Published:Updated:

தீபா கர்மாகர் தவறவிட்டதை பிரனதி கைப்பற்றுவாரா...டோக்கியோ ஜிம்னாஸ்டிக்கில் இந்தியாவின் ஒரே நம்பிக்கை!

பிரனதி நாயக்
பிரனதி நாயக் ( DD )

ஜிம்னாஸ்டிக்கில் தீபா கர்மாகருக்கு பிறகு இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்க போகும் இரண்டாவது வீராங்கனை இவரே. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தீபா கர்மாகருக்கு பிறகு ஜிம்னாஸ்டிக் போட்டியில் ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் இரண்டாவது வீராங்கனை எனும் பெருமையை பெற்றுள்ளார் பிரனதி நாயக். எளிமையான குடும்ப பிண்ணனியை கொண்ட இவர் இந்த சாதனையை எப்படி சாத்தியப்படுத்தினார்?

26 வயதாகும் பிரனதி நாயக் மேற்குவங்கத்தில் ஜார்கம் எனும் ஊரில் பிறந்தவர். சாதாரண எளிய குடும்ப பின்னணியைக் கொண்டவரே இவர். இவருடைய தந்தை தனியார் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பள்ளி பருவத்திலேயே பிரனதிக்கு ஜிம்னாஸ்டிஸ் மீது ஆர்வம் ஏற்பட, ஏழ்மையையும் பொருட்படுத்தாமல் அவருடைய பெற்றோர்கள் மிகவும் உறுதுணையாக இருந்திருக்கின்றனர். சில பயிற்சி மையங்களில் பிரனதி மிகவும் ஒல்லியாக இருப்பதால் ஜிம்னாஸ்டிக்கிற்கு ஒத்துவரமாட்டார் என நிராகரிக்கப்பட்டிருக்கிறார்.

சில நேரங்களில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதும் நல்லதே. அது நாம் எதிர்பார்த்திடவே செய்யாத மிகப்பெரிய வாய்ப்புகளை பின்னாட்களில் ஏற்படுத்திக் கொடுக்கும். பிரனதிக்கும் அது நடந்தது. உள்ளூர் பயிற்சி மையங்களில் அவர் நிராகரிப்பட, ஜார்கமிலிருந்து 5 மணி நேர பயண தொலைவில் இருக்கும் பயிற்சி மையத்தில் அவருக்கான இடம் கிடைத்தது. கூடவே மனித நேயமிக்க ஒரு பெண் பயிற்சியாளரும் கிடைத்தார்.
மினாரா பேஹம் எனும் அந்த பயிற்சியாளரே பிரனதிக்கான மொத்த செலவுகளையும் ஏற்று அவருக்கான பயிற்சியையும் வழங்கினார். மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்தவர், தேசிய போட்டிகளிலும் சிறப்பாக ஆடினார். இதனால் இந்திய இரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வேலையும் கிடைத்தது. இரயில்வேயில் வேலை செய்து கொண்டே ஜிம்னாஸ்டிக்கிலும் கவனம் செலுத்தினார்.

2019 ஆண்டு நடைபெற்ற ஆசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். 2021 ஒலிம்பிக்கை மனதில் வைத்து தொடர் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த மே மாதம் சீனாவில் நடைபெறவிருந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக ரத்தாக, கடந்த தொடரின் முடிவுகளின் அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான டிக்கெட்டை பெற்றார் பிரனதி.

ஜிம்னாஸ்டிக்கில் தீபா கர்மாகருக்கு பிறகு இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்க போகும் இரண்டாவது வீராங்கனை இவரே.

பயிற்சியாளர் மினரா பேஹமுடன் பிரனதி
பயிற்சியாளர் மினரா பேஹமுடன் பிரனதி
SAIMedia

இந்நிலையில், திடீரென பிரனதியின் பயிற்சியாளரான மினரா பேஹமுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. 18 ஆண்டுகளுக்கு பிரனதிக்கு பயிற்சி அளித்து வந்த இந்திய விளையாட்டு ஆணையத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இருந்தாலும் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிரனதியுடன் செல்ல மினாரா அனுமதிக்கப்படுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது மினராவுக்கு பதில் வேறொரு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது கொஞ்சம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ரியோ ஒலிம்பிக்கின் ஜிம்னாஸ்டிக் போட்டியில் நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தார் தீபா கர்மாகர். சர்ச்சைகளையும் இடர்பாடுகளையும் தாண்டி, கடந்த முறை தீபா கர்மாகர் தவறவிட்ட பதக்கத்தை பிரனதி இந்த முறை வென்று கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

பிரனதி நாயக் பங்கேற்கும் ஜிம்னாஸ்ட்டிக் போட்டிகள் நாளை(25-07-2021) காலை 6.30க்கு நடைபெற இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு