Published:Updated:

ஒலிம்பிக் ஹீரோக்கள் - பாவோ நுர்மி: 9 தங்கம், 3 வெள்ளி - பின்லாந்துக்கு முகவரி கொடுத்த `Flying Finn'!

பாவோ நுர்மி ( Bundesarchiv, Bild via Wikimedia Commons )

மற்றவர்கள் நடந்துவர, ஓட்டமாக ஓடுவார் பாவோ. குறிப்பிட்ட இலக்கை பாவோ அடைந்து கால் மணி நேரம் கழித்துதான் மற்றவர்கள் வந்து சேருவார்கள்.

ஒலிம்பிக் ஹீரோக்கள் - பாவோ நுர்மி: 9 தங்கம், 3 வெள்ளி - பின்லாந்துக்கு முகவரி கொடுத்த `Flying Finn'!

மற்றவர்கள் நடந்துவர, ஓட்டமாக ஓடுவார் பாவோ. குறிப்பிட்ட இலக்கை பாவோ அடைந்து கால் மணி நேரம் கழித்துதான் மற்றவர்கள் வந்து சேருவார்கள்.

Published:Updated:
பாவோ நுர்மி ( Bundesarchiv, Bild via Wikimedia Commons )

ஐரோப்பா கண்டத்தின் மேல்பக்கம் குதிரைத்தலை மாதிரி இருக்கும் ஏரியாவை ஸ்காண்டிநேவியா என்பார்கள். இங்கிருக்கும் நார்வே, ஸ்வீடன் ஆகியவை வசதியான நாடுகள். இன்னொரு குட்டி நாடான பின்லாந்து, அரசியல் ரீதியாகவோ, பொருளாதார அளவிலோ ரொம்ப பலசாலி கிடையாது. முதல் உலகப் போருக்குப் பிறகுதான் சுதந்திரமே கிடைத்தது.

அட்ரஸ் தொலைந்து கிடந்த இந்த நாட்டை, தனி ஒரு ஆளாகத் தூக்கி நிறுத்தி, உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் பாவோ நூர்மி.

'தடகளத்தின் ராஜா' என்று அழைக்கப்படும் அவர் ஒலிம்பிக்ஸில் அள்ளிக் குவித்தவை ஒன்பது தங்கம் மற்றும் மூன்று வெள்ளிப் பதக்கங்கள். ஒலிம்பிக்ஸ் சரித்திரத்திலேயே ஒன்பது தங்கங்கள் வென்ற நாலு பேரில் அவரும் ஒருவர். முறையான பயிற்சி பெறாமல், நல்ல பயிற்சியாளரும் இல்லாமல், தன் பலத்தை மட்டுமே நம்பி ஜெயித்தவர் பாவோ. இறந்து முப்பது வருடங்களாகியும் இன்றளவும் பின்லாந்து இளைஞர் களின் ரோல்மாடல் அவர்தான்.

பாவோ நுர்மி
பாவோ நுர்மி
Bundesarchiv, Bild via Wikimedia Commons
'Flying Finn' என்று அழைக்கப்பட்ட பாவோ, நிஜமாகவே மைதானத்தில் சூறாவளிக் காற்று போல பறந்தார். அவரால் பின்லாந்து பெருமை பெற்றதன் அடையாளமாக தலைநகர் ஹெல்சிங்கியில் அவருக்கு வெண்கலச் சிலை நிறுவி கௌரவித்துள்ளார்கள்.

பாவோவின் இளமை வாழ்க்கை துயரங்கள் நிறைந்தது. பின்லாந்தின் துர்கு நகரில் ஏழை தச்சுத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார். பிறந்த கொஞ்ச நாளில் அண்ணனின் மரணம், 13 வயதில் அப்பாவின் மரணம் என்று அடுத்தடுத்து சோதனைகள் தாக்க, அந்த வயதிலேயே பேக்கரி வேலைக்குப் போனார். கூடவே, ஓட்டப் பந்தயத்தின் மீது இருந்த ஆர்வம் காரணமாக, உள்ளூர் கிளப் ஒன்றில் சேர்ந்து ஓடுவதற்குப் பயிற்சி எடுத்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பணத்துக்காக சிரமப்பட்ட நேரத்தில் முதல் உலகப் போர் மூண்டுவிட, எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் போர் வீரர்களுக்குப் பஞ்சம் வந்துவிட்டது. ராணுவத்தில் சேர்ந்தால் வேலைக்கு வேலையும் ஆச்சு, பயிற்சி எடுக்கவும் வாய்ப்பு என்று கருதி உற்சாகமாகச் சேர்ந்தார் அவர்.

ஆரம்பத்திலேயே கடுமையான பயிற்சி... ஒரு கையில் கனமான துப்பாக்கியைத் தூக்கியபடி முதுகில் மணல் மூட்டை சுமந்து, அணிவகுப்பில் நடக்கவேண்டும். மற்றவர்கள் நடந்துவர, ஓட்டமாக ஓடுவார் பாவோ. குறிப்பிட்ட இலக்கை பாவோ அடைந்து கால் மணி நேரம் கழித்துதான் மற்றவர்கள் வந்து சேருவார்கள்.

இவரது திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஓர் உயர் அதிகாரி, பாவோவை ராணுவத்தில் உள்ள விளையாட்டு வீரர் பயிற்சிப் பிரிவில் சேர்த்தார். பாவோ அப்போது பயிற்சி எடுத்ததே ஒலிம்பிக்ஸைக் குறிவைத்துதான். 1,500 மீட்டர், 5,000 மீட்டர், 10,000 மீட்டர் என்று படிப்படியாகப் பயிற்சி.

Paavo Nurmi center, Finlandia University
Paavo Nurmi center, Finlandia University
Justusr76 at English Wikipedia, via Wikimedia Commons

1920-ம் ஆண்டு ஆன்ட்வெர்ப் ஒலிம்பிக்ஸுக்குப் போகும்போது பாவோ ஒரு புதுமுகம். 5,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அவருடன் ஓடிய ஜோஸப் கில்மோத் அப்போது பெரிய சாம்பியன். அவர் சுலபமாக ஓடி முதலிடம் பிடித்து விட, பாவோவுக்குக் கிடைத்தது வெள்ளிப் பதக்கம்தான்.

யாரோ அறிமுகமில்லாத வெளிநாட்டுப் பயிற்சியாளர் ஒருவர் அவரை அணுகி, “நீ நல்ல திறமைசாலி. ஆனால், போட்டியின் ஆரம்பத்திலேயே வேகமாக ஓடியதால் களைத்துவிட்டாய். இறுதியில் உன்னால் வேகம் காட்டமுடியவில்லை. ஆரம்பிப்பதில் வேகம் காட்டு. எல்லோரையும் பின்னுக்குத் தள்ளியதும் நிதானமாகிவிடு. அதன்பின் யாரும் உன்னைக் கடந்து விடாமல் பார்த்துக் கொண்டால் போதும். வெற்றிக் கோட்டைத் தொடும் இறுதி நொடிகளில் சூறாவளிபோல் பறந்து போ!” என்று அறிவுரை வழங்கினார். அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட பாவோ, மூன்று நாட்கள் கழித்து 10,000 மீட்டர் ஓட்டத்தில் அதே கில்மோத்தை தோற்கடித்துத் தங்கம் வென்றார்.

அடுத்த ஒலிம்பிக்ஸ் பாரீஸில். அதில் ஐந்து தங்கங்களை வென்று தான் ஒரு சகாப்தம் என்று நிரூபித்தார் பாவோ. இந்த ஒலிம்பிக்ஸ் முடிந்து சில மாதங்கள் கழித்து, பின்லாந்தில் ஒரு போட்டியில் 10,000 மீட்டர் தூரத்தை அசுரவேகத்தில் ஓடி ஒரு புதிய சாதனையைப் படைத்தார் பாவோ. இதை, அடுத்த பதின்மூன்று வருடங்களுக்கு யாராலும் முறிக்க முடியவில்லை. தவிர, ஒரே நேரத்தில் இருபத்தைந்து சாதனைகளைத் பெயரில் ரெக்கார்ட் செய்து வைத்திருந்த சாதனையாளர் பாவோ.

Paavo Nurmi
Paavo Nurmi
Jaan Künnap, via Wikimedia Commons

1928-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்களை அறுவடை செய்ததோடு அவரது பதக்க வேட்டை முடிவுக்கு வந்தது. அந்த ஒலிம்பிக்ஸில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றாலும், வெற்றிக் கோட்டைத் தொட்டதும் பாவோ மயங்கிச் சரிய, 'இவருக்குக்கூட களைப்பு வருமா' என அதிர்ச்சியோடு பார்த்தது உலகம்.

ஓட்டத்திலிருந்து விலகிய பிறகு கட்டட காண்ட்ராக்டராகி கோடி கோடியாகச் சம்பாதித்தாலும், மனைவி விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட, கடைசிவரை தனிமையிலேயே வாழ்ந்து இறந்து போனார் பாவோ.