Published:Updated:

சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி : ஒலிம்பிக்கில் ஆச்சர்யம் தரும் பேட்மின்டன் கூட்டணி!

கடந்த இரு ஒலிம்பிக் போட்டிகளாக இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் விளையாட்டு பேட்மின்டன். லண்டனில் சாய்னா நேவாலும், ரியோவில் சிந்துவும் முறையே வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தனர்.

இதனால் தற்போது தொடங்கவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கிலும் இந்திய பேட்மின்டன் அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த முறைகளில் பெண்களே பதக்கம் வென்று அசத்தியிருக்க இம்முறை ஆண்களும் நம்பிக்கையளிக்கின்றனர். அதில் மிக முக்கியமாக வீரர்களாக திகழ்கிறார்கள் இரட்டையர் பிரிவில் போட்டியிட உள்ள சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி. இக்கூட்டணி உலகளாவிய இரட்டையர் தரவரிசை பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்ததால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு நேரடியாக தகுதி பெற்றார்கள். இன்று டோக்கியோ ஒலிம்பிக்கில் நடைபெற்ற முதல் சுற்றுப்போட்டியில் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை சைனீஸ் தாய்பே வீரர்களை 21-16, 16-21, 27-25 என்ற செட் கணக்கில் தோற்கடித்து இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள அமலாபுரத்தில் 2000-ம் ஆண்டு பிறந்தவர் சாத்விக் சாய்ராஜ். தந்தை மாநில அளவிலான பேட்மின்டன் வீரர் என்பதால் இயல்பிலேயே ரேக்கெட்டை கையில் எடுத்தார் சாத்விக். பின்னர் 2014-ம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள கோபிசந்த்தின் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். ஓர் சிறந்த இரட்டையர் பிரிவு வீரராக சாத்விக் உருவானதற்கான முதல் அத்தியாயம் அங்கே தான் தொடங்கப்பட்டது. மறுபக்கம்1997, ஜூலை 7அன்று மும்பையில் பிறந்தவர் சிராக் சந்திரசேகர் ஷெட்டி.

2015-ம் ஆண்டு நடைபெற்ற டாடா ஓப்பன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று தனது கரியரின் முதல் பெரிய வெற்றியை பதிவுசெய்தார் சாத்விக். அதற்கடுத்த ஆண்டும் கலப்பு இரட்டையர் பிரிவில் பல்வேறு வெற்றிகளை பெற்று வந்தாலும் சிரக் ஷெட்டியுடன் கை கோர்த்த பின்பே புதிய உயரங்களை நோக்கி பயணிக்க தொடங்கினார். 2016-19 முதலான ஆண்டுகளில் சர்வதேச பேட்மின்டன் கூட்டமைப்பின் (BWF) ஆறு தொடர்களில் தங்கம் வென்று அசத்தியது இக்கூட்டணி.

SathwikSairaj & Chirag Shetty
SathwikSairaj & Chirag Shetty

மேலும் BWF வேர்ல்ட் டூரில் இரண்டு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றனர். 2016-ம் ஆண்டு ஹைதராபாத்திலும் 2020-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவிலும் நடைபெற்றது ஆசிய அளவிலான பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள். அவை இரண்டிலும் வெண்கலம் வென்றது இக்கூட்டணி. இவை அனைத்திற்கும் உச்சமாக 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய நகரான கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் இரட்டையர் பிரிவில் வெள்ளியும், அணி பிரிவில் தங்கமும் வென்று சாதனை படைத்தது இந்த ஜோடி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது ஒலிம்பிக் போட்டிகளுக்காக தயாராகிவரும் வரும் இக்கூட்டணிக்கு உலகின் முன்னாள் நம்பர்-1 வீரரான மதியாஸ் போயே பயிற்சியளித்து வருவது கூடுதல் சிறப்பு. கடந்த சில வருடங்களாக உலக பேட்மின்டன் அரங்கில் சிறப்பாக செயல்பட்டு மிகுந்த நம்பிக்கையுடன் டோக்கியோ ஒலிம்பிக்கை வெற்றியோடு தொடங்கியிருக்கும் இக்கூட்டணி பதக்கத்தை வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சாத்விக் - சிராஜ் இணை இந்தோனேஷியாவின் கிடியன் - சுக்குமோஜி இணையுடன் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மற்றுமொரு க்ரூப் சுற்றுப்போட்டியில் விளையாட இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு