Published:Updated:

நார்மன் பிரிட்சர்ட் முதல் சாக்ஷி மாலிக் வரை... ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற பதக்கங்கள் ஒரு பார்வை!

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை 28 பதக்கங்களை வென்றிருக்கிறது. அதில் இந்திய ஹாக்கி அணி மட்டும் 11 பதக்கங்களை வென்றிருக்கிறது. இதில் 8 தங்கப்பதக்கங்களும் அடக்கம். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தடைகளை தாண்டி தடதடக்கவிருக்கிறது டோக்கியோ ஒலிம்பிக்ஸ். விளையாட்டு என்பதை தாண்டி உலக அரங்கில் ஒரு நாட்டின் பெருமையாகவும் ஒலிம்பிக்ஸ் பார்க்கப்படுகிறது. வீரர்/வீராங்கனைகள் வெல்லும் ஒவ்வொரு பதக்கமும் தங்கள் நாட்டின் கௌரவத்தை மேலும் ஒரு படி உயர்த்துவதாகவே அனைத்து நாட்டு மக்களும் கருதுகின்றனர். இந்தியர்களுக்கும் அப்படியே.

இந்தியா எப்போது பதக்கத்தை வெல்லும், எத்தனை பதக்கங்களை வெல்லும் என்பதுதான் இந்தியர்கள் அத்தனை பேர் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும் கேள்வி. டோக்கியோவில் இந்தியா எத்தனை பதக்கங்களை வெல்லும் என்பதை ஆகஸ்ட் 8 வரை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால், ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் பதக்க வெற்றிகளை பற்றி ஒரு ஃப்ளாஷ்பேக் பார்க்க எந்த தடையும் இல்லை.

இதுவரையிலான ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பெர்ஃபாமென்ஸ் எப்படி இருந்திருக்கிறது?1896 ஏதேன்ஸில் நடைபெற்ற முதல் ஒலிம்பிக்ஸில் மொத்தம் 14 நாடுகள் மட்டுமே பங்கேற்றிருந்தது. இதில், இந்தியா பங்கேற்றிருக்கவில்லை. 1900-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியாவின் பங்கேற்பு இன்றளவும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.

நார்மன் பிரிட்சர்ட்
நார்மன் பிரிட்சர்ட்
Olympics
நார்மன் பிரிட்சர்ட் என்பவர் ஆங்கிலேய தம்பதிக்கு கொல்கத்தாவில் பிறந்தவர். அங்கேயே வளர்ந்து படிப்பை முடித்து விளையாட்டு போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்றவர், 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று 200மீ ஓட்டம், 200 மீ தடை ஓட்டம் என இரண்டு பதக்கங்களை வென்றிருந்தார்.

ஆனால், இவர் இந்தியா சார்பில் பங்கேற்றிருக்கவில்லை. பிரிட்டனின் குழுவோடு ஒலிம்பிக்கிற்கு சென்றிருக்கிறார். ஆனால், பிரிட்டன் சார்பிலும் பங்கேற்கவில்லை. அவரை எந்த நாட்டை சேர்ந்தவர் என அடையாளப்படுத்துவதில் பிரச்னை எழுந்தது. சர்ச்சைக்குரிய இந்த இரண்டு வெள்ளி பதக்கங்களையும் இந்தியாவின் பட்டியலிலேயே இப்போது வரை வைத்திருக்கிறது ஒலிம்பிக் அமைப்பு.

ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் 1920 பெல்ஜியம் ஒலிம்பிக்கிலேயே அதிகாரப்பூர்வமாக இந்தியா தங்கள் கொடியை ஏந்தி முதல்முறையாக பங்கேற்றது. 5 வீரர்கள் கொண்ட குழு இந்தியாவிலிருந்து சென்றிருந்தது.
தயான் சந்த்
தயான் சந்த்

இந்தியா என்றால் ஹாக்கி, ஹாக்கி என்றால் இந்தியா என அடையாளப்படுத்தப்பட்ட காலம் உண்டு. ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி செய்த வரலாற்று சம்பவங்களே அந்த அடையாளப்படுத்தலுக்கு காரணமாக அமைந்தது.

இந்திய ஹாக்கி அணி மட்டும் 11 பதக்கங்களை வென்றிருக்கிறது. அதில் 8 தங்கப்பதக்கங்களும் அடக்கம்.

ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கி வைத்ததும் ஹாக்கி அணியே. 1928 ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்ஸில் தங்கப்பதக்கம் வென்றிருந்தது இந்திய அணி. இதில் மொத்தமாக 29 கோல்களை அடித்திருந்தது இந்தியா. தயான்சந்த் மட்டுமே 14 கோல்களை அடித்திருந்தார். 1932 லாஸ் ஏஞ்சலீஸ், 1936 பெர்லின் ஒலிம்பிக்ஸ்களிலும் தங்கப்பதக்கத்தை வென்று உலக அரங்கில் இந்தியாவின் பெயரை உரக்க ஒலித்தது. ஆனால், பெருமை முழுவதும் இந்தியாவிற்கு கிடைக்கவில்லை. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்ததால் அதிகப்படியான ஆங்கிலோ இந்தியர்கள் ஹாக்கி அணியில் இருந்தனர் என்கிற சர்ச்சையும் எழுந்தது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் 1948 லண்டன் ஒலிம்பிக்ஸில் மிரட்டியது இந்திய ஹாக்கி அணி.

இத்தனை ஆண்டுகளாக ஆங்கிலேய காலனி நாடாக பார்க்கப்பட்ட இந்தியா சுதந்திரம் பெற்று முதல் முறையாக மூவர்ண தேசியக்கொடிகோடு களமிறங்கிய ஒலிம்பிக்ஸ் இது. லண்டனில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கிரேட் பிரிட்டனை 4 - 0 என வீழ்த்தி பிரிட்டனின் கொடிக்கு மேல் இந்திய கொடியை பறக்கவிட்டு தங்கம் வென்றது.
உலக அரங்கில் சுதந்திர இந்தியாவிற்கு கிடைத்த முதல் அங்கீகாரம், கௌரவம், பெருமை எல்லாமே இதுதான்.
பல்பீர் சிங்
பல்பீர் சிங்

1952, 1956 ஒலிம்பிக்ஸ்களிலும் தங்கத்தை வென்று, இரண்டாவது ஹாட்ரிக் சாதனையை செய்தது. இதன்பிறகு 1964, 1980 ஒலிம்பிக்ஸ்களிலும் தங்கம் வென்று அசத்தியிருந்தது. மொத்தம் 8 தங்கங்கள், இடையில் இரண்டு வெண்கலம் ஒரு வெள்ளி என மொத்தம் 11 பதக்கங்கள். மற்ற போட்டிகளில் இந்தியா சொதப்பினாலும் ஹாக்கியில் இந்தியா ஒரு வெல்லமுடியாத பேரரசனாக இருந்தது.

தனிநபராக சுதந்திர இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் கசாபா தாதாசாகெப் ஜாதவ்.

1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக்ஸில் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்று கொடுத்தவர். இன்று மல்யுத்தத்தில் இந்தியா கோலோச்சுவதற்கான விதை இவரால் போடப்பட்டதே.

1952-க்குப் பிறகு இந்தியா சார்பில்  தனிநபர் ஒருவர் பதக்கம் வெல்ல கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலம் ஆனது. 1996-ல் லியாண்டர் பயஸே அந்த சாதனையை செய்திருந்தார். அட்லான்ட்டா ஒலிம்பிக்ஸில் டென்னிஸில் வெண்கலம் வென்று அசத்தியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1948 லிருந்து 1980 வரை இந்தியா ஹாக்கியில்  தொடர்ச்சியாக பதக்கத்தை வென்றிருந்தது. இடையில் ஒரு முறை மட்டுமே ஹாக்கி அணி ஏழாவது இடம் பிடித்து ஏமாற்றியிருக்கும். அந்த ஒரு ஒலிம்பிக்கில் மட்டும் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 0. ஆனால், 1980-களுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணி பலவீனமடைய தொடங்கியதையடுத்து பதக்க வேட்டை நிகழவில்லை.

லியாண்டர் பயஸ்
லியாண்டர் பயஸ்
1984, 1988, 1992 என தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்ஸ்களில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 0 என்றே இருந்தது. இதை மாற்றியது லியாண்டர் பயஸ். ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கமாக அமைந்தது பயஸின் வெண்கல பதக்கம்.

இதனை தொடர்ந்து 2000-ம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்கில் கர்ணம் மல்லேஸ்வரி பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார். ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பதக்கம் வென்ற முதல் பெண் என்கிற பெருமையையும் பெற்றார். 

2004 ஏதேன்ஸ் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கிச்சுடுதலில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெள்ளி வென்றார். இந்தியா சார்பில் தனிநபர் ஒருவர் வென்ற முதல் வெள்ளிப்பதக்கம் இது.

2008, 2012 இந்த இரண்டு ஒலிம்பிக்ஸும் இந்தியாவிற்கு மிகச்சிறப்பாக அமைந்தவை. 2008 ஒலிம்பிக்ஸில் துப்பாக்கிச்சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தார். குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங்கும் மல்யுத்தத்தில் சுஷில் குமாரும் வெண்கலம் வென்றிருந்தனர். மொத்தம் மூன்று பதக்கங்கள். 2012-ல் இதை அப்படியே இரட்டிப்பாக்கியது இந்தியா.

ககன் நரங், யோகேஷ்வர் தத், மேரி கோம், சாய்னா நேவால் என நான்கு பேர் வெண்கலமும், சுஷில் குமாரும் விஜய் குமாரும் வெள்ளியும் வென்றிருந்தனர். இந்தியா சார்பில் இரண்டு ஒலிம்பிக்ஸ்களில் பதக்கம் வென்ற ஒரே வீரர் என்கிற பெருமையை பெற்றார் சுஷில்குமார்.
சாய்னா நேவால்
சாய்னா நேவால்

ஒவ்வொரு முறையும் பதக்க எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டே சென்ற இந்தியா 2016-ல் இரண்டே பதக்கங்களோடு திருப்திப்பட்டுக் கொண்டது. பேட்மின்டனில் பி.வி.சிந்து வெள்ளியை வெல்ல, மல்யுத்தத்தில் சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றிருந்தார். ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை 28 பதக்கங்களை வென்றிருக்கிறது.

இதுவரை இல்லாத வகையில் இந்த முறை அதிகபட்சமாக 127 வீரர்களை ஒலிம்பிக்ஸின் உலக மேடைக்கு அனுப்பியிருக்கிறது இந்தியா. இந்த முறை எப்படியும் இரட்டை இலக்கத்தில் பதக்கத்தை வென்றுவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசத்தின் கனவை சுமந்து சென்றிருக்கும் ஒலிம்பியன்களுக்கு வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு