Published:Updated:

நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற திக்திக் தருணம்... இறுதிப்போட்டியில் என்ன நடந்தது?

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா ( Martin Meissner )

தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் பதக்கம், அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு இந்தியாவுக்கான இரண்டாவது தனிநபர் தங்கப்பதக்கம் என ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் நீரஜ் சோப்ரா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவின் தடகள முகங்களாக அறியப்பட்ட மில்கா சிங், பி.டி.உஷா போன்றோர் 0.1 நொடியில் தவறவிட்ட ஒலிம்பிக்ஸ் பதக்கத்தை குறிவைத்து தூக்கி நூற்றாண்டு ஏக்கத்தை போக்கியிருக்கிறார் நீரஜ் சோப்ரா. பதக்கம் வென்றது மட்டுமல்ல அதை தங்கமாக வென்று சரித்திர சாதனைப் படைத்திருக்கிறார். இந்த பெருங்கனவை எப்படி சாத்தியப்படுத்தினார் நீரஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதற்கான நீரஜ் சோப்ராவின் பயணம் தொடங்கியது எப்படி?!

2017, 2018 இரண்டு ஆண்டுகளில் ஆசிய போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப், காமென்வெல்த் போட்டிகள் மூன்றிலுமே ஈட்டி எறிதலில் தங்கம் வென்றிருந்தார் நீரஜ் சோப்ரா. அப்போதே ஒலிம்பிக் பதக்க நம்பிக்கையாக உருவெடுத்துவிட்டார். இடையில் முழங்கை காயம் ஏற்பட்டு அவதிப்பட்ட போதும் டெக்னிக்கலாக சில மாற்றங்களை செய்து கொண்டு, புதிய ஈட்டியோடு புதிய நீரஜ் சோப்ராவாக களத்திற்கு வந்தார். கடந்த மார்ச் மாதத்தில் 88.07 மீட்டருக்கு ஈட்டியை வீசியிருந்தார். இதுதான் அவரின் கரியர் பெஸ்ட். இப்படிப்பட்ட ஃபார்மோடுதான் டோக்கியோவிற்குள் காலடி எடுத்து வைத்தார் நீரஜ் சோப்ரா.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா
Matthias Schrader

டோக்கியோ ஒலிம்பிக்கின் தகுதிச்சுற்றில் மொத்தம் 32 வீரர்கள் கலந்துக்கொண்டனர். ஒவ்வொருவருக்கும் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட 83.50 மீட்டரை தாண்டி வீசுகின்ற 12 பேர் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நீரஜ் சோப்ரா உள்ளே வந்தார். ஒரே ஒரு வாய்ப்பை மட்டுமே எடுத்துக்கொண்டார். அதிலேயே 85.64 மீட்டருக்கு வீசி அசரடித்துவிட்டார். ஒரே வீச்சோடு இறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெற்று ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார் நீரஜ்.
நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா
Martin Meissner

ஜெர்மனியை சேர்ந்த ஜோனஸ் வெட்டர் உலக சாம்பியன். இவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. 97 மீட்டருக்கு மேல் வீசி பயங்கரமான ரெக்கார்டையும் வைத்திருந்தார். ஆனால், அவரே தகுதிச்சுற்றில் மூன்றுவாய்ப்புகளையும் எடுத்துக் கொண்டுதான் தகுதிப்பெற்றார். அப்போதும் அவரால் நீரஜ் சோப்ராவை தாண்டியிருக்க முடியவில்லை. தகுதிச்சுற்றில் முதலிடத்தை பிடித்திருந்தார் நீரஜ் சோப்ரா.

இன்று இறுதிச்சுற்று தொடங்கியது. மொத்தம் 12 வீரர்கள். மொத்தம் 6 வாய்ப்புகள். ஆனால், 12 வீரர்களில் முதல் மூன்று முயற்சிகளில் 8 இடங்கள் பிடிக்கும் வீரர்களுக்கே இந்த ஆறு வாய்ப்புகளும் வழங்கப்படும். ஆறில் சிறந்த வீச்சு எதுவோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இங்கேயும் முதல் வாய்ப்பிலேயே அசால்ட்டாக 87 மீட்டரைத் தாண்டினார் நீரஜ் சோப்ரா.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா
Francisco Seco
87.03 மீட்டர் என முதல் வாய்ப்பை முடித்தவுடனேயே முதல் இடத்திற்கு முன்னேறிவிட்டார். மற்ற வீரர்களால் 87 யையே தாண்ட முடியவில்லை. இரண்டாவது வாய்ப்பில் 87.58 மீட்டருக்கு வீசி தன்னுடைய முதல் முயற்சியின் உச்சத்தைக் கடந்தார்.

இந்த ஈட்டி அவர் கையிலிருந்து பறந்து தரையிரங்கும் முன்பே நீரஜ் சோப்ரா கைகளை உயர்த்தி ஆராவாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார். வரலாறு படைத்துவிட்டோம் என்பதை அவர் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுமே அந்த நொடியில் உணர்ந்திருந்தது. இதன்பிறகான நான்கு வாய்ப்புகளிலுமே நீரஜ் எப்படி வீசினாலும் பரவாயில்லை என்ற சூழலே இருந்தது. ஒரு ஃபவுல் வாங்கினார். 80 மீட்டருக்கு கீழ் ஒரு முறை எறிந்தார். ஆனால், இது எதுவுமே இந்தியாவின் வரலாற்று வெற்றியை தடுக்க முடியவில்லை.

இந்த முறையும் ஜோனஸ் வெட்டர் 'புலி வருது' கதையாக ஏமாற்றியிருந்தார்.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா
Martin Meissner
நீரஜ் சோப்ராவின் ஈட்டி வைத்த குறி இந்தியாவின் நூற்றாண்டு பதக்க ஏக்கத்தை தகர்த்தெறிந்து வரலாற்று வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கிறது.

தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் பதக்கம், அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு இந்தியாவுக்கான இரண்டாவது தனிநபர் தங்கப்பதக்கம் என ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் நீரஜ் சோப்ரா.

இந்தியாவின் தங்கமகனுக்கு வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு