Published:Updated:

நீரஜ் சோப்ரா : உலகின் அடுத்த உசேன் போல்ட் இந்தியாவில் பிறந்திருக்கிறார்... இது வெறும் ஆரம்பம்தான்!

நீரஜ் சோப்ரா ( Martin Meissner )

முதன்முதலாக நீரஜ் சோப்ராவை டிவியில் பார்த்தபோது மகேந்திர சிங் தோனிதான் நினைவுக்கு வந்தார். அதேப்போல் நீளமான முடி, அதேப்போன்ற உடல் அமைப்பு, அதேபோன்று உணர்ச்சிகளைக் கணிக்க முடியாத முகம்.

நீரஜ் சோப்ரா : உலகின் அடுத்த உசேன் போல்ட் இந்தியாவில் பிறந்திருக்கிறார்... இது வெறும் ஆரம்பம்தான்!

முதன்முதலாக நீரஜ் சோப்ராவை டிவியில் பார்த்தபோது மகேந்திர சிங் தோனிதான் நினைவுக்கு வந்தார். அதேப்போல் நீளமான முடி, அதேப்போன்ற உடல் அமைப்பு, அதேபோன்று உணர்ச்சிகளைக் கணிக்க முடியாத முகம்.

Published:Updated:
நீரஜ் சோப்ரா ( Martin Meissner )

8758… இந்த எண்ணை காரின் பதிவு எண்ணாக வைத்துக்கொள்ளலாமா, இப்படி முடியும் ஒரு செல்போன் எண் வாங்கிக்கொள்ளலாமா, பைக்கின் எண்ணாக இது இருந்தால் எப்படி இருக்கும்... இப்படி என்னவெல்லாமோ தோன்றுகிறது. இந்த எண்ணை எப்படியாவது என்னோடு பதிவு செய்துகொள்ள வேண்டும் என மனம் துடிக்கிறது. நீரஜின் வெற்றியை எப்படிக் கொண்டாடுவது என மூளைக்குள் ஒரு யுத்தமே நடக்கிறது. இந்திய தடகள வரலாற்றின் தலையெழுத்தையே மாற்றியிருக்கும் இந்த எண்ணை என்னோடு எப்படி வைத்துக்கொள்ளலாம்?!

ஃப்ளையிங் சிங் என புகழப்பட்ட மில்கா சிங் ஒலிம்பிக்கில் ஓடியதை பாட புத்தகங்களில்தான் படித்திருப்போம். பிடி உஷா மயிரிழையில் பதக்கத்தை தவறவிட்ட காட்சிகளை நம்மில் சிலரின் கண்கள்தான் பார்த்திருக்கும். ஆனால், நம் காலத்தில் நம் கண்களுக்கு முன் தடகளத்தில் இந்தியா பதக்கம், அதுவும் தங்கம் வென்றிருக்கிறது என்பதை எப்படி கொண்டாடுவது?!

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா
Matthias Schrader

தடகள விளையாட்டில் நூறாண்டுக்கும் மேல் எத்தனையோ பேர் முயற்சித்தும் கிடைக்காத தங்கம் 23 வயது இளைஞனின் முதல் ஒலிம்பிக் முயற்சியில் கிடைத்திருக்கிறதே இது எப்படி?

டோக்கியோ ஒலிம்பிக்கில் மீராபாய் சானு, பிவி சிந்து, லவ்லினா போர்கோஹெய்ன் எனத்தொடர்ந்து பெண்கள் எல்லோரும் பதக்கங்களாக வென்று கொண்டிருக்க, ஆண்கள் தரப்பில் இருந்து முதல் சுற்றில் தோல்வி, காலிறுதியில் போராடித் தோல்வி என்கிற செய்திகள்தான் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.

இந்த சூழலில்தான் ஜாவ்லின் த்ரோ எனப்படும் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டி தொடங்கியது. இதுவரை இந்த விளையாட்டுகளில் எல்லாம் இந்தியர்களைப் பார்த்ததாக நினைவேயில்லை. நீரஜ் சோப்ரா எனும் இந்தியர் விளையாடுகிறார் என்கிற ஆர்வத்தில் பார்க்க ஆரம்பித்தால், முதல் முயற்சியிலேயே 85.64மீட்டர் தூரம் வீசி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்று அதிசயம், அற்புதம் நிகழ்த்தினார் நீரஜ். கடைசியாக 2021-ல் ரஜினிகாந்த் எதிர்பார்த்த அதிசயம், அற்புதம் நிகழ்ந்துவிட்டது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதன்முதலாக நீரஜ் சோப்ராவை டிவியில் பார்த்தபோது மகேந்திர சிங் தோனிதான் நினைவுக்கு வந்தார். அதேப்போல் நீளமான முடி, அதேப்போன்ற உடல் அமைப்பு, அதேபோன்று உணர்ச்சிகளைக் கணிக்க முடியாத முகம்.

நண்பர் ஒருவர் போனில் ‘’என்னயா நீரஜ் சோப்ரானு ஒருத்தன் பக்கத்து காம்ப்பவுண்டுக்குள்ளயே ஈட்டியை எறிஞ்சிட்டானாமே… தங்கம் கன்ஃபர்ம் போலயே’’ என்றார். முதல் முயற்சியிலேயே ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பதக்க நம்பிக்கையைக் கொடுத்துவிட்டார் நீரஜ். அவர் கண்களில் இருந்த அந்த தீர்க்கம் ‘இவன் பந்தயம் அடிப்பான்’ என சொல்லவைத்தது.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா
Matthias Schrader

நீரஜ் சோப்ராவின் கதையைப் படிக்க படிக்க உற்சாகமும், உத்வேகமும் கொள்ளும் மனது கூடவே அளவற்ற அன்பையும் இரத்த நாளங்களுக்குள் பரவவிடுகிறது. உருவ கேலியால் ஊருக்குள் பல அவமானங்களை சந்தித்திருக்கிறான் அந்த சிறுவன். உருவத்தை வைத்து, விதவிதமான பெயரில் அந்த சிறுவனின் நம்பிக்கையை சிதைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொருமுறையும் உற்சாகமாக நண்பர்களோடு வெளியே விளையாடப்போகும் சிறுவன் வீடு திரும்பும்போது அழுதுகொண்டே வந்திருக்கிறான். டீனேஜராக வளர்ந்தபிறகும் கேலியும், கிண்டலும் தொடர்ந்திருக்கிறது. நீரஜின் அழுகையைப் பொறுக்க முடியாமல் அவனை உடற்பயிற்சி கூடத்தில் சேர்த்திருக்கிறார்கள். முதலில் தனது போராட்டத்தை உடலோடு தொடங்கியிருக்கிறான்.

கேலி, கிண்டல்களில் இருந்து தப்பிக்க மைதானத்தின் பக்கம் வந்தவனுக்கு விளையாட்டு போதை தலைக்கேறியிருக்கிறது. புதிய லட்சியங்கள் கண்முன் விரிந்திருக்கிறது. வாள் போல ஈட்டியை கையில் ஏந்தியிருக்கிறான்.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா
Matthias Schrader

நீரஜுக்கு ஈட்டியை அதிக தூரம் வீசி சாதனைப்படைக்க வேண்டும் என்கிற கனவு இருந்திருக்கிறது. ஆனால், அந்த சாதனையை எப்படி நிகழ்த்துவது, அதற்கான வழிமுறை என்ன, செயல்திட்டம் என்ன எதுவும் தெரியாது!

எல்லோருக்குள்ளுமே வெற்றிபெற வேண்டும், சாதிக்கவேண்டும் என்கிற துடிப்பிருக்கும். உழைக்க மனம் தயாராக இருக்கும். அர்ப்பணிப்பும், ஒழுக்கமும் இருக்கும். ஆனால், அதை சரியான திசையில் கொண்டு போக, வழிநடத்த ஒரு மேய்ப்பன், ஒரு தகப்பன் வேண்டும். சாதிக்கத் தயாராக இருந்த நீரஜுக்கு பல மேய்ப்பர்கள் வழிகாட்டி இருக்கிறார்கள். இறுதி மேய்ப்பனாக ஜெர்மனியின் உவே ஹான் நீரஜை ஒலிம்பிக்கில் தங்கமே வெல்ல வைத்திருக்கிறார்.

‘’எவ்வளவு திறமையான ஈட்டி எறிதல் வீரராக இருந்தாலும் விளையாடும் இடத்தின் சூழலுக்கேற்ற ஈட்டி இல்லையென்றால் வெற்றிபெறமுடியாது. எல்லா ஈட்டிகளும் ஒன்றல்ல… காற்றின் தன்மையைப் பொறுத்து, சரியான ஈட்டியைத் தேர்ந்தெடுத்து விளையாடினால் மட்டுமே சாதனைகள் சாத்தியமாகும்" என்று நீரஜை வழிநடத்தியவர் ஜெர்மனி பயிற்சியாளர் உவே ஹான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டோக்கியோ ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் ஈட்டியை வீசிவிட்டு, மீண்டும் எழுந்து நின்றதுமே கைகளை உயர்த்தி வானத்தை நோக்கி ஒரு குத்துவிட்டார் நீரஜ். அவர் எறிந்த ஈட்டி மண்ணை அப்போது இன்னும் முத்தமிட்டிருக்கவில்லை. ஆனால், தன் கைகளில் இருந்து புறப்பட்ட அந்த ஈட்டி எவ்வளவு வீரியம் மிக்கது என்பது நீரஜுக்குத் தெரியும். அவர் வெற்றியை அந்த கணத்திலேயே முடிவு செய்துவிட்டார்.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா
Matthias Schrader

மொத்தம் 12 போட்டியாளர்கள்.... உலகின் நம்பர் ஒன் வீரராக ஜெர்மனியின் ஜோனாஸ் வெட்டர் அருகில் நிற்கிறார். ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்பாகவே ‘’நீரஜ் நல்ல வீரர்தான். எப்படியும் 85மீட்டருக்கு மேல் வீசுவார். ஆனால், 90-க்கு மேல் வீசும் முயற்சிகளில் நான் இருக்கிறேன். அவரால் என்னை வீழ்த்தமுடியாது’’ என்று சொல்லியிருந்தார் வெட்டர். இது ஏதோ தலைக்கனத்தில் சொன்னதல்ல. சரியாகத்தான் சொன்னார் வெட்டர். ஏனென்றால் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே ஜூன் வரை நடைபெற்ற பல போட்டிகளில் தொடர்ந்து 90 மீட்டர் தூரத்துக்கு மேல் அவர் ஈட்டியை வீசியிருந்தார். அது அந்த தைரியத்தில்தான் அப்படி சொல்லியிருந்தார் வெட்டர்.

ஆனால், வெட்டரை மட்டுமல்ல மற்ற போட்டியாளர்களையும் எதிர்கொள்ள தகுதிச்சுற்றில் விளையாடிய அதே உளவியல் விளையாட்டைத்தான் விளையாடினார் நீரஜ் சோப்ரா. முதல் ஈட்டியே பதக்கம் வெல்வதற்கான ஈட்டியாக இருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார். முதல் ஈட்டி 87.03மீட்டர் தூரத்தில் போய் விழ, இரண்டாவது ஈட்டி அதையும் தாண்டி 87.58 தூரம் போனது. இந்த தூரத்தைத் தாண்டிவிடமுடியுமா என்கிற ப்ரஷரை மற்றப் போட்டியாளர்களுக்கு கொடுத்துவிட்டார் நீரஜ். அங்கேயே அவர் வெற்றிபெற்றுவிட்டார். அதன்பிறகு ஒரு போட்டியாளரால்கூட நீரஜ் நிர்ணயித்த தூரத்தை நெருங்கமுடியவில்லை.

பெரிய உயரம் இல்லை, வலுவானத் தோள்கள் இல்லை… ஆனால், நீரஜ் எப்படி தங்கம் வாங்கினார் என்பதற்கு அவர் பயன்படுத்திய டெக்னிக்ஸைத்தான் காரணம் சொல்கிறார் ஜோனாஸ் வெட்டர். நீரஜின் டெக்னிக்கை ‘பிளாக் டெக்னிக்’ என்கிறார்கள். இந்த டெக்னிக் சரியாக வொர்க் அவுட் ஆகவில்லை என்றால் ஆபத்துதான் என பயிற்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால், உலகின் முன்னணி வீரர்களோடு மோத இந்த டெக்னிக்தான் சரி என ரிஸ்க் எடுக்கிறார் நீரஜ். அந்த ரிஸ்க்தான் அவரை வெற்றிபெறவைத்திருக்கிறது.

2008 பீஜிங் ஒலிம்பிக்கில் உசேன் போல்ட் 100மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தருணத்தைப்போலவே இருக்கிறது நீரஜ் சோப்ராவின் இந்த தங்கத் தருணம். 2008-ல் முதல்முறையாக போல்ட் 100மீட்டர், 200மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வெல்லும்போது அவருக்கு வயது 22. 2008 தொடங்கி 2016 வரை அவர்தான் 100, 200மீட்டர் ரேஸின் சாம்பியன். 2008, 2012, 2016 என மூன்று ஒலிம்பிக்கிலும் ஹாட்ரிக் பதக்கங்கள். போல்ட்டைப்போலவே இப்போது 23 வயதில் முதல் தங்கம் வென்றிருக்கும் நீரஜ் சோப்ரா 2024 பாரிஸ், 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கிலும் ஹாட்ரிக் தங்கங்கள் வென்று சாதிப்பார். சாதிக்கத் தேவையான பக்குவமும், பொறுமையும், அர்ப்பணிப்பும் அவர் ஆட்டத்தில் இருக்கிறது.


இவன் ஒன் டைம் வொண்டர் அல்ல... இது ஆரம்பம் மட்டுமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism