Published:Updated:

ஒலிம்பிக் ஹீரோக்கள் - அபேப் பிகிலா: ஒட்டுமொத்த ஆப்பிரிக்க மக்களையும் பிகிலடிக்க வைத்த மாவீரன்!

மைதானத்தில் பேரமைதி. ரேடியோ வர்ணனையைத் தவிர, வேறெந்தச் சத்தமும் இல்லை. வாமியைத் தோற்கடித்து பிகிலா வெற்றிக் கோட்டைத் தொட்டபோது, ஒரு புதிய ஹீரோவின் வருகையை மக்கள் ஆரவாரத்துடன் ஏற்றுக் கொண்டார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒலிம்பிக்ஸ் பதக்க வேட்டையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் முன்னணி ஐரோப்பிய நாடுகள்தான் எப்போதுமே டாப் குதிரைகள். தங்கங்களை அள்ளும் இந்த நாடுகளே ஏங்கித் தவிக்கிற ஒரு போட்டி ஒலிம்பிக்ஸில் உண்டு. அது மாரத்தான் ஓட்டம்!

அபாரமான உடல்பலம், தன்னம்பிக்கை, கடினமான மன உறுதி எல்லாமும் இருந்தால்தான் இதில் ஜெயிக்கமுடியும். பஞ்சமும் வறுமையும் வாட்டி வதைக்கும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களே இதில் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டிவருவது வாழ்வின் விநோதங்களில் ஒன்று.

ஆரோக்கியமான, சுகாதாரமான உணவு கிடைக்காமல் 'குழந்தைகள் இறப்பில் முதலிடம்' என்ற கொடுமையான பிரபலத்தைப் பெற்றிருக்கும் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா தான், மாரத்தானின் மறக்கமுடியாத ஹீரோவை உருவாக்கியது. அவர், அபேப் பிகிலா (Abebe Bikila).
Abebe Bikila
Abebe Bikila

பிகிலா பிறந்த 1932 ஆகஸ்ட் 7-ம் தேதியில்தான் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்ஸில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. எத்தியோப்பியாவில் ஜாடோ என்ற குக்கிராமத்தில் ஆடு மேய்ப்பதும், பார்ட் டைமாகப் படிப்பதும்தான் அந்தப் பகுதி சிறுவர்களின் வழக்கம். பிகிலாவும் அதையே செய்தார்.

பெரியவனானதும் ராணுவ வீரனானார். ஒருநாள் தலைநகர் அடிஸ் அபாபா வந்தார். அங்கே ஒரு மைதானத்தில் பெரிய கும்பல். உள்ளே விளையாட்டு வீரர்கள் எல்லோரும் ஒரேமாதிரி அழகாக பனியன் போட்டிருந்தனர். பனியனில் 'எத்தியோப்பியா' என்று எழுதியிருந்தது. விசாரித்தார். "இவர்கள் எல்லோரும் உலகத்திலேயே மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள மெல்போர்ன் போகிறார்கள்" என்று பதில் கிடைத்தது.

அந்த வீரர்களின் அணிவகுப்பும் கலர் பனியன்களும் கம்பீரமும் பிகிலாவின் மனதில் ஆழமாகப் பதிந்தது. அப்போது அவருக்கு வயது 24.

ராணுவ முகாமுக்குத் திரும்பிவந்த பிகிலா, தான் பார்த்ததை சக வீரர்களிடம் சொன்னார். கூடுதலாக இன்னொன்றையும் சொன்னார்... "அடுத்த முறை நம் நாட்டில் இருந்து போகிற வீரர்கள் குழுவில் நானும் இருப்பேன்!”

சக ராணுவ வீரர்கள் கோரஸாகச் சிரித்து அவரைக் கேலி செய்தனர். "ஆளைப் பார்றா... உடம்புல இருக்கற எல்லா எலும்பும் வெளியே தெரியுது. போனாப் போகுதுன்னு ராணுவத்துல சேர்த்து வெச்சிருக்காங்க. விபரீத ஆசையெல்லாம் வேணாம். எங்கேயாவது மைதானத்துல மூச்சு வாங்கி சுருண்டு விழுந்து செத்துடப் போறே!" என்றார்கள்.

தன் கனவை நிரூபிக்க, சில மாதங்களிலேயே பிகிலாவுக்கு ஒரு வாய்ப்பு வந்தது. தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் தலைநகரில் நடந்தன. அப்போது எத்தியோப்பியாவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் வாமி பியோட்டு! நாட்டிலேயே அவரை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது.

மாரத்தான் போட்டி தொடங்கியது. வாமியோடு ஓடிய ஒப்புக்குச் சப்பாணி வீரர்களில் பிகிலாவும் ஒருவர். தலைநகருக்கு வெளியே ஓடத் துவங்கிய வீரர்கள் மைதானத்தில் வந்து முடிக்கவேண்டும். மைதானத்தில் பெரிய கூட்டமே 'வாமி எப்போது வருவார்?' எனப் பாதையைப் பார்த்தபடி காத்திருந்தது. ரேடியோவில் நேரடி வர்ணனை ஒலிபரப்பாக, திடீரென வர்ணனையாளர் குரலில் பரபரப்பு... "யாரோ பெயர் தெரியாத ஓர் இளைஞர் வாமியைத் தோற்கடித்து முன்னேறிக்கொண்டிருக்கிறார்..!"

அபேப் பிகிலா
அபேப் பிகிலா
Project Kei, CC BY-SA 4.0 via Wikimedia Commons
மைதானத்தில் பேரமைதி. ரேடியோ வர்ணனையைத் தவிர, வேறெந்தச் சத்தமும் இல்லை. வாமியைத் தோற்கடித்து பிகிலா வெற்றிக் கோட்டைத் தொட்டபோது, ஒரு புதிய ஹீரோவின் வருகையை மக்கள் ஆரவாரத்துடன் ஏற்றுக் கொண்டார்கள்.

அதே பரபரப்பு குறையாமல், தான் கனவு கண்டபடியே எத்தியோப்பிய பனியனை அணிந்து 1960-ல் இத்தாலியின் ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு மாரத்தான் போட்டியாளராகச் சென்றார் பிகிலா. அவரது நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் அது லட்சியப் பயணம். எத்தியோப்பியா பல ஆண்டுகள் இத்தாலியின் அடிமை தேசமாக இருந்தது. எத்தியோப்பியாவின் இயற்கை வளங்களைச் சுரண்டிய இத்தாலியர்கள், அங்கிருந்த கலைப் பொருள்களையும் அள்ளிச் சென்று விட்டனர்.

"நீ போவது வெறும் விளையாட்டுப் போட்டிக்காக இல்லை. நம்மை அடிமைப்படுத்திய இத்தாலியை நீ பழி தீர்க்கவேண்டும். உன் கால்கள் வெல்லவேண்டும்" என்று நண்பர்கள் வெறியூட்டி அனுப்பினர்.

அடானு தாஸ்: ஒலிம்பிக் பதக்கத்தைக் குறிவைத்துப் பாயும் அம்பு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாரத்தான் தொடங்கியது. எல்லா வீரர்களும் ஷூ அணிந்திருக்க, பிகிலா வெற்றுக்காலோடு நின்றார். இத்தாலி மண்ணை வெல்லும் வெறி! போட்டி அமைப்பாளர்கள் அவரிடம் வந்து, "ஷூ அணியாமல் ஓடி, வழியிலேயே காயம்பட்டு விழுந்து விடப்போகிறாய்" என்று கிண்டலாகச் சொல்ல, மற்ற நாட்டு வீரர்கள் சிரித்தனர். பிகிலா உறுதியாக நின்றார்.

இரண்டு மணி, பதினாறு நிமிடம், இரண்டு நொடிகளில் பிகிலா ஓடி ஜெயித்தபோது, அது புதிய சாதனை. அதோடு மட்டுமில்லை... ஒலிம்பிக்ஸின் 64 ஆண்டு வரலாற்றில் முதல் தங்கப்பதக்கம் வென்ற ஆப்பிரிக்க வீரர் அவர்தான். ஒரே நாளில் பிகிலா உலகப்புகழ் பெற்று விட... எத்தியோப்பியா தாண்டி ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவும் அவரைத் தங்கள் மண்ணின் மைந்தராகக் கொண்டாடியது.
அபேப் பிகிலா
அபேப் பிகிலா
Photograph: Jack de Nijs / AnefoDerivative work MagentaGreen, CC BY-SA 3.0 NL, via Wikimedia Commons

அடுத்த 1964-ல் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் அணியிலும் இடம் பெற்றார் பிகிலா. ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் அதுவரை மாரத்தான் தங்கம் வென்றவர் அடுத்த போட்டியில் மீண்டும் வென்றது இல்லை. ஒன்று, ரிட்டயராகி விடுவார்கள்... அல்லது தோற்று முடங்கி விடுவார்கள். பிகிலாவையும் இந்த விதி துரத்தியது. போட்டிகள் துவங்குவதற்கு நாற்பது நாள்களுக்கு முன்னால் அவருக்கு வயிற்றில் குடல்வால் பிரச்னை. 'ஆபரேஷன் கட்டாயம்' என்று சொல்லிவிட்டார்கள் டாக்டர்கள். ஒட்டுமொத்த நாடும் அழுதது. ஆபரேஷன் செய்துகொண்டு, அந்த தையலைக்கூடப் பிரிக்காமல் விமானம் ஏறினார் பிகிலா.

டோக்கியோ ஸ்டேடியப் படிகளில் வயிற்றைப் பிடித்தபடி அவர் நொண்டி நொண்டி நடந்ததை போட்டோ எடுத்துப் போட்ட பத்திரிகைகள், 'பிகிலா அவ்வளவுதான்' என்று தீர்ப்பு எழுதின.

போட்டி நாளில் பிகிலா புதிதாக அவதாரம் எடுத்தவர் மாதிரி வந்து நின்றார். வெறிகொண்ட ஓட்டம்... பழைய சாதனையை முறியடித்து, புதிய சாதனையுடன் தங்கம் வென்று, மாரத்தான் தங்கத்தை தக்கவைத்துக்கொண்ட முதல் வீரரானார் பிகிலா.
ஒலிம்பிக் ஹீரோக்கள்: ஜெஸ்ஸி ஓவன்ஸின் கால்கள் ஓடியது அவருக்காக மட்டுமல்ல!

அடுத்த போட்டியில் விதி அவரை மேலும் கொடூரமாகத் துரத்தியது. 1968 ஒலிம்பிக்ஸில் பதினைந்து கிலோமீட்டர் ஓடிய நிலையில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் ஒதுங்க நேர்ந்தது. ஒரே ஆறுதல்.... அவரது நாட்டைச் சேர்ந்த இன்னொரு வீரர்தான் தங்கம் வென்றார்.

அபேப் பிகிலா
அபேப் பிகிலா
Nijs, Jac. de / Anefo, CC0, via Wikimedia Commons

அபேப் பிகிலாசில மாதங்களில் பிகிலா சென்ற கார் விபத்தில் சிக்க, கழுத்து எலும்பு முறிந்து, ஏகப்பட்ட பாதிப்புக்கு ஆளாகி, இடுப்புக்குக் கீழே செயலிழந்து போக... தன் கால்களால் உலகையே வென்ற பிகிலா, சக்கர நாற்காலியில் வலம்வர வேண்டியதாயிற்று.

அத்தனை சோகத்திலும் அவருக்குள் வேட்கையோடு அலைந்த விளையாட்டு வீரன் அடங்கவில்லை. உட்கார்ந்தபடியே விளையாடும் போட்டிகளில் அவர் கவனம் திரும்பியது. வில் வித்தையைக் கற்றார். பனிச்சறுக்கு வண்டி ஓட்டக் கற்றுக்கொண்டார். நார்வேயில் நடைபெற்ற பனிச் சறுக்குப் போட்டியில் அவர் தங்கம் வென்றபோது, அவரது மன உறுதியை உலகமே வியந்து பார்த்தது.

கார் விபத்தின் பக்க விளைவாக மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, பிகிலா இறந்துப் போனபோது, அவருக்கு வயது வெறும் நாற்பத்தொன்றுதான்!

பிகிலா, மன உறுதியின் மறுபெயர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு