Published:Updated:

`Definitely Gold' - பாரலிம்பிக்கில் சொல்லியடித்த தங்க மகன் பிரமோத் பகத்!

பிரமோத் பகத் ( Twitter/PramodBhagat )

டோக்கியோ பாராலிம்பிக்கில்தான் பேட்மிண்டன் போட்டி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலேயே இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை வென்றெடுத்து அனைவரையும் பெருமிதப்படுத்தியுள்ளார் பிரமோத் பகத்.

`Definitely Gold' - பாரலிம்பிக்கில் சொல்லியடித்த தங்க மகன் பிரமோத் பகத்!

டோக்கியோ பாராலிம்பிக்கில்தான் பேட்மிண்டன் போட்டி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலேயே இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை வென்றெடுத்து அனைவரையும் பெருமிதப்படுத்தியுள்ளார் பிரமோத் பகத்.

Published:Updated:
பிரமோத் பகத் ( Twitter/PramodBhagat )

பாரா ஒலிம்பிக்ஸில் எந்தெந்த வீரர்கள் பதக்கம் வெல்வார்கள் என வெளியாகிக் கொண்டிருந்த கணிப்புகள் அத்தனையிலும் பிரமோத் பகத் எனும் பெயர் தவறாமல் இடம்பிடித்திருந்தது. பாரா ஒலிம்பிக்ஸில் முதல் முறையாக அறிமுகமான பேட்மிண்டன் போட்டியில் SL 3 பிரிவில் பிரமோத் களமிறங்கியிருந்தார்.

டோக்கியோ பாரா ஒலிம்பிஸில் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் எனும் கேள்விக்கு 'Definitely Gold' என பதிலளித்திருந்தார் பிரமோத். தோனியின் 'Definitely Not' ஐ போன்றே பிரமோத்தின் 'Definitely Gold' சூளுரையும் இப்போது இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.

33 வயதாகும் பிரமோத் ஒடிசாவில் பிறந்தவர். சிறு வயதிலேயே போலியோவால் இடது காலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரமோத்தின் பெற்றோர்கள் அதிர்ந்து போயினர். சமூக புறக்கணிப்புகளுக்கு தங்களுடைய மகன் இரையாகிவிட கூடாதென கவலையுற்றனர். ஆனால், பிரமோத்துக்கு அந்த போலியோ பாதிப்பெல்லாம் பெரிய விஷயமாகவே படவில்லை. சிறுவர்களுக்கே உரிய இயல்பான சுட்டி தனங்களோடு இயல்பான குழந்தையாகவே வளர்ந்தார். வாழ்வை நேர்மறையாக அணுகும் பக்குவம் அவரிடம் இயற்கையிலேயே தென்பட்டது. எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் உள்ளார்ந்த ஆர்வத்தோடு தீவிரமாக முயற்சிக்கும் பக்குவமும் இயல்பிலேயே வாய்க்கப் பெற்றிருக்கிறார். சாதாரண இந்திய சிறுவர்களை போல விளையாட்டு என யோசித்தவுடனேயே பிரமோத் கையில் எடுத்தது கிரிக்கெட் பேட்டைதான். ஆனால், பிரமோத்தின் அதீத ஆர்வத்திற்கு கிரிக்கெட்டால் ரொம்ப காலம் தீனி போட முடியவில்லை. கிரிக்கெட்டில் இதற்கு மேல் பெரிதாக கற்றுக்கொள்ள விஷயம் இல்லை என்ற நிலையிலேயே பிரமோத்தின் கவனம் பேட்மிண்டன் பக்கம் திரும்பியது.

பிரமோத் பகத்
பிரமோத் பகத்
SAI Media/Twitter

முதலில் கொஞ்ச நாள்களுக்கு ஓரமாக அமர்ந்து சீனியர்கள் விளையாடுவதை வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறார். சீனியர்களின் ஆட்டமே அவரை பெரிதாக இருக்கிறது.

ஒவ்வொரு ஸ்மாஷிலும்... ஒவ்வொரு ட்ராப்பிலும்... சின்னச்சின்ன லெக் மூவ்மெண்ட்டிலும் கற்றுக்கொள்ள எக்கச்சக்க நுணுக்கமான விஷயங்கள் இருக்கிறதென்பதை புரிந்துக் கொள்கிறார்.

எந்த ஒரு விஷயத்தையும் தீவிரத்தன்மையோடு ஆர்வமாகக் கற்றுக்கொள்ள துடிக்கும் பிரமோத்துக்கு ஏற்ற விளையாட்டாக பேட்மிண்டன் இருந்தது. கிரிக்கெட் பேட்டை விடுத்து பிரமோத்தின் கைகள் பேட்மிண்டன் ரேக்கட்டை ஏந்தின. கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஓடிவிட்டன இன்னமும் பேட்மிண்டன் மீதான ஈர்ப்பும் ரேக்கட்டின் மீதான பற்றுதலும் அவருக்குக் குறையவே இல்லை.

முதலில் முழு உடற்தகுதி உடைய நபர்களுடன் இணைந்தே ஆடியிருக்கிறார். மாவட்ட அளவிலான போட்டிகளில் ஜொலிக்க தொடங்கிய பிறகே அடுத்தக் கட்டத்திற்குச் செல்வதற்காக மாற்றுத்திறனாளிகள் பிரிவுக்கு மாறினார். இதன்பிறகு அவர் தொட்டதெல்லாமே ஹிட்தான். 2009 ஆசிய பாரா போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டு பதக்கங்களோடு வெற்றிக்கணக்கைத் தொடங்கினார். இந்த 10 ஆண்டுகளில் மட்டும் தேசிய, சர்வதேச போட்டிகளில் நூற்றுக்கணக்கான பதக்கங்களை குவித்திருந்தார். மூன்று உலக சாம்பியன் டைட்டில்கள். 2018 ஆசிய பாரா போட்டிகளில் தங்கம் எனக் கடந்த பத்து ஆண்டுகளாக ரொம்பவே சீராக பெர்ஃபார்ம் செய்து வருகிறார்.

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸில் பேட்மிண்டன் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே ஒலிம்பிக் பதக்கத்தை இலக்காக வைத்து பயணித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் என்கிற வகையில் கடுமையாக பயிற்சி செய்திருந்தார். சமீபத்தில் பாரா ஒலிம்பிக்ஸிற்கு முன்பாக நடைபெற்று முடிந்திருக்கும் துபாய் பாரா பேட்மிண்டன் தொடரில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார்.

பாரா ஒலிம்பிக்ஸில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் என இரண்டு பிரிவுகளில் களமிறங்கியிருந்தார். தனிநபர் பிரிவில் இறுதிப்போட்டி வரை வந்திருந்தவர், இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கத்திற்காக ஆடவிருக்கிறார்.

அத்தனை முன்னேற்பாடுகளும் வெற்றிகரமாக முடிந்து ஒரு ராக்கெட் விண்ணில் பாய்வதற்கு கடைசி மணித்துளிகளில் கூர்மையாகக் காத்திருப்பதை போலவே பிரமோத் காத்திருந்தார். அவருடைய இலக்கு தங்கமாக மட்டுமே இருந்தது. அவர் குறிவைத்ததை போன்றே கணகச்சிதமாக இன்று தங்கம் வென்று தன்னுடைய இலக்கை அடைந்திருக்கிறார். பிரிட்டன் வீரரான டேனியல் பெத்தேலுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 2-0 என நேர் செட் கணக்கில் வென்றிருக்கிறார். முதல் செட்டை ரொம்பவே எளிமையாக 21-14 என வென்றிருந்தார். ஆனால், இரண்டாவது செட் அவ்வளவு எளிமையாக அமைந்துவிடவில்லை. பெத்தேல் கடும் சவாலளித்தார்.

பிரமோத் பகத்
பிரமோத் பகத்
Tokyo2020

ஒரு கட்டத்தில் 4-12 என பிரமோத் ரொம்பவே பின் தங்கியிருந்தார். போட்டி எப்படியும் மூன்றாவது செட்டுக்கு செல்லும் என அனைவரும் ஒரு முன் முடிவுக்கு வந்துவிட்டனர். ஆனால், பிரமோத் சோர்ந்துவிடவில்லை. மீண்டெழுந்தார். வலுவான ஸ்மாஷ்கள் மூலமும் சின்னச்சின்ன டெசீவ்கள் மூலமும் பெத்தேலே திணறடித்து முன்னேற தொடங்கினார். 4-12 என்ற நிலையிலிருந்து 15-15 என ஏறி வந்தவர் பெத்தேலே தாண்டி வேகமாக முன்னேறி கேம் பாயிண்டை எடுத்தார். தங்கத்தையும் வென்றார். 1960 முதல் 2016 வரை பாராலிம்பிக்ஸில் இந்தியா மொத்தமே 4 தங்கப்பதக்கங்களைத்தான் வென்றிருந்தது. ஆனால், பிரமோத்தின் வெற்றி மூலம் டோக்கியோ பாராலிம்பிக்ஸில் மட்டுமே இந்தியா நான்கு தங்க பதக்கங்களை வென்றுள்ளது.

டோக்கியோ பாராலிம்பிக்கில்தான் பேட்மிண்டன் போட்டி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலேயே இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை வென்றெடுத்து அனைவரையும் பெருமிதப்படுத்தியுள்ளார் பிரமோத் பகத்.