம் முழுவதும் டோக்கியோ ஒலிம்பிக்கில்தான் உள்ளது. தன்னை எல்லாரும் GOAT என்று கூப்பிடுவது அவருக்கும் தெரிந்தே இருக்கிறது. அதேசமயம் மற்றவர்களுக்கு ரோல்மாடலாக இருப்பதில் அவருக்கு விருப்பமே. “நீங்கள் நன்றாக விளையாடுகிறீர்கள் என சிறுவர்கள் உங்களைப் பார்த்து கூறும்போது யாருக்குதான் சந்தோஷம் வராது. என்னை GOAT என்று அழைப்பதில் எனக்கு சந்தோஷமே.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு