Published:Updated:

ஒலிம்பிக் ஹீரோக்கள்: ஜெஸ்ஸி ஓவன்ஸின் கால்கள் ஓடியது அவருக்காக மட்டுமல்ல!

ஜெஸ்ஸி ஓவன்ஸ்
ஜெஸ்ஸி ஓவன்ஸ்

அமெரிக்காவிலிருந்து போன ஆஃப்ரோ அமெரிக்கரான ஜெஸ்ஸி ஓவன்ஸ், ஹிட்லரின் கண்ணெதிரே பல வெள்ளை வீரர்களைத் தோற்கடித்து, அடுத்தடுத்து நான்கு தங்கப் பதக்கங்களை ஜெயித்து, ஹிட்லரை முகம் சிவக்க வைத்தார்!

பணம், செல்வாக்கு, அரசியல் சிபாரிசு எல்லாம் கொடுத்து வாங்க முடியாத பொருள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால், தமிழ் சினிமா ஹீரோக்கள் 'அம்மாவின் அன்பு' என்று டயலாக் விடுவார்கள். ஆனால், அதைவிட மேலாக விளையாட்டு வீரர்கள் கருதுகிற விஷயம் 'ஒலிம்பிக்கில் பதக்கம்.'

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், வரும் ஜூலை 23-ம் தேதி டோக்கியோ நகரில் நடக்கப்போகிறது. ஒலிம்பிக்ஸ் மைதானம் கிட்டத்தட்ட ஒரு போர்க்களம்... திடீர் ஹீரோக்கள் நிறைய பேர் உருவெடுப்பார்கள். பெரிய சாம்பியன்கள் நொறுங்கி மண்ணில் விழுவார்கள். இப்படிப்பட்ட ஹீரோக்கள் சிலரை அறிமுகப்படுத்தும் தொடர் இது...

ஒலிம்பிக்கில் ஆக்ரோஷ மோதல் நடப்பது அத்லெடிக்ஸ் எனப்படும் தடகளப் போட்டிகளில்தான். ஒலிம்பிக் வரலாற்றில் இந்தப் பிரிவில் அழிக்க முடியாத தடம் பதித்து விட்டுப் போனவர், அமெரிக்காவின் ஜெஸ்ஸி ஓவன்ஸ். இரண்டாம் உலகப் போரில் உலகமே ஹிட்லரை எதிர்த்தது என்றால், அதற்கு பத்து வருடங்களுக்கு முன்பு தனியாளாக அவரை ஜெயித்தவர் ஜெஸ்ஸி.

ஜெஸ்ஸி ஓவன்ஸ்
ஜெஸ்ஸி ஓவன்ஸ்

அது நடந்தது 1936-ம் ஆண்டு. 'பெர்லின்' ஒலிம்பிக்ஸ்! ஹிட்லர் தனது 'நாஜிக்களின் மேன்மை' தியரியை உலகம் முழுக்கப் பரப்பிக்கொண்டிருந்த நேரம்... வாகாக அமைந்தது ஒலிம்பிக்ஸ். “வெள்ளைத் தோலும், நீலக் கண்களும் கொண்டவர்கள் மேலானவர்கள். இரண்டாம்தரக் குடிமக்களான கறுப்பர்களால் வெள்ளையர்களுக்கு ஈடுகொடுக்க முடியாது” என்று கர்ஜித்தபடி பெர்லின் ஒலிம்பிக்ஸ் ஏற்பாடுகளைச் செய்தார் ஹிட்லர். அமெரிக்காவிலிருந்து போன ஆஃப்ரோ அமெரிக்கரான ஜெஸ்ஸி ஓவன்ஸ், ஹிட்லரின் கண்ணெதிரே பல வெள்ளை வீரர்களைத் தோற்கடித்து, அடுத்தடுத்து நான்கு தங்கப் பதக்கங்களை ஜெயித்து, ஹிட்லரை முகம் சிவக்க வைத்தார்!

இருநூறு மீட்டர் ஓட்டத்தில் புதிய உலக சாதனை.. நீளம் தாண்டுதலில் உலக சாதனை... நூறு மீட்டர் ஓட்டத்தில் பழைய சாதனையை ஈடுசெய்து தங்கம்.... 400 மீட்டர் ரிலே ரேஸுக்கு குழுவாக ஒரு தங்கம்.. என நான்கும் அள்ளியபோது, பெர்லின் நகரே அவரைக் கொண்டாடியது. நிற வேற்றுமைகளைத் தாண்டி ஜெர்மனி மக்கள் வணங்கிய ஒரே நபராக இருந்தார் ஜெஸ்ஸி!

ஜெஸ்ஸியின் தனிப்பட்ட வாழ்க்கை சோகம் நிறைந்தது. அடிமை வம்சத்தின் வாரிசு அவர். அவரது தாத்தா அமெரிக்க வெள்ளையர்களிடம் அடிமையாக இருந்தவர். நாகரிக வளர்ச்சியின் காரணமாக அடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட அப்பா ஹென்றியும், அம்மா எம்மா அலெக்ஸாண்டிராவும் பண்ணைக் கூலிகள். ஜெஸ்ஸி அவர்களுக்கு ஏழாவது பிள்ளை. மிச்சிகனில் நடந்த தேசிய அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெஸ்ஸி முதல் தடவையாகப் பங்கேற்றார். கொஞ்சம்கூட அவகாசம் தராமல் அடுத்தடுத்து போட்டிகள். ஓட்டப்பந்தயங்கள் மற்றும் நீளம் தாண்டுதலில் நாற்பத்தைந்து நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து அவர் உலக சாதனைகளைத் தகர்த்து, ஒவ்வொரு பிரிவிலும் புதிய சாதனை படைக்க... அமெரிக்காவே நிமிர்ந்து உட்கார்ந்தது. இருபத்திரண்டு வயதில் தேசிய சாம்பியன்!

ஜெஸ்ஸி ஓவன்ஸ்
ஜெஸ்ஸி ஓவன்ஸ்
அடுத்த ஆண்டே ஒலிம்பிக்ஸில் ஹிட்லர் முன்னிலையில் சாதனை. முதல் முறையாக ஒலிம்பிக்ஸில் நான்கு தங்கம் வென்றவர் ஜெஸ்ஸிதான். (ஜெஸ்ஸி புகழேணியில் இருந்த காலத்தில், இரண்டாம் உலகப்போர் காரணமாக இரண்டு ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாகிவிட்டன. இல்லையென்றால், அவரது தங்க வேட்டை எங்கேயோ போய் நின்றிருக்கும்).

பதக்கத்தோடு திரும்பிய ஜெஸ்ஸிக்கு நியூயார்க்கில் உற்சாக வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் நிறவெறி அங்கே முழுமையாக ஒழியாத காலம் அது. அமெரிக்காவை பெருமைப்படுத்துபவர்களுக்கு, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி விருந்து கொடுப்பது அப்போது வழக்கம். ஆனால், வெள்ளையரான ஜனாதிபதி ரூஸ்வெல்ட் விருந்து தர மறுத்தது மட்டுமில்லை... குறைந்தபட்சம் ஒரு வாழ்த்து தந்திகூட அனுப்பவில்லை!

இந்தப் புறக்கணிப்பு அவரை வேதனைப்பட வைத்தது, வெறியூட்டியது! வெறும் பதக்கமும் புகழும் மட்டுமே போதாது என்பதை உணர்ந்தார். அவரது குறி பணம்! முழுநேர ஓட்டப்பந்தய வீரராக மாறினார். அந்தச் சமயத்தில் விளையாட்டு வீரர்களுக்கு விளம்பர வருமானம் ரொம்பக் குறைவு. அதிலும் ஆஃப்ரோ அமெரிக்கர்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு சுத்தமாக இல்லை.

வேறுவழி? வித்தியாசமான பந்தயங்களில் ஓட ஆரம்பித்தார் ஜெஸ்ஸி. 'குதிரையும் ஜெஸ்ஸியும் ஓடினால் ஜெயிப்பது யார்?' என்று போட்டி. ஜெயித்து பரிசோடு வருவார் ஜெஸ்ஸி. இப்படி நாய்களோடும் குதிரைகளோடும் பலமுறை ஓடியிருக்கிறார் ஜெஸ்ஸி. 'ஒலிம்பிக்கில் நான்கு தங்கப் பதக்கங்கள் வாங்கிவிட்டு, இப்படி விலங்குகளுடன் ஓடுவது ஒலிம்பிக்ஸையே கேவலப்படுத்தும் செயல்' என்று பலர் அவரைக் கடுமையாக விமர்சித்தனர்.

ஜனாதிபதி ஜெரால்டு ஃபோர்டுடன் ஜெஸ்ஸி ஓவன்ஸ் - மெடல் ஆஃப் ஃப்ரீடம் பெற்றபோது...
ஜனாதிபதி ஜெரால்டு ஃபோர்டுடன் ஜெஸ்ஸி ஓவன்ஸ் - மெடல் ஆஃப் ஃப்ரீடம் பெற்றபோது...
David Hume Kennerly | The U.S. National Archives

ஜெஸ்ஸி சிரித்துக்கொண்டே இப்படிச் சொன்னார். "வாஸ்தவம்தான். என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பசித்தால் நான் தங்கப் பதக்கத்தையா சாப்பிட முடியும்? சாப்பாடு வேண்டுமய்யா... சாப்பாடு... எனக்காக மட்டுமல்ல... எனக்கும் என்னைப் போன்ற அப்பாவி கறுப்பினத்தவர்களுக்கும் சேர்த்து நான் சம்பாதிக்க வேண்டும். பணம்தான் அவர்களுக்குப் பாதுகாப்பு!" என்று பதில் சொன்னார் ஜெஸ்ஸி.

அப்படிச் சேர்த்த பணத்தை வைத்து ஜெஸ்ஸியும் அவர் மனைவி ரூத்தும் ஓர் அறக்கட்டளை ஆரம்பித்தனர். ஏழை ஆஃப்ரோ அமெரிக்கச் சிறுவர்களுக்குப் படிக்கவும், உடற்பயிற்சிக்கும் செலவழித்து அவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக்குவதுதான் அந்த அறக்கட்டளையின் பணி. எத்தனையோ வீரர்களை அமெரிக்காவுக்கு உருவாக்கிக் கொடுத்தது ஜெஸ்ஸிதான்! அவர் புகழின் உச்சியில் இருந்தபோது அவரை கௌரவிக்காத அமெரிக்கா மிக தாமதமாகத்தான் தன் தவற்றை திருத்திக் கொண்டது. சிறப்பு தபால் தலை வெளியிட்டார்கள். ஜெஸ்ஸி தங்கம் வென்று நாற்பது ஆண்டுகள் கழித்து, வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டார். அமெரிக்காவின் மிக உயரிய சிவிலியன் விருதான 'மெடல் ஆஃப் ஃப்ரீடம்' (Medal of Freedom) பெறுவதற்காக! மூன்று ஆண்டுகள் கழித்து 'வாழ்நாள் சாதனையாளர்' விருதும் கிடைத்தது.

பஜ்ரங் புனியா: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லப்போகும் மல்யுத்த மாவீரன்!
Jesse Owens Memorial Stadium
Jesse Owens Memorial Stadium
Dan Keck from Ohio, via Wikimedia Commons
நுரையீரல் புற்றுநோய் வந்து ஜெஸ்ஸி இறந்தபோது, ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் வெளியிட்ட இரங்கல் குறிப்பு இதோ...
"நிறவெறிக்கும், வறுமைக்கும், கொடுங்கோன்மைக்கும் எதிரான மனித இனத்தின் போரட்டத்துக்கு ஜெஸ்ஸிதான் சரியான அடையாளம்! ஜெஸ்ஸியின் சாதனைகள் பல அவர் வாழ்ந்த காலத்திலேயே முறியடிக்கப்பட்டுவிட்டன. ஆனாலும் அத்லெடிக் களத்தில் அவர்தான் பாஸ்! அவரைக் கடவுளாகக் கருதிக்கொண்டு இன்றைய தேதி வரையிலும் பல கறுப்பின இளைஞர்கள் தங்க வெறியோடு ஓட்டம் பழகுகிறார்கள்."
ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர்
அடுத்த கட்டுரைக்கு