Published:Updated:

உலகின் நம்பர் 1, உலகக்கோப்பை சாம்பியன்ஸ்... ஆனால், ஒலிம்பிக்கில் மட்டும் சொதப்புவது ஏன்?

மனு பாக்கர் - செளரப் செளத்ரி
மனு பாக்கர் - செளரப் செளத்ரி

மனு பாக்கருக்கும் இந்திய துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளரான ஜஸ்பால் ராணாவுக்கும் இடையே பல காலமாக சுமூகமான உறவு இல்லை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கிரிக்கெட் உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் விராட் கோலியால் இந்திய அணிக்கு ஐசிசி கோப்பையையோ, பெங்களூர் அணிக்கு ஒரு ஐபிஎல் கோப்பையையோ வென்று கொடுக்க முடியவில்லை. இந்திய கிரிக்கெட் அணியும் கேப்டன் கோலியும் எதிர்கொள்ளும் இதே பிரச்னையைத்தான் இப்போது இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்/வீராங்கனைகளும் எதிர்கொண்டிருக்கின்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இந்தியா செல்வதற்கு முன்பு, இந்தியா இந்த ஒலிம்பிக்கில் எப்படியும் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்லும் என கணிக்கப்பட்டிருந்தது. ரியோ ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற நாடு, அதற்கடுத்த ஒலிம்பிக்கிலேயே இரட்டை இலக்கில் பதக்கம் வெல்வதென்பது இமாலய இலக்கே. ஆனாலும் இந்தியா நம்பியது. காரணம், துப்பாக்கி சூடுதல் போட்டி.

மனு பாக்கர் - செளரப் செளத்ரி
மனு பாக்கர் - செளரப் செளத்ரி

இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் ஹாக்கி அணி 11 பதக்கங்களை வென்று கொடுத்திருக்கிறது. ஹாக்கிக்கு பிறகு அதிக பதக்கங்களை வென்று கொடுத்திருப்பது துப்பாக்கி சுடுதல்தான். இதுவரை 4 பதக்கங்களை வென்று கொடுத்திருக்கின்றனர். அபினவ் பிந்த்ரா ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று வரலாறே படைத்திருந்தார்.

இந்த வரலாறுகளோடு இந்த முறை துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு மொத்தம் 15 வீரர்/வீராங்கனைகளை அனுப்பியிருந்தது இந்தியா. இதுவரை ஒலிம்பிக்கில் துப்பாக்கி சூட்டில் இத்தனை வீரர்கள் பங்கேற்றதே இல்லை. மேலும், பங்கேற்றத்தில் பெரும்பாலானோர் தங்களது பிரிவில் உலகளவிலான தரவரிசைகளில் நம்பர் 1, நம்பர் 2 என டாப்பில் இருப்பவர்கள்.

பல உலகக்கோப்பைகளில் தங்கவேட்டை நடத்தியவர்கள். இதனாலேயே இவர்கள் எப்படியும் ஒலிம்பிக்கில் பதக்கத்தை குவித்துவிடுவார்கள். இந்தியாவின் இரட்டை இலக்க பதக்க லட்சியத்தை சாத்தியமாக்கிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது.

துப்பாக்கி சுடுதலில் இந்திய சூப்பர் ஸ்டார்கள் என சொல்லப்பட்ட முக்கிய வீரர்/வீராங்கனைகள் எல்லாம் தங்கள் பிரிவுகளில் ஏறக்குறைய ஆடி முடித்துவிட்டார்கள். இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை கூட இவர்களால் வென்று கொடுக்க முடியவில்லை.

உறுதியாக பதக்கத்தத்தோடுதான் வருவார்கள் என சத்தியம் செய்து கூறப்பட்ட சௌரப் சௌத்ரி, மனு பாக்கருமே கூட வெறுங்கையுடனேயே நிற்கின்றனர்.

இந்தியாவின் இரட்டை இலக்க பதக்க லட்சியமும் சுக்கு நூறாக நொறுங்கிவிட்டது. உலகளவில் சிறந்த வீரர்களாக இத்தனை நாளும் இருந்தவர்கள், ஒன்றாக ஒலிம்பிக்கில் சென்று சொதப்பியதற்கான காரணம் என்ன?

ஒலிம்பிக் போன்ற உலகளவிலான மேடையில் ஆடும்போது அழுத்தம் அதிகமாக இருக்கும். இதை இந்திய வீரர் வீராங்கனைகளின் பர்ஃபார்மென்ஸின் மூலமும் உணர முடிந்தது. 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் தகுதிச்சுற்றில் மிகச்சிறப்பாக இலக்கை துளைத்து முதலிடம் பிடித்த சௌரப் சௌத்ரி, இறுதிச்சுற்றில் பதற்றமடைந்து ஏழாம் இடமே பிடித்திருந்தார்.

மனு பாக்கரும் அப்படியே. துப்பாக்கியில் பிரச்னை ஏற்பட்டு 20 நிமிடம் தடைபட்ட போதும் மீண்டு வந்தார். கடைசி ஷாட்டில் 10 அடிக்க வேண்டி நிலையில் அதுவரை இல்லாத வகையில் மோசமாக 8 மட்டுமே அடித்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஆடிய இரட்டையர் பிரிவிலும் இப்படியே சொதப்பியிருந்தனர். தகுதிச்சுற்றில் முதலிடம். இறுதிச்சுற்றில் ஏழாம் இடம்.

மனு பாக்கர்
மனு பாக்கர்

10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் யாங் கியான் எனும் சீன வீராங்கனை போட்டியில் வென்ற பிறகும் பதக்கத்தை வாங்கி முடிக்கும் வரை எந்தவித சலனமுமே இல்லாமல் அமைதியாக இருந்தார். அருகில் வெள்ளி, வெண்கலம் வென்றவர்களெல்லாம் துள்ளி குதித்துக் கொண்டிருந்தார்கள். யாங் கியான் பதக்கம் வென்றதற்கான காரணமும் இதில்தான் ஒளிந்திருக்கிறது. ஆர்ப்பாட்டமான உணர்வுகளுக்கு துப்பாக்கி சூடு வீரர்கள் எப்போதுமே இடம் கொடுக்கக்கூடாது. எவ்வளவு பெரிய அழுத்தமான சூழலிலும் அந்தளவு மன அமைதியையும் நிதானத்தையும் கடைபிடிப்பவர்களால் மட்டுமே துப்பாக்கி சுடுதலில் வெல்ல முடியும்.

சௌரப் சௌத்ரி, மனு பாக்கர் இருவருமே நிதானமான வீரர்கள்தான். ஆனால், அழுத்தமான சூழல்களில் இன்னும் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், இதுமட்டும்தான் பிரச்னையென்றால் அனுபவத்தின் வழி இது சரியாகிவிடும் என எளிதில் கடந்துவிடலாம். துப்பாக்கி சுடுதலில் இதைத்தாண்டியும் இந்தியாவிற்கு ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கிறது.

சௌரப் சௌத்ரியும் மனு பாக்கரும் தோல்வியடைந்து வெளியேறிய பிறகு, துப்பாக்கி சுடுதல் அரங்கிற்கு வெளியே தேசிய ரைஃபிள் கூட்டமைப்பின் தலைவர் ரணீந்தர் சிங் ஒரு பேட்டியளித்தார். அதில்தான் பல உண்மைகள் வெளியே வந்தது.

மனு பாக்கருக்கும் இந்திய துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளரான ஜஸ்பால் ராணாவுக்கும் இடையே பல காலமாக நல்ல உறவு இல்லை என்றார்.

ஜஸ்பால் ராணா
ஜஸ்பால் ராணா
Jaspal's Twitter handle

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனு பாக்கர் மூன்று பிரிவுகளில் பங்கேற்க வேண்டும் என விரும்ப, ஜஸ்பால் ராணாவோ ஒரு பிரிவில் மட்டுமே முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார். இதிலிருந்தே இருவருக்கும் மோதல் தொடங்கிவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு போட்டிக்கு வெள்ளை டி-ஷர்ட்டை அணிந்து வந்திருக்கிறார் ஜஸ்பால் ராணா. அதில், மனு பயிற்சியாளர் ஜஸ்பாலுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய ஒரு மெசேஜ் அப்படியே எழுதப்பட்டிருந்திருக்கிறது.

ரணீந்தர் சிங் இருவருக்கும் இடையே எவ்வளவோ சமாதானம் பேசியும் பிரச்னை தீரவில்லை. இதனால், ஜஸ்பால் ராணாவுக்கு பதில் ரோனக் பண்டி,த் மனு பாக்கருக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதெல்லாம் மூன்று மாதங்களுக்கு முன் நடந்தது. வருடக்கணக்காக பலரும் தயாராகிக்கொண்டிருக்கும் போது, ஒலிம்பிக்கிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு வீராங்கனைக்கு புதிய பயிற்சியாளரை நியமிப்பது மூடத்தனம். ஆனால், அதுதான் இங்கே நடந்திருக்கிறது.

உலகின் நம்பர் 1, உலகக்கோப்பை சாம்பியன்ஸ்... ஆனால், ஒலிம்பிக்கில் மட்டும் சொதப்புவது ஏன்?

ஜஸ்பால் ராணாவின் அணுகுமுறை குறித்து இதற்கு முன்பே 2018-ல் சௌரப் சௌத்ரியும் இன்னொரு வீராங்கனையும் NRAI-க்கு புகார் அளித்திருக்கிறார்கள். NRAI செவியே சாய்க்கவில்லை. இப்போது, விஷயம் கையை மீறி சென்ற நிலையிலேயே வேறு வழியின்றி நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

மொத்த பழியையும் ஜஸ்பால் மீது போட்டுவிட்டு மற்ற அனைவரும் தப்பிக்க முயற்சிக்கின்றனர் என ஜஸ்பாலுக்கு ஆதரவாகவும் பல குரல்களும் எழுந்திருக்கிறது. இதில் மிகப்பெரிய நிர்வாகக் கோளாறு அரங்கேறியிருப்பதே வெளிச்சத்துக்கு வருகிறது. ஆனால், இது இன்றைக்கு நேற்று நடப்பதில்லை பல காலமாக இதுதான் நிலை. 2016 ஒலிம்பிக்கிற்கு ஹீனா சித்து NRAI அளித்த பயிற்சியாளருக்கு பதில் தனது கணவரையே பயிற்சியாளராக அழைத்துச் சென்றார்.

ககன் நரங் பயிற்சியாளருக்கு ஒத்துழைக்காமல் தன் இஷ்டத்திற்கு நடந்துக் கொண்டார். ரியோ ஒலிம்பிக்கில் சொதப்பும் வரை இதையெல்லாம் வேடிக்கையே பார்த்துக் கொண்டிருந்தது NRAI. இதன்பிறகே, பதக்கம் வெல்லாமல் போனதற்கான காரணங்களை அறிய ஒரு கமிட்டியை அமைத்தது NRAI.

மனு பாக்கர் - செளரப் செளத்ரி
மனு பாக்கர் - செளரப் செளத்ரி
அபினவ் பிந்த்ரா தலைமையிலான இந்த கமிட்டி தோல்விக்கான காரணங்களையும் பரிந்துரைகளையும் பட்டியல் போட்டது.

NRAI வழங்கிய பயிற்சியாளரை விடுத்து தனது கணவரையே பயிற்சியாளராக வைத்துக் கொண்ட ஹீனா சித்து, பயிற்சிக்கு ஒத்துழைக்க மறுத்த ககன் நரங் எனப் பல வீரர்/வீராங்கனைகளையும் வெளிப்படையாக தாக்கியிருந்தது அந்த கமிட்டியின் அறிக்கை. மேலும், முக்கியமாக 'எந்த மட்டத்திலும் தனி நபரின் கைகள் அதிகமாக ஓங்கக்கூடாது. NRAI யின் கொள்கைகளிலும் செயல்பாடுகளிலும் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது' எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த கமிட்டியின் அறிக்கைகளை முறையாக பின்பற்றியிருந்தால், எப்போதோ வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்குமான மோதலை தவிர்த்திருக்க முடியும். டோக்கியோவில் இவ்வளவு பெரிய சேதாரமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டிருக்கும். கண்துடைப்புக்கு அரசுகள் அமைக்கும் விசாரணை ஆணையங்களை போன்றே இந்த கமிட்டியையும் அணுகியது NRAI.

பதக்கம் வெல்லாவிட்டாலும், இந்தியாவின் பர்ஃபார்மென்ஸில் எதாவது முன்னேற்றம் இருந்திருந்தால் கூட மனம் திருப்தி அடைந்திருக்கும். ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. 2016-ல் அபினவ் பிந்த்ராவின் துப்பாக்கியில் eye sight உடைந்ததால் பதக்க வாய்ப்பை இழந்தார். இந்த முறை மனு பாக்கரின் துப்பாக்கி மொத்தமாக கோளாறாகி பதக்க வாய்ப்பை இழந்திருக்கிறார். கடந்த முறை இருந்த பயிற்சியாளர்கள் பிரச்னை இந்த முறையும் அப்படியே தொடர்ந்திருக்கிறது. 2016-க்கும் 2021-க்கும் இடையில் ஒரு புள்ளியளவு கூட முன்னேறவில்லை.

துப்பாக்கிசுடுதலில் மட்டுமில்லை பல விளையாட்டுகளிலும் இதே கோளாறுகளுடன்தான் இந்தியா இயங்கிக்கொண்டிருக்கிறது. டேபிள் டென்னிஸில் மனிகா பத்ராவின் தனிப்பட்ட பயிற்சியாளரால் கொரோனா கட்டுப்பாடுகளால் அரங்கிற்கு வர முடியாத நிலையில், உதவிக்கு வந்த இந்திய பயிற்சியாளரை அவர் தவிர்த்திருந்தார். இது பெரிய சர்ச்சையாகியுள்ளது. மனிகா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகம் மூவரும் தனிப்பட்ட ஈகோக்களையும் அரசியலையும் தவிர்த்து, ஒரு புள்ளியில் ஒரே இலக்கை நோக்கி பயணித்தால் மட்டுமே இந்தியாவின் ஒலிம்பிக் லட்சியம் சாத்தியப்படும். அப்படி செய்யும் வரை ஏக்கத்தோடு மற்ற நாடுகளை அண்ணாந்து பார்த்துக் கொண்டேதான் இருக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு