Published:Updated:

பிரவீன் ஜாதவ் - ஊட்டச்சத்து இல்லாமல் தடுமாறியவர், இன்று ஒலிம்பியன்!

Pravin Jadhav
Pravin Jadhav

ஒலிம்பிக் செல்லும் இந்திய வில்வித்தை அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக உருவெடுத்திருக்கிறார் பிரவீன் ஜாதவ். தனது பதினாறாவது வயது வரை ஓட்டப்பந்தையத்தையே தனது மூச்சாக எண்ணி சாதிக்க போராடியவர் பிரவீன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆனால், ஒருகட்டத்தில் கால்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு கைகளில் வில்லையும் அம்பையும் ஏந்திவிட்டார். இப்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் ரீகர்வ் ஆண்கள் அணிப் பிரிவில் இந்தியாவிற்குப் பங்கேற்கப்போகிறார் பிரவீன்.

2016-ம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய கோப்பையின் ஸ்டேஜ்-1 பிரிவில் இந்தியாவிற்காக முதன்முதலில் போட்டியிட்டார் பிரவீன். அதில் ஆண்கள் ரீகர்வ் அணியில் வெண்கலமும் வென்றார். 2019-ம் ஆண்டில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ஆண்கள் அணியிலும் இடம்பெற்றிருந்தார் அவர். 2005-ம் ஆண்டிற்கு பிறகு இந்தத் தொடரில்தான் இந்திய ஆண்கள் அணி முதன்முறையாக இறுதிபோட்டி வரை முன்னேறியிருந்தது. அதன்மூலம், அடானு தாஸ், தருன்தீப் ராய் மற்றும் பிரவின் அடங்கிய இந்த அணி டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான நுழைவுச்சீட்டையும் பெற்றது.

Pravin Jadhav
Pravin Jadhav

1996 ஜூலை 6, மகாராஷ்டிராவில் சத்தாரா மாவட்டத்தின் சரடே கிராமத்தில் பிறந்தவர் பிரவீன் ஜாதவ். பஞ்சம் தலைவிரித்தாடும் அக்கிராமத்தில் மிகச் சிறிய குடிசை வீட்டிலேயே வாழ்ந்துவந்தது அவரது குடும்பம். பெற்றோர் இருவரும் தினக்கூலிகள். வயலில் வேலைசெய்யும் தந்தைக்கு, பிரவீன் தன் பதின்பருவ நாட்களில் உடன் நின்று உதவி செய்ததுமுண்டு. மிகச் சிறிய வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் காட்டிய பிரவீன் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டார். ஆனால் ஊட்டசத்து குறைபாடு காரணமாக தனது முழு திறனை வெளிப்படுத்த முடியாமல் தவித்தார். தனது 10ஆவது வயதில் வெறும் 22 கிலோ எடையுடன் மட்டுமே இருந்த அவரால் நினைத்த அளவிற்கு வெற்றிகள் பெற முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனது பள்ளி படிப்பு நின்று விடாமல் இருக்கவும், தன் குடும்பத்தின் வறுமை ஒழிந்திடவும் விளையாட்டு ஒன்றே சிறந்த வழி என்று பிரவீனை தொடக்கத்திலிருந்து ஊக்கப்படுத்தியவர் அவரின் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் விகாஸ் புஜ்பால். பிரவீனின் ஊட்டசத்தை மேம்படுத்த தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்தார் அவர். மேலும் தனது மாணவனை அம்மாநில அரசின் க்ரிடா ப்ரபோதினி என்னும் விளையாட்டு பள்ளியில் சேர்த்துவிட முழு முயற்சிகளை மேற்கொண்டார். பிரவீன் ஓட்டப்பந்தயத்தில் இருந்து வில்வித்தையில் கவனம் செலுத்தத் தொடங்கியபோது 800 மீட்டர் தூரத்தை 3 நிமிடம் 40 வினாடிக்குள் கடக்கும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்திருந்தார். ஆனால் வில்வித்தை பயிற்சியின் போதும் அதிக எடையுள்ள வில்லை தூக்கி சுமப்பதற்கு அவரின் உடல் எளிதாக கைகொடுக்கவில்லை. அதனாலேயே அவரின் ஆட்டம் பாதித்து பயிற்சிகூடத்தில் இருந்து வெளியேற்றவும்பட்டார்.

Pravin Jadhav
Pravin Jadhav

இம்முறையும் உதவிக்கு வந்தவர் பள்ளி ஆசிரியர் விகாஸ். வெகுவாக முயற்சி செய்து அதே பயிற்சிக்கூடத்தில் பிரவின் சேர்ந்திட மற்றுமொரு வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுத்தார் அவர். பிரவீன் தன்னை நிரூபிக்கக் கடைசி வாய்பாய் ஐந்து ஷாட்டுகளை அப்பயிற்சி நிர்வாகம் வழங்கியபோது அதில் 45க்கும் மேல் ஸ்கோர் செய்து அசத்தினார் பிரவீன். அதன்பிறகு தொடர்ந்து முன்னேற்றம் கண்டவர், தனது வெற்றிகளின் மூலம் இந்திய ராணுவத்தில் 2017-ம் ஆண்டு பணியமர்த்தப்பட்டார். 2019-ம் ஆண்டில் ஹவல்தாராக பணி உயர்வும் பெற்றார்.

தனது ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சிகளை சென்ற வருடம் புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு பயிற்சிக்கூடத்தில் தொடங்கினார் பிரவீன். இடையே கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு அமலுக்கு வரவே வீட்டுக்கு செல்லாமல் அங்கேயே தங்கிவிட்டார். 2018ஆம் ஆண்டு தீபாவளிக்கு பிறகு அதாவது 30 மாதங்களுக்கு பிறகு இவ்வருடம் மார்ச் மாதமே தன் குடும்பத்தை மீண்டும் சந்தித்தார் பிரவீன். எல்லாம் அந்த ஒலிம்பிக் பதக்கத்துக்காக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு