Published:Updated:

97 ஆண்டு கால காத்திருப்பு... ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற பிலிப்பைன்ஸின் கதை!

Hidilyn Diaz, Philippines
Hidilyn Diaz, Philippines

ஹிடிலின் டயஸுடன் போட்டியிட்ட சீனாவைச் சேர்ந்த லியாவோ கியுயுன்தான் தங்கப் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம் 2019-ல் IWF உலகக்கோப்பை, ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் உலக சாம்பியன்ஷிப் என மூன்றிலும் தங்கப்பதக்கம் வென்றிருந்தார் லியாவோ.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிலிப்பைன்ஸ் (Philippines) நாட்டிற்கும் இந்த ஆண்டு பொன்னான ஆண்டு. ஏனெனில் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனது முதல் தங்கத்தைப் பதிவு செய்திருக்கிறது பிலிப்பைன்ஸ். 1924-ல் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது பிலிப்பைன்ஸ். கடந்த ரியோ ஒலிம்பிக் வரை 3 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் பத்துப் பதக்கங்களை வென்றிருந்தது.

ஒலிம்பிக்கில் விளையாடத் தொடங்கிக் கிட்டத்தட்ட 97- வருடங்கள் கழித்து தங்கள் முதல் தங்கத்தை வென்றிருக்கிறது. பளுதூக்குதல் போட்டியில், 30 வயது ஹிடிலின் டயஸ் (Hidilyn Diaz) தான் பிலிப்பைன்ஸூக்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்திருக்கிறார். பெண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் மொத்தமாக 224 கிலோ எடையைத் தூக்கி இந்தத் தங்கப் பதக்கத்தை வென்ற டியாஸ், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்.

ஹிடிலின் டியஸ் ஒலிம்பிக்ஸ்
ஹிடிலின் டியஸ் ஒலிம்பிக்ஸ்

2000-ம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்கில் இருந்தே பதக்கப்பட்டியலில் இடம்பெறாமல் இருந்த பிலிப்பைன்ஸை கடந்த முறை நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்று பதக்கப்பட்டியலில் இடம்பெற வைத்தார் டயஸ். அதே உத்வேகத்துடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் தனது நாட்டிற்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.

டியாஸ் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவுடன்தான் ஒலிம்பிக் அரங்கத்திற்குள் நுழைந்திருக்கிறார். ஆனால் தங்கம் தான் இலக்கு என கனவு காணவில்லை. ஏனெனில், டியாஸுடன் போட்டியிட்ட சீனாவைச் சேர்ந்த லியாவோ கியுயுன் (Liao Qiuyun) தான் தங்கப் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம் 2019-ல் IWF உலகக்கோப்பை, ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் உலக சாம்பியன்ஷிப் என மூன்றிலும் தங்கப்பதக்கம் வென்றிருந்தார் லியாவோ. அது மட்டுமல்லாமல் க்ளீன் அண்ட் ஜெர்க் சுற்றில் அதிகபட்சமாக 129 கிலோ எடையையும், ஒட்டுமொத்தமாக 227 கிலோ எடையையும் தூக்கிய ரெக்கார்டும் லியாவோவிடம்தான் இருந்தது.

முதல் ஒலிம்பிக் தங்கம்... வெறும் 63,000 பேர் மட்டுமே வசிக்கும் நாட்டில் இருந்து மாபெரும் சாதனை!
97 ஆண்டு கால காத்திருப்பு... ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற பிலிப்பைன்ஸின் கதை!

ஆனால் மறுபுறம் டியஸோ பயிற்சியின் போது கூட அதிகபட்சமாக 125 கிலோ வரை மட்டுமே தூக்கியிருந்தார். போட்டியின் போது ஸ்நாட்ச் (Snatch) சுற்றில் இருவருமே அதிகபட்சமாக 97 கிலோ எடையைத் தூக்கியிருந்தனர். ஸ்நாட்ச் சுற்றின் 99 கிலோ எடையைத் தூக்காமல் மூன்றாவது வாய்ப்பை நழுவவிட்டிருப்பார் டயஸ். அடுத்ததாக வந்த க்ளீன் அண்ட் ஜெர்க் (Clean and Jerk) சுற்றின் முதல் இரண்டு வாய்ப்பிலும் லியாவோவைவிட ஒரு கிலோ அதிகமாகத் தூக்கியிருப்பார் டயஸ். கடைசி வாய்ப்பில் லியாவோ 126 கிலோ எடையைத் தூக்க, பயிற்சியின் போது 125 கிலோ வரை மட்டுமே தூக்கிய டயஸ், தனது கடைசி வாய்ப்பில் அபாரமாக 127 கிலோ எடையைத் தூக்கி பதக்கத்தை வென்றார். "என்னால் இதை நம்பவே முடியவில்லை... பதக்கம் என கைகளில் இப்போது இருக்கிறது" எனத்தான் வெற்றி பெற்றதை நம்ப முடியாமல் தெரிவித்திருக்கிறார்.

பிலிப்பைன்ஸூக்கும், டயஸூக்கும் தங்கமான வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு