தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா... தடகள விளையாட்டில் தடம் பதித்து சாதனை! #LIVE UPDATES

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
120 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் தடகள விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா. அபினவ் பிந்த்ராவுக்கு அடுத்து ஒலிம்பிக்கில் இரண்டாம் தங்கம் வென்று சாதனைப்படைத்திருக்கிறார் நீரஜ். அபினவ் பிந்த்ரா துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்தார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்திருக்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கின் தகுதிச்சுற்றில் 86.65மீட்டர் தூரம் அவர் ஈட்டி பறந்திருந்தை. இறுதிச்சுற்றில் முதல் இரண்டு முயற்சிகளிலுமே 87மீட்டர் தூரத்தைத் தாண்டி சாதனைப்படைத்தார் நீரஜ். மற்ற எந்த வீரரும் 87மீட்டர் தூரத்தைத் தொடவில்லை!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நீரஜ் சோப்ராவின் கரியர் பெஸ்ட் 88.06 மீ. இது ஆசிய போட்டியில் அவர் செய்த சாதனை. மார்ச் மாதத்தில் இந்த சாதனையை புதிய ஈட்டியை வைத்து அவரே முறியடித்தார். க்ராண்ட் ப்ரீ போட்டி ஒன்றில் 88.07 மீட்டருக்கு வீசி மீண்டும் ஃபார்முக்கு வந்தவர் நீரஜ்.
முழங்கையில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டு ஒரு வருடம் ஓய்விலிருந்தவர் நீரஜ் சோப்ரா. காயத்திற்கு பிறகு அவருடைய வீச்சு திறன் முன்பு போல் இல்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இதனால் தன்னுடைய டெக்னிக்கில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்க முடிவு செய்தார். அத்தனை வருடமாக பயன்படுத்தி வந்த ஈட்டிக்கு பதிலாக வேறொரு புதிய மாடல் ஈட்டியை பயன்படுத்தத் தொடங்கினார். ஒலிம்பிக்கிற்கு சில மாதங்களே இருக்கும்போது இப்படியான மாற்றங்களையெல்லாம் யாருமே செய்யமாட்டார்கள். நீரஜ் துணிச்சலாக அப்படி செய்தார். இப்போது தங்கம் வென்றிருக்கிறார்.
கடைசி முயற்சியில் 84.24மீட்டர் தூரம் வீசிய நீரஜ் சோப்ரா இரண்டாம் முயற்சியில் 87.58 மீட்டர் தூரம் வீசியதால் தங்கம் வென்றார்.
20 வயதிலேயே ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டி, காமென்வெல்த் போட்டி என தொடர்ந்து மூன்று பெரிய தொடர்களில் தங்கத்தை வென்றிருக்கிறார் நீரஜ் சோப்ரா.
2017, 2018-ல் நீரஜ் சோப்ராவின் வளர்ச்சி உச்சத்தை எட்டியது. இவ்வளவு சிறிய வயதில் இப்படிப்பட்ட சாதனைகளை செய்ய முடியுமா என ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆச்சர்யப்பட்டது.
2016-ல் உலகளவிலான 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பினார் நீரஜ்.
நீரஜ் சோப்ரா வசிக்கும் பகுதியில் ஈட்டி எறிதல் ஃபேமஸ். ஜெய் வீர் எனும் ஈட்டி எறியும் வீரரை பார்த்தே ஆர்வமாகி ஈட்டி எறிதலில் ஆர்வம் காட்டியிருக்கிறார் நீரஜ் சோப்ரா.
23 வயதாகும் நீரஜ் சோப்ரா ஹரியானாவின் பானிபட்டில் பிறந்தவர். சிறு வயதிலேயே அதிக எடையோடு இருந்ததால் உடலை சீராக்க தொடர்ந்து தடகளப் போட்டிகளில் விளையாடியிருக்கிறார் நீரஜ்.
ஐந்தாவது முயற்சியொல் இந்தியாவின் நீரஜ் சோப்ரா மீண்டும் ஃபவுல் ஆனார். ஆனால், புள்ளிகள் அடிப்படையில் தொடர்ந்து முதலிடம்.
செக் குடியரசின் யாகுப் 86.67மீட்டர் தூரம் வீசி இரண்டாம் இடம்!
நான்காவது முயற்சியில் நீரஜ் சோப்ரா எல்லைக்கோட்டைத்தாண்டியதால் ஃபவுல். ஆனால், புள்ளிகளின் அடிப்படையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார் நீரஜ்.
நான்காவது முயற்சியில் பாகிஸ்தான் வீரர் நதீம் 82.91மீட்டர் தூரம் வீசி நான்காவது இடத்தில் இருக்கிறார்.
மூன்று முயற்சிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தொடர்ந்து முதலிடம் பிடித்து சாதனை. 87.58 மீட்டர் வீசியதால் நீரஜ் முதலிடத்தில் இருக்க, செக் குடியரசின் வெஸ்லி 85.44மீட்டர் தூரத்துடன் இரண்டாம் இடத்திலும், ஜெர்மனியின் வெபர் 85.30மீட்டர் தூரத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
ஈட்டி எறிதலில் உலகின் நம்பர் 1 வீரரான ஜெர்மனியின் வெட்டர் இரண்டாம், மூன்றாம் முயற்சிகளில் எல்லைக்கோட்டைத்தாண்டி வீசியதால் ஃபவுல் ஆனார். தற்போதைய நிலவரப்படி வெட்டர் எட்டாவது இடத்தில் இருக்கிறார்.
ஜெர்மனியின் ஜூலியன் வெபர் மூன்றாவது முயற்சியில் 79மீட்டர் தூரமே வீசினார். நீரஜ் சோப்ரா தொடர்ந்து முதலிடம்.
38 வயதான செக் குடியரசின் வெஸ்லி 85.44மீட்டர் தூரம் ஈட்டியை வீசி இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். இவர் முதல் இரண்டு முயற்சிகளில் 79.73 மற்றும் 80.30மீட்டர் தூரம் வீசியிருந்தார்.
மூன்றாவது முயற்சியில் நீரஜ் சோப்ரா 76.79மீட்டர் தூரம் வீசி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். அவரது மொத்த புள்ளிகள் 87.58. இன்னும் மூன்று முயற்சிகள் மீதம் இருக்கின்றன. நீரஜ் சோப்ராவுக்கு அடுத்து 85.30 புள்ளிகளுடன் ஜெர்மனியின் வெபர் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
இரண்டாம் சுற்று முடிந்தது. நீரஜ் சோப்ரா தொடர்ந்து முதலிடம்.
நூற்றாண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியர் ஒருவர் தடகளப் போட்டியில் முதலிடத்தில் இருப்பது இதுவே முதல்முறை. வரலாற்று சாதனையை நிகழ்த்திவருகிறார் நீரஜ் சோப்ரா.
நீரஜ் சோப்ராவுக்குப் போட்டியாக இருந்த ஜெர்மெனியின் ஜூலியன் வெபர் இரண்டாம் முயற்சியில் வெறும் 77.90 மீட்டர் தூரமே ஈட்டியை வீசினார்.
இரண்டாம் முயற்சியில் நீரஜ் சோப்ரா தொடர்ந்து முதலிடம் வகிக்க, ஐந்து வீரர்கள் இதுவரை வீசியிருக்கிறார்கள். நீரஜ் சோப்ராவைத் தவிர யாருமே இதுவரை 86மீட்டர் தூரத்தை தாண்டவில்லை.
இரண்டாம் அட்டம்ட்டிலும் நீரஜ் அட்டகாசம். 87.58மீட்டர் தூரம் ஈட்டியை வீசி தொடர்ந்து நீரஜ் சோப்ரா முதலிடம்!
நீரஜ் சோப்ராவை அடுத்து ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 85.30மீட்டர் தூரம் வீசி இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
இதுவரை 9 வீரர்கள் ஈட்டியை வீசியிருக்கும் நிலையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார் நீரஜ் சோப்ரா. பாகிஸ்தான் வீரர் 82.40மீட்டர் தூரம் வீசி நான்காவது இடம் பிடித்திருக்கிறார்.
முதல் வீரராக ஈட்டியை வீசிய நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 87.03 மீட்டர் தூரம் வீசி முதல் இடத்தில் இருக்கிறார்!