Published:Updated:

நேத்ரா குமணன் : முதல் பெண்... முதல் பதக்கம்... தடைகளை தாண்டி படகோட்டும் தமிழக வீராங்கனை!

Nethra Kumanan
Nethra Kumanan ( facebook.com/nethra.kumanan )

2020 உலகக்கோப்பை படகோட்டும் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்தார் நேத்ரா. இந்தியா சார்பில் படகோட்ட போட்டியில் பதக்கம் வென்றிருக்கும் ஒரே பெண் என்கிற பெருமையை பெற்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்லும் இந்திய அணிகளில் இந்த முறை பெண்களே அதிக கவனத்தை ஈர்த்திருக்கின்றனர். குறிப்பாக, தமிழக வீராங்கனைகள் சிலர் இப்போதே வரலாற்றில் தங்களுடைய பெயரை பதித்திருக்கிறார்கள். அதில், நேத்ரா குமணனும் ஒருவர். படகோட்டும் போட்டியில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றிருக்கும் முதல் பெண் என்கிற வரலாற்று சாதனையை செய்திருக்கிறார்.

23 வயதாகும் நேத்ரா குமணன் சென்னையை சேர்ந்தவர்.  கோடை விடுமுறைகளில் சிறுவர்களுக்கான  பயிற்சி முகாம்களில் கலந்துக்கொண்டு பல திறமைகளை வளர்த்தெடுத்திருக்கிறார். நடனம், இசை என ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் ஒவ்வொரு புதுவிதமான கலையை கற்றவர், ஒரு கோடைவிடுமுறையில் கற்றுக்கொண்ட படகோட்டுதலை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

பெற்றோர்கள்தான் இந்த கோடைவிடுமுறை முகாம்களில் நேத்ராவை சேர்த்துவிட்டார்கள் என்பதால் இயல்பிலேயே அவர்களுடைய ஆதரவும் நேத்ராவுக்கு இருந்தது. பெரும் பொருட்செலவுமிக்க விளையாட்டு என்றாலும் நேத்ராவுக்காக அவருடைய பெற்றோர் எதையும் செய்ய தயாராக இருந்தனர். படகோட்டும் போட்டிகளுக்கும் பயிற்சிகளுக்கும் அடிக்கடி வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்பதால் பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. பத்தாம் வகுப்பிற்கு பிறகு வீட்டிலிருந்தே படித்துக் கொண்டு படகோட்டுதலில் முழுக்கவனத்தையும் செலுத்தியவர், இப்போது பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார்.

Laser Radial Class event அதாவது ஒற்றை ஆளாக படகை இயக்கும் பிரிவில் தன்னுடைய திறமையை மெருகேற்றிக் கொண்டார். 2014 மற்றும் 2018 ஆசிய போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். இதில், 2018 ஆசிய போட்டியில் நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்து நான்காம் இடம் பிடித்தார். தோல்விகள் ஏமாற்றம் கொடுத்தாலும் சீக்கிரமே வெற்றி அவரை தேடி வந்தது.

2020 உலகக்கோப்பை படகோட்டும் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். இந்தியா சார்பில் படகோட்ட போட்டியில் பதக்கம் வென்றிருக்கும் ஒரே பெண் என்கிற பெருமையை பெற்றார்.

சமீபத்தில் ஓமனில் நடந்த ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் வென்று டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றிருக்கிறார். இந்தியா சார்பில் படகோட்டத்தில் ஒலிம்பிக்கிற்கு செல்லும் முதல் வீராங்கனை. படகோட்டத்தில் தகுதிச்சுற்றில் வென்று ஒலிம்பிக்கிற்கு செல்லும் முதல் இந்தியர் போன்ற பெருமைகளையும் பெற்றார்.
நேத்ரா குமணன்
நேத்ரா குமணன்
Credits - Nethra's Instagram

ஒரு குறிப்பிட்ட விளையாட்டில் முதல் பெண்ணாக சாதிப்பது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. தடைகளை தாண்டி டோக்கியோவில் நேத்ரா குமணன் செய்யப்போகும் பெர்ஃபாமென்ஸ் பல பெண்களின் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை உடையது. வென்று வாருங்கள் நேத்ரா!

அடுத்த கட்டுரைக்கு