Published:Updated:

சுட்டதெல்லாம் தங்கம்... மனு பாக்கரோடு சாதிப்பாரா சவுரப் சௌத்ரி!

சவுரப் சௌத்ரி
சவுரப் சௌத்ரி ( Saurabh's official Twitter handle )

19 வயதிலேயே பல ஒலிம்பியன்களையும் உலக சாதனையாளர்களையும் பின்னுக்குத் தள்ளி தரவரிசையில் இரண்டாம் இடம் வரை உயர்ந்தார். இவ்வளவு இளம் வயதில் துப்பாக்கிச் சுடுதலில் வேறொரு வீரர் இப்படி செயல்பட்டதில்லை என மொத்த விளையாட்டு உலகமுமே ஆச்சர்யப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பரபரப்பான இந்த உலகில் எல்லாருமே தங்களுக்கான அடையாளத்தை தேடியே ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஒரு நிரந்தரமான அடையாளத்தைப் பெற ஒரு வெற்றி போதும் என பொதுவாக சொல்லப்படும். ஆனால், இந்தியா மாதிரியான 130 கோடி மக்கள் தொகை கொண்ட பெரிய நாட்டில் அத்தனை பேரும் அப்படி வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், ஒரு சாதாரண வெற்றி உங்களுக்கு எந்தவித அடையாளத்தையும் கொடுக்காது. ஒரு நாள் தலைப்பு செய்தியோடு மறக்கப்படுவார்கள். 'நிலாவுல ரெண்டாவதா காலை வச்சது யாரு?' என்கிற நிலைமைதான் மிஞ்சும்.

இங்கே நம் பெயர் நிலைக்க வேண்டுமாயின், இந்த சமூகம் இதற்கு முன் பார்த்திடாத ஒரு உச்சபட்ச வெற்றியை நாம் பெற்றாக வேண்டும். அந்த உச்சபட்ச வெற்றிதான் கூட்டத்தில் கரைந்து போகாத வகையில் உங்களுக்கு ஒரு அடையாளத்தை கொடுக்கும். 'இந்தியாவின் தங்கமகன்' என சௌரப் சௌத்ரி கொண்டிருக்கும் அடையாளத்தை போல!

19 வயதாகும் சவுரப் சௌத்ரி இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கின் துப்பாக்கிச் சுடுதலில் 10மீ ஏர் பிஸ்டலில் இரண்டு பிரிவுகளில் பங்கேற்கிறார். இதில் தனிநபர் பிரிவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஏழாவது இடம்பிடித்தார் சவுரப்.

உத்திரப்பிரதேசத்தின் மீரட்டில் ஒரு சிறுகிராமத்தை சேர்ந்தவர் சௌரப். இவருடைய குடும்பம் விவசாய பின்னணியை கொண்டது. எளிய குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இவருடைய கனவுகள் ரொம்பவே பெரிதானது. கிராமத்தின் அருகிலுள்ள பயிற்சி மையத்தில் துப்பாக்கிச் சுடுதலில் ஆரம்பகட்ட பயிற்சிகளை மேற்கொண்டார். அந்த விளையாட்டில் என்னென்ன சாதிக்க முடியுமோ அத்தனையையும் சாதிக்க வேண்டும் என்பதே மனம் முழுக்க நிறைந்திருக்கிறது.

தன்னுடைய கனவை தந்தையிடம் சொல்லி சொந்தமாக ஒரு துப்பாக்கி கேட்ட போது, மொத்தக் குடும்பமும் குழம்பிப் போனது. விளையாட்டுத் துப்பாக்கி கேட்க வேண்டிய வயதில் ஒரிஜினல் துப்பாக்கி கேட்டால் எந்த குடும்பத்துக்கும் அப்படித்தான் இருக்கும்.

ஆனால், மகன்கள் கேட்ட பொருளை வாங்கித் தரமாட்டேன் என சொல்லுமளவுக்கான சக்தி எந்த தந்தைக்கும் வாய்க்கப் பெற்றதில்லையே! சௌரபின் ஆசைப்படியே ஒரு துப்பாக்கியை ஏழ்மைக்கு மத்தியிலும் பெரும் பொருட்செலவில் வாங்கிக் கொடுத்து தங்களுடைய நிலத்தில் ஒரு பகுதியை பயிற்சி செய்யவும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

தந்தை கையிலிருந்து வரமாக கிடைக்கப்பெற்ற துப்பாக்கியைக் கொண்டு தனது பயிற்சிகளை தொடங்கினார் சௌரப். எப்படி துப்பாக்கியிலிருந்து சீறிப்பாயும் தோட்டா எந்த தடுமாற்றமும் சிதறலும் இல்லாமல் இலக்கை துளையிடுமோ அதுபோன்றே சௌரபின் பயிற்சி முறை இருந்தது. முழுக்க முழுக்க அவரின் எண்ணமெல்லாம் துப்பாக்கிச்சுடுதலின் மீது மட்டுமே இருந்தது.

சவுரப் சௌத்ரி
சவுரப் சௌத்ரி
Saurabh's Official Twitter handle
யாரிடமும் அவ்வளவாக பேசுவதைக் கூட விரும்பமாட்டார். பயிற்சி மையத்தில் எத்தனை மணி நேரம் செலவழித்தாலும் மீண்டும் வீட்டிற்கு வந்து தன்னுடைய பிரத்யேக பயிற்சியிலும் ஈடுபடுவார். துப்பாக்கியைத் தவிர அவரது மனதில் வேறெதுவும் இருக்காது
சவுரப் சௌத்ரியின் நண்பர்கள்

ஏன் இப்படி இவ்வளவு சீரியஸாக இருக்க வேண்டும் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாமே என கேட்பவர்களிடம் 'சாதனையாளனாக இருப்பதற்கு இப்படித்தான் இருக்க வேண்டும்' என கறாராகக் கூறிவிடுவார். அதாவது, நிலாவில் இரண்டாவதாக கால் வைத்து ஒரே நாளோடு மறக்கப்படும் ஆளாக இருக்க அவருக்கு விருப்பமில்லை. அவருக்கு தன்னுடைய பெயர் வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும். தன்னுடைய எளிய விவசாய குடும்பத்திற்கு ஒரு உலக அடையாளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். நினைத்தது போலவே தனக்கான வரலாற்றையும் அடையாளத்தை செதுக்க தொடங்கினார்.

கலந்துக்கொண்ட அத்தனை தொடர்களிலும் தங்கம் வென்றார். 2018 ISSF ஜுனியர் உலகக்கோப்பையில் மூன்று தங்கங்கள், அதே ஆண்டில் ஆசியப்போட்டியில் தங்கம், இளையோருக்கான ஒலிம்பிக்கில் தங்கம், ISSF உலகக்கோப்பைகளில் மனுபாகரோடு கூட்டணி அமைத்து தங்கம்
சவுரப் சௌத்ரி
சவுரப் சௌத்ரி
Saurabh's official Twitter handle

தான் கலந்துக்கொள்ளும் எந்தத் தொடரிலும் தங்கத்திற்கு குறைவாக அவர் திருப்தி அடைந்ததே இல்லை. மேலும், இதற்கு முன்னர் சீனியர்கள் பலரும் செய்து வைத்திருந்த ரெக்கார்ட்களையும் சுட்டுத் தள்ளினார். 19 வயதிலேயே பல ஒலிம்பியன்களையும் உலக சாதனையாளர்களையும் பின்னுக்குத் தள்ளி தரவரிசையில் இரண்டாம் இடம் வரை உயர்ந்தார். இவ்வளவு இளம் வயதில் துப்பாக்கிச் சுடுதலில் வேறொரு வீரர் இப்படி செயல்பட்டதில்லை என மொத்த விளையாட்டு உலகமுமே ஆச்சர்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விளையாட்டுலகம் மட்டும் ஆச்சர்யப்பட்டால் போதுமா? வரலாற்றில் இடம்பெற ஒட்டுமொத்த உலகத்தையும் ஆச்சர்யப்பட வைக்க வேண்டும். அதற்கான ஒரே வழி ஒலிம்பிக்! உலக நாடுகள் பலவும் மோதிக்கொள்ளும் அந்த யுத்தத்தில் வென்றால் மட்டுமே ஒட்டுமொத்த உலகையும் கொண்டாட வைக்க முடியும். ஏற்கனவே தங்கமகன் என பெயரெடுத்துவிட்ட சௌரப் சௌத்ரி ஒலிம்பிக்கிலும் தங்கப்பதக்கத்திற்கே குறி வைத்திருக்கிறார். நிச்சயம் மனு பாக்கரோடு இணைந்து கலப்பு இரட்டையர் போட்டியில் வெற்றிபெறுவார் என எதிர்பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு